தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை மீட்பதே அடுத்தகட்ட மனிதாபிமான நடவடிக்கை
புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியினால் இன்று வரை சுமார் 1,30,000 தமிழ் மக்களை மீட்டெடுத்திருந்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க முடியாதுள்ளது என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் இறுதியாக கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-
பாதுகாப்பு வலயத்திலிருக்கும் அனைத்து மக்களையும் மீட்டெடுத்து புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதுடன், வெகு விரைவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க்களையும் மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. தயா மாஸ்டர் போன்று, ஜோர்ஜ் மாஸ்டர் போன்று புலிகளின் மிலேச்சத்தனத்தை வெளி உலகுக்கு உணர்த்தும் குழுவினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்கள் மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.
புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்தபடி அவர்களின் மிரட்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகி இருந்த அந்த மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் எவருமே புலிகளிடம் கூறவில்லை. அவர்களுக்கு கூறமுடியாது என்பதை நாம் அறிவோம். புலிகளின் ஆயுதங்களுக்கு பயந்திருந்ததுதான் இதற்குக் காரணம். அப்படி கூறியிருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதும் எமக்குத் தெரியும்.
பிரபாகரனுக்கு இனிமேலும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அவரது கோழைத்தனமான செயல்களுக்கு இனிமேல் இடமில்லை. சம்பந்தன் எம்.பி. க்கள் போன்றோர் அரசியல் தீர்வொன்றுக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள்தான். நாமும் அரசியல் தீர்வையே விரும்புகிறோம். எனினும் பிரபாகரன் விரும்பும் அரசியல் தீர்வை வழங்க முடியாது. பிரபாகரன் ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க விடமாட்டார். பிரபாகரனை ஒழித்த பின்னர் எமது நாட்டுக்கேயுரிய அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றார்.
ஜோசப் மைக்கல் பெரேரா (எதிர்க்கட்சி பிரதம கொறடா)
முகாம்களில் உள்ள மக்கள் எமது சகோதர மக்கள். எனவே, அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாம் கலந்துரையாட வேண்டும். வெளிநாடுகளில் பல்வேறு விதமாகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எமது பிரச்சினையில் அவர்கள் ஏன் தலையிடுகிறார்கள். அவர்கள் புலிகள் இயக்கம் பற்றியோ, புலிகளின் தலைவர் பற்றியோ பேசவில்லை. முகாம்களிலுள்ள மக்களைப் பற்றியே பேசுகிறார்கள்.
அவர்கள் இங்கு அரசாங்கத்தைப் பாராட்டிவிட்டு, சொந்த நாட்டுக்குச் சென்றதும் வேறு விதமாகப் பேசுகிறார்கள். இதற்கு நாம் பதிலளிக்க வேண்டும். வெளியேறிவந்து முகாம்களில் உள்ளவர்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இராணுவத்திற்குப் பொறுப்பளிக்கக் கூடாது. அந்த மக்களை சிவில் நிர்வாகத்திற்குள் உள்வாங்க வேண்டும். இராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும்.
எல்லாவல மேதானந்த தேரர் (ஜா.ஹெ.உ) எம்.பி
வெசாக் தினங்களில் அன்னதானம் வழங்குவது மக்களுக்கு உண்பதற்கு இல்லை என்பதற்காகவல்ல. அது பௌத்த கலாசாரப் பண்பு. அதுபோலத்தான் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கும் உதவிபுரிந்து வருகின்றோம்.
இன்று புலிகளைவிட சர்வதேச நாடுகள் கொதித்துப் போயுள்ளன. புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நாடுகளிலும், புலிகளின் செயற்பாடுகள் தாராளமாக நடைபெறுகின்றன. பிரித்தானியா பயங்கரவாதத்திற்கு விருப்பம் இல்லை. ஆனால், இலங்கையில் பயங்கரவாதத்தை விரும்புகின்றது. பிரபாகரனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எம்மிடம் கேட்கிறார்கள்.
இரா. சம்பந்தன் (த.தே.கூ) எம்.பி
புலிகளுக்கு எதிரான நடவடிக்கையையே அராசங்கம் முன்னெடுத்திருப்பதாக இங்கு உரையாற்றிய பிரதமரும், பௌத்த தேரரும் தெரிவித்தார்கள். இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பொதுமக்களே. நான் புலிகளைப் பற்றிப் பேசவில்லை. அவர்கள் இங்கும் பல வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட இயக்கம். நான் பொதுமக்களைப் பற்றியே பேசுகிறேன். பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடரக்கூடாது. இலங்கை வரலாற்றிலும், இவ்வாறான பிரச்சினையுள்ள எந்தவொரு நாட்டிலும் சிவிலியன்கள் இந்தளவில் பாதிக்கப்படவில்லை. மோதல் பகுதிகளிலிருந்து வருபவர்கள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். யார் வந்தார்கள், எங்கிருக்கிறார்கள் என்ற பதிவு எதுவும் கிடையாது.
விமல் வீரவங்ச ஜே.என்.பி பாராளுமன்ற உறுப்பினர்
பிரபாகரன் என்ற நபரின் முடிவை உறுதி செய்யும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புதுவருடத்தை முன்னிட்டு இரண்டு தினங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலிகளின் பகுதிக்குள்ளிருந்து எவரும் வரவில்லை. இரண்டு தினங்கள் போர் நிறுத்தம் வழங்கப்பட்டும் மக்கள் வரவில்லையானால் ஏழு தினங்கள் வழங்கினாலும் வரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் கொல்லப்படுவதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். உண்மையில் மக்கள் மீது இருக்கும் அன்பில், அக்கறையில் அல்ல. அங்கு சிக்குண்டுள்ள புலித்தலைமையை பாதுகாப்பதற்காகவே பேசுகிறார்கள். பாதுகாப்பு வலயப் பகுதியில் பிரபாகரனுடன் பின்லாடன் மறைந்திருக்கிறார் என்ற செய்தி அமெரிக்காவுக்கு கிடைத்தால் அங்கு பொதுமக்கள் இருக்கிறார்கள் என்று பாராமல் விமானத் தாக்குதல் நடத்தும். தாக்குதல் நடத்திய பின்னரே எமக்கு அறிவிப்பார்கள்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான்கள் மறைந்திருக்கிறார்கள் என்று கூறி அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்தியது. திருமண வீட்டுக்கு வந்தவர்கள் என்று கூட பாராமல் இறந்தார்கள். தாக்குதல் நடத்திய பின்னர்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவித்தது.
ஆனால் இலங்கையராகிய நாம் அப்படியல்ல. மக்கள் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டுதான் செயற்படுகிறோம். மக்களுடன் மக்களாக, மக்களை கேடயமாக பயன்படுத்தி மறைந்திருக்கும் புலித் தலைமையை தேடி எமது படையினரும் ஊடுருவி செல்கிறார்கள். இந்த நிலையில் கனரக ஆயுதங்களாலும், விமானத் தாக்குதல்களையும் நடத்துவது எப்படி?
அமைச்சர் திஸ்ஸ கரலியத்த எம்.பி
மக்கள் இங்கு துன்பப்படுகிறார்கள் அவர்கள் வசதிகள் இன்றி தவிக்கிறார்கள் என கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து குரல் கொடுக்கும் தமிழர்கள் ஒரு போதும் இலங்கைக்கு வந்து குடியேறப் போவதில்லை. புலிகளினால் வழங்கப்படும் பணத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டு முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள். காஸா, வியட்நாம் போன்ற நாடுகளில் தாக்குதல் நடத்தி படுகொலை பாதகங்களை செய்தவர்கள் இன்று இலங்கையில் படுகொலை நடைபெறுவதாக வேதம் ஒதுகிறார்கள், புலிகளுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள்.
செய்மதியினூடாக பாதுகாப்பு வலயப்பகுதியில் கொடுமைகள் நடப்பதை பார்த்ததாக கூறுகிறார்கள் நாங்களும் பார்த்தோம். பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வர எத்தணிக்கும் மக்களை புலிகள் எவ்வாறு தடுக்கிறார்கள், எப்படி சுட்டுக் கொல்கிறார்கள் என்பதையும் நாமும் பார்த்தோம்.
அமைச்சர் ரோஹித அபே குணவர்தன எம். பி
புலிகளின் பிடிக்குள்ளிருந்து தப்பி வந்த அரசின் பாதுகாப்பின் கீழ் வவுனியா செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களை நேரடியாக சென்று சந்திக்க வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இரா. சம்பந்தன் எம். பி. மட்டுமல்ல உங்களது அனைத்து எம். பிக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம் எமது சகோதர மக்களை நீங்களும் சென்று பாருங்கள்.
தனது கணவனோடு வந்த நிறைமாதக் கர்ப்பிணியை கணவன் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்ற கொடுமையை செய்தவர்கள் புலிகள் என்பதை நீங்கள் அறிவீர்களா? பிரபாகரனின் ஆணைக்கு அடிபணிந்து இருந்த காலம் மலையேறிவிட்டது. மக்கள் வெளிப்படையாக புலிகளுக்கு எதிராக பேசுகிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் புலித் தலைமையின் ஆணைக்கு அடிபணிந்து இருக்க வேண்டிய நிலை இருந்திருக்கலாம். ஏனெனில் பிரபாகரனின் ஆணைக்கு அடிபணியாதவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இன்றைய அவசர காலச் சட்ட விவாதத்தில் சுமார் 1 ண மணி நேரம் பேசியதன் ஊடாக மக்களை அரசும், படையினரும் துன்புறுத்துகிறார்கள் என சர்வதேசத்துக்கு காட்டமுற்பட்டார். அடுத்த அவசர காலச் சட்டத்தில் அவருக்கு பேசுவதற்கு என்ன இருக்கப் போகிறதோ தெரியவில்லை.
இராமலிங்கம் சந்திரசேகரன் (ஜே.வி.பி) எம்.பி
கடந்த 30 வருடங்களாக யுத்தம் என்ற கொடிய தீயினால் வெந்து நொந்த மக்களுக்காக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? மக்களின் வெளிக் காயங்களுக்கு மருந்துபோடலாம். ஆனால், அவர்களின் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. மக்கள் மத்தியில் இனப்பிரிவினைக் கறைகளைத் துடைத்தெறிந்தது மக்கள் விடுதலை முன்னணிதான். நலன்புரி முகாம்களில் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரங்களைத் துடைக்க எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்த வரலாறுகளையும், கலாசாரப் பண்புகளையும் கொண்ட தமிழ் மக்கள் இன்று அனைத்தையும் இழந்தவர்களாய் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளார்கள். இவர்களது துன்பங்களைக் களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”
அமைச்சர் எஸ். எம். சந்திரசேன
“புலிகளின் தலைவர் பிரபாகரன் எமக்குச் செய்த அழிவைவிட, தமது சொந்த இனத்துக்குச் செய்திருக்கிறார். சாதாரண மக்கள் மத்தியில் எந்தவிதமான பேதமும் கிடையாது. அரசியல்வாதிகளிடம் தான் பாகுபாடு உள்ளது. இன்று வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக சகலரும் உதவி செய்கிறார்கள். கால்களை இழந்த ஓர் இராணுவ வீரரின் குடும்பத்திலிருந்து கூட உதவி செய்கிறார்கள்.
பிரதியமைச்சர் இராதா கிருஷ்ணன்
மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட எங்களுக்கு கொழும்பு மாவட்டத்தில் 3,600 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட எங்களுக்கு 8,120 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக கம்பஹாவில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளருக்கும் மேலாக அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விடயமாகும். கம்பஹா மாவட்ட தமிழ் மக்களுக்கும், கொழும்பு மாவட்டத்தில் எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்க மறந்து போனவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஐ.தே.கட்சி தமிழ் மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள் போல் ஒருபுறம் பேசிக் கொண்டு மறுபுறம் அவர்களது பிரச்சினைகளுக்கு மாறுபட்ட விதத்தில் இரட்டைக் குணப் போக்குகளை காலம் காலமாக மேற்கொண்டு வருவது நாம் அறிந்த விடயமாகும்.
மலையக மக்களின் வாக்குரிமை தொடர்பான விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே. ஆர். ஜெயவர்தனவின் நிலைப்பாட்டுக்கு அவரது இரண்டு முக்கிய தலைவர்கள் எதிராக செயற்பட்டதோடு, வாக்குரிமை விடயத்தை தடுத்து நிறுத்துவதற்கும் எத்தனித்ததை இந்த சபையில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழர் தொடர்பான விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சி அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டதாலேயே இன்றைய சகல பிரச்சினைகளும் தோன்றியுள்ளன. இந்த கொந்தழிப்பு நிலைக்கு அவர்களே முழு பொறுப்புகளையும் ஏற்க வேண்டும்






0 விமர்சனங்கள்:
Post a Comment