இலங்கையின் வடக்கே கடும் தாக்குதல்:378 பேர் பலி, 1122 பேர் காயம்
இலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் சனிக்கிழமை இரவும், இன்று ஞாயிற்றுகிழமை பிற்பகல் வரை இடம் பெற்ற கடும் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதலில் 378 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் அரச மருத்துவர் தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் 1122 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கி வரும் தற்காலிக மருத்துவமனைக்கு வந்துள்ள 378 உடல்களில், 106 உடல்கள் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுடையது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு வந்தவர்கள் மேலும் பல சடலங்கள் வீதிகளில் இருப்பதாக தம்மிடம் கூறியதாகவும் அந்த அரச மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
தாக்குதலில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அரச மருத்துவர் கூறுகிறார்.
அப்பகுதியில் ஷெல் தாக்குதல்கள் ஏதும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை அரசின் இராணுவ விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது விடுதலைப் புலிகள் ஒரு பிரச்சாரமே என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால் தங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து எந்த விதமான அழுத்தங்களையும் சந்திக்கவில்லை என்று அந்த அரச மருத்துவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
போர் நடக்கும் பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால் தகவல்களை சுயாதீனமான வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment