நேரத்தை வீணடித்த பிரித்தானிய, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள்: கோதபாய
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் தமது நேரத்தை வீணடித்திருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிரசாரங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டுவரும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட், இலங்கைக்கு வருகை தந்தது அவரின் நேரத்தை வீணடிக்கும் செயற்பாடு என டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கோதபாய ராஜபக்ஷ கூறினார்.
சர்வதேச சமூகம் இணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துவருவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், பிரித்தானிய, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வந்து நேரத்தை வீணடித்துள்ளார்கள் எனக் கூறினார்.
போர்நிறுத்தத்தை அமுல்படுத்தி, பொதுமக்கள் வெளியேற்றப்படவேண்டுமென மிலிபான்ட் தன்னுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியதாக கோதபாய ராஜபக்ஷ தனது செவ்வியில் குறிப்பிட்டார்.
“எனினும், அவரின் செயற்பாடுகளையோ அல்லது அவரின் நடைமுறையாயோ நான் கணக்கெடுக்கவில்லை. தற்போதைய நிலைமையில் ஏன் அவர் தலையிடவேண்டும் என்பதே எனது கேள்வி. அதனைத்தான் நான் அவரிடம் கூறினேன். ஜனாதிபதி செய்வதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் சொல்வதைக் கோட்கவேண்டியதேவை இல்லை” என்றார் அவர்.
பிரித்தானியாவும், ஏனைய சர்வதேச நாடுகளும் இலங்கை விடயத்தில் தேவையின்றித் தலையிடுவதுடன், நாட்டுக்குத் தேவையின்றி விஜயங்களை மேற்கொள்வதாகக் கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பல்வேறு அரசியல் தலைவர்களையும், அப்பாவிப் பொதுமக்களையும் கொலைசெய்யும்போது மிலிபான்ட் உட்பட சர்வதேசத் தலைவர்கள் எங்கிருந்தார்கள் என கோதபாய ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment