விடுதலைப் புலிகளின் போர்நிறுத்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது
சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஒருதலைப்பட்ச போர்நிறுத்தமொன்றை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். எனினும, விடுதலைப் புலிகளின் இந்த ஒருதலைப்பட்ச அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும் இலங்கை அரசாங்கம்,
விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. “மிகமோசமாக ஏற்பட்டிருக்கும் மனிதநேயப் பிரச்சினைகளை முகம்கொடுப்பதற்கு ஏதுவாக, ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், ஜீ-8 நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை ஏற்று ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவிக்கிறோம்” என விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
இராணுவத்தினர் தொடர்ச்சியாக வன்னியில் முன்னெடுத்துவரும் படைநடவடிக்கைகளால் பொதுமக்கள் என்றுமில்லாதளவு துன்பங்களை அனுபவித்துவருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ரொய்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், விடுதலைப் புலிகளின் இந்த ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.“இது நகைப்பிற்கிடமாகவுள்ளது. அவர்கள் எம்முடன் மோதவில்லை. எம்மைவிட்டு ஓடுகிறார்கள். போர்நிறுத்தமொன்றுக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை. அவர்கள் சரணடைய வேண்டும். அவளவுதான்” என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ரொய்டர்ஷ் செய்திச் சேவைக்குத் தொலைபேசிமூலம் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் மோதல்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைய வேண்டுமெனவும்; ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளடங்கலாக இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே போர்நிறுத்தத்துக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment