பாரிய மனிதாபிமான நெருக்கடி! உடன் உதவ அனைவரிடமும் வேண்டுகோள்
வன்னி பாதுகாப்பு வலயங்களிலிருந்து வெளியேறி வந்திருக்கும் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பராமரித்து, அவர்களது உடனடித் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கமும், உதவி அமைப்புக்களும் திண்டாடி வருகின்றன.
இவர்கள் அனைவரும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, புளியங்குளம், ஓமந்தைப் பகுதிகளிலுள்ள தற்காலிக முகாம்களில் மிகவும் நெருக்கமாகத் தங்கவைக்கப்பட்டிருப்பதாக உதவி அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
"மிகக் குறுகிய காலத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வந்துள்ளனர். இந்தளவு தொகையான மக்களுக்கு உதவ, அரசாங்கமும் உதவி அமைப்புக்களும் மிகவும் சிரமப்படுகின்றன'' என்று, இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப்பொருள் சேகரிப்பை ஒருங்கிணைக்கும் அமைச்சர் டலஸ் அழகப்பெருமான தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு வேண்டிய உதவிப்பொருள்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர், முக்கியமாக போத்தலில் அடைக்கப்பட்ட நீர், உணவு, உடைகள், மருந்துப்பொருள்கள் என்பன அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
"குடிநீர், உடனடித் தயாரிப்பு உணவு வகைகள், மருந்துகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன'' என்று அமைச்சர் அழகப்பெருமா தெரிவித்தார்.
இதேவேளை, இந்த மக்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கும் பகுதிகளுக்கு அருகாமையிலிருக்கும் வைத்தியசாலைகளுக்குத் தேவையானளவு வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
"இதுவரையில் 300 வைத்தியர்கள், 200 பயிற்சி வைத்தியர்கள், 550 தாதியர் மற்றும் இரண்டு நடமாடும் மருத்துவப் பிரிவுகளை அனுப்பிவைத்துள்ளோம். எனினும், இன்னும் எமக்கு அதிகளவு மருத்துவர்கள், மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகின்றன'' என்றார் அவர்.
எதிர்வரும் நாட்களில் மேலும் பெருந்தொகையான மக்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்னும் அதிகமான உதவிகள் தேவைப்படுவதாக இந்த அமைச்சர்கள் தெரிவித்தனர்.
கடந்த பல மாதங்களாக படைக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்த சுமார் 50,000 பேரை வவுனியாவில் முகாம்களில் தங்கவைத்துப் பராமரிக்கவே அரசாங்கமும், உதவி அமைப்புக்களும் பெரும் சிரமப்பட்டு வந்தன. இந்த நிலையில், திடீரென வந்திருக்கும் இந்த ஒரு இலட்சம் மக்களுக்கும் வேண்டிய உதவிகளைச் செய்ய முடியாமல் திண்டாடி வருவதாக வன்னியிலுள்ள உதவி அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
உதவிப் பணிகள் உரிய முறையில் ஒருங்கிணைக்கப்படாத காரணத்தினால் மக்களுக்கு வேண்டிய உதவிகள் உரிய முறையில் சென்றடைவதில் பல சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத தொண்டர் அமைப்புப் பிரதிநிதியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
"இவர்களுடைய தேவை மிகப்பெரியது. அவற்றை எம்மால் நிறைவுசெய்துவிட முடியாது. சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களே கையை விரிக்கும் நிலையில் உள்ளன'' என்று அந்தப் பிரதிநிதி மேலும் எம்மிடம் தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள பல்வேறு உதவி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இரவு பகல் பாராது தொடர்ந்து இந்த மக்களுக்கு உதவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளபோதும், இந்த மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையே காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment