சோனியாவிடம் வரம் கேட்கும் கலைஞர்
தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தி, அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாக்குமாறு கோரி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் நடத்தி தமிழ் உணர்வாளர்களின் மனக்கொதிப்பை எதிரொலிக்கச்செய, மறுபுறம் தி.மு.க.பிரமாண்ட பேரணி நடத்தி போர்நிறுத்தத்துக்கு மத்திய அரசை மீண்டும் மீண்டும் வலியுறுத்த; மாணவர் இயக்கங்களோ, "அரசியல்வாதிகள் வேண்டாம்.
ஈழத் தமிழர்களை பாதுகாக்க நாங்கள் போராடுவோம்' என்று குரல் எழுப்பி, லண்டனில் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு இரவு பகல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, தமிழ் நாட்டில் பாராளுமன்றத்துக்குள் நுழைய தமிழ் அரசியல்வாதிகள் கூடுவிட்டு கூடுபாந்து போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறி கொதிப்படைகின்றார்கள். வழக்கறிஞர்களும் மீண்டும் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்!
இத்தனை நடந்தும் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட பேரணிக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதி,"அன்னை சோனியாவே நீ இந்திராவாக மாறு! போர் நிறுத்தம் கோரி இலங்கை நோக்கி சுட்டுவிரல் காட்டு'என்று அபயக்குரல் எழுப்பியும் இதனை எழுதிக்கொண்டிருக்கும்வரை சோனியா காந்தி, மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோருக்கு அவசரத் தந்திகள் அனுப்பி எல்லாமே புஸ்வாணமாகி மத்திய அரசின் மனம் இளகவில்லை! உலகத் தமிழரின் கண்ணீரில் கல்லும் கரைந்துவிடும் நிலையில், காங்கிரஸின் மனம் கருங்கல்லாகவே நீடிப்பதாக தமிழுணர்வாளர்கள் வாவிட்டுக் கூறுகின்றனர்.
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளரும், விமர்சகர் ஆர்வலருமான பா.செயப்பிரகாசம், தமிழக முதல்வரின் அபயக்குரல் குறித்து "தினக்குரலுக்கு' தெரிவிக்கையில், "யுத்தத்துக்கு ஆள் பலம் ஆயுதபலம் அளித்து போரை முன்னின்று நடத்துவதே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதானே. போரை நிறுத்து என்று இவர்களைத்தான் முதலில் கேட்கவேண்டும்' என்று சூளுரைத்தார்.
ஈழத் தமிழர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தாமல் தமிழ்நாட்டில் வாக்காளர்களை வேட்பாளர்கள் எதிர்கொள்ள முடியாத இன்றைய சூழலில், கடந்தவாரம் திருச்சியில் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற தமிழ் ஆர்வலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது தேர்தல் வாக்களிப்பு கருத்தை தெளிவாக வெளியிட்டனர். தமிழினத் துரோகிகளை தமிழ் மண்ணில் வீழ்த்த வேண்டும் என்றும் உலகத் தமிழர்களின் கோரிக்கையைப் புறக்கணித்து இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள அரசுக்கு எல்லா வழியிலும் உதவும் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்றும் எல்லோரும் குரல் எழுப்பினார்கள். கூட்டமுடிவில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் வேட்பாளர்களை தோற்கடிப்பது என்றும் தமிழ் கூட்டமைப்புகள் சார்பில் வீடு வீடாகச் சென்று தமிழ்நாடு முழுவதும் விளக்கப்பிரசுரங்களுடன் பிரசாரம் என்றும் தீர்மானம் கூறியது. இக்கூட்டத்தை ஆரம்பித்துவைத்த தமிழறிஞர் இறைகுருவனார், இயக்குநர் சீமானை தாம் சிறையில் சந்தித்ததாகவும் தமிழ்நாட்டில் போட்டியிடும் பதினாறு காங்கிரஸ் வேட்பாளர்களையும் தமிழ் மண்ணில் தோற்கடிக்க வேண்டும் என்று ஆவேசமாகக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து,இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஆதரவில் கடந்த புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக் கானவர்கள் கலந்துகொண்டனர். டாக்டர் ராமதாஸ் தனதுரையில், போரை நிறுத்து என்று மத்திய அரசை நிர்ப்பந்திக்க முடியாத கருணாநிதி தனது இயலாமையை வெளிப்படையாக அறிவித்து உலகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, என்னால் கடிதம்தான் எழுதமுடியும், தந்திதான் அனுப்பமுடியும், வேறு எதுவும் என்னால் சாதிக்க முடியாது என்று உண்மையைக் கூறட்டும். இலங்கைத் தமிழர்களுக்கான எங்களது போராட்டம் தொடரும். தேர்தல் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான் என்று கூறினார். வைகோ பேசுகையில் ""எங்கோ இருக்கிற ஹிலாரி பேசுகின்றார். சோனியா எங்கே ஈழத் தமிழர் பற்றி வாதிறந்திருக்கின்றார்? சிங்கள அதிபர் ராஜபக்ஷவுக்கு எழுதவேண்டிய கடிதத்தை முதலமைச்சருக்கு எழுதியிருக்கிறார். தமிழக மக்களின் மனம் எரிமலையாகிறது. தலைவர் பிரபாகரன்மீது சிறு துரும்பு விழுந்தால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு ஓடும். இலங்கைக்கு இந்தியா ஆயுதமும் இராணுவமும் கொடுத்து யுத்தத்தையே முன்நின்று நடத்தும் நிலையில், தொப்புள்கொடி உறவான இங்குள்ள தமிழ் இளைஞர்கள் நாளை கடல்தாண்டி சென்றால் என்ன தவறு? அங்கு சென்று ஆயுதம் ஏந்தினால் என்ன தவறு? அந்த நிலை உருவானால் இந்த வைகோ முதல் ஆளாக நிற்பான்' என்று கர்ஜித்தார். பாரதீய ஜனதாகட்சி தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர், ""தமிழக அரசின் போராட்டங்கள் விளம்பரத்துக்கு பயன்படுமே தவிர, செத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றாது' என்றார்.
அடுத்தநாள் வியாழக்கிழமை தி.மு.க.சார்பில் பிரமாண்டமான பேரணி சென்னையை அதிர வைத்தது. பேரணியைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதி பேசுகையில்,""போரை நிறுத்து என்று முழக்கமிட்டு பேரணியாக வந்திருக்கும் நீங்கள், ஒரு வழிசொல் என்று கேட்கிறீர்கள். எவ்வழியைச்சொல்வேன் என்று புரியாமல் புலம்பித் தவிக்கின்றேன். போரை நிறுத்து என்று உலக நாடுகள் கேட்கின்றன. ஐ.நா.வும் அடுத்தடுத்து அறிவுறுத்துகிறது. இந்தியாவும் கேட்கிறது. ஆனாலும் இலங்கையைப் பார்த்து போரை நிறுத்து என்று இந்திரா காந்தியின் அன்றைய குரலாக சோனியாவின் குரல் இருக்கவேண்டும். என்னைவிட இளையவராக இருக்கும் சோனியாவை ஒரு அன்னையாக நினைத்து ""தாயே இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுங்கள்' என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று உணர்ச்சி ததும்பினார்.
இந்தச் சூழலில் மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டம் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த இருநூறுக்கும் அதிகமான கல்லூரி மாணவர்களை வரவேற்க எழும்பூர் ரயில் நிலையம் சென்ற வைகோவை ""திரும்பிப் போ... அ.தி.மு.க.விட்டு வெளியே வா... தேர்தலைப் புறக்கணி.. திருமாவும் வேண்டாம் ராமதாஸும் வேண்டாம்... அரசியல் வாதிகளே வேண்டாம். இலங்கைத் தமிழரைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்...' என்று கோஷமிட்டனர். அவர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் வைகோவும் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
நீதிமன்றங்களைப் புறக்கணித்து மன்மோகன் சிங், சோனியா காந்தி, கருணாநிதி ஆகியோரின் உருவப் படங்களை தீயிட்டுக் கொளுத்திய தமிழ்நாடு வழக்கறிஞர்கள் முன்னணியினர், ""இலங்கையில் போரை நிறுத்து! இந்திய இராணுவத்தினரை வாபஸ் பெறு!' என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் வழக்கறிஞர்கள் சிலர் இரவோடு இரவாக சென்னையில் கைதுசெயப்பட்ட நிலையில் பொலிஸ் வழக்கறிஞர்கள் மோதல் மீண்டும் தலைதூக்குமா என்று அச்சம் நிலவுகிறது.
பதினாறு காங்கிரஸ் அபேட்சகர்களையும் தோற்கடிக்க தமிழ் அமைப்புகள் களம் இறங்கியுள்ள நிலையில் கலைஞர் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார். ""மாற்றுக் கட்சியினர் ஈழத் தமிழர்கள் குறித்து உணர்ச்சிகரமாகப் பேசி திசை திருப்புவார்கள். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. கூட்டணி எடுத்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் விளக்கி பேசவேண்டும். இதில் அவசரம், ஆத்திரம், தனிநபர் அர்ச்சனை கூடாது' என்று கலைஞர் உத்தரவிட்டுள்ளார். எங்களுக்கும் பொறுப்பு உண்டு என்று கூறி, ஈழத்தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி இவ்வாரம் முதல் எல்லாக் கட்சியினரும் பிரசாரக் களத்தில் குதிக்கும் நிலையில், இதற்கு முகம் கொடுக்கத் தான் தமிழ்நாடு தடுமாறுகிறது!
தினக்குரல்
0 விமர்சனங்கள்:
Post a Comment