ஈரான், லிபியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு உதவி
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் மேலைத் தேய நாடுகள் ஒருமித்த நிலைப்பாட்டில் இருப்பதால் தொடர்ந்தும் மோதல்களை முன்னெடுத்துச் செல்ல ஈரான், லிபியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் உதவிகள் இலங்கை அரசாங்கத்துக்கு அதிகரித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேலைத்தேய நாடுகள் தமது நாடுகளில் துண்டித் துள்ளபோதும், புலிகளுக்கு எதிரான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமெனத் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொடுத்துவரும் அழுத்தம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிருப்தியடைந்துள்ளது.
37 வருடங்களாகத் தொடர்ந்துவரும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றபோதும், பிரித்தானிய, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு வாழ்வளித்துவிடுவார்கள் என்ற பயம் அவருக்கு இருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
மேலைத்தேய நாடுகளுடன் இலங்கைக்கு நெருங்கிய தொடர்பு
இதேவேளை, மேலைத்தேய நாடுகளுடன் இலங்கைக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தாலும், அவர்களின் எதிர்ப்புக் காரணமாகத் தாம் தற்பொழுது அதிருப்தியடைந்திருப்பதாக ஓய்வுபெற்ற மேலதிக வெளிவிவகாரச் செயலாளர் நந்த கொடகே ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.
1.5 மில்லியன் இலங்கைத் தமிழர்கள் தற்பொழுது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் வாழ்ந்துவருகிறார்கள் என்பதால்தான் மேலைத்தேய நாடுகள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்பதைத் தாம் புரிந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “அனைத்து உலகமும் எமக்கு எதிராக இருக்கிறது என நாம் நினைக்கிறோம். இதனால் நாம் கருத்துத் திரிபு நேயாளிகளாகிவிட்டோம்” என கொடகே ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறினார்.
“மேலைத்தேயத்தின் எதிர்ப்புக் காரணமாக ஈரானின் உதவியைப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். சீனா எப்பொழுதும் எமக்கு உதவியாகவுள்ளது. லிபியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் எமது நிலைமையைப் புரிந்துகொண்டுள்ளன” என்றார் கொடகே.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள், தமது இலங்கை விஜயம் தோல்வியடைந்திருப்பதாகக் கூறிசென்று மறுதினம், ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் ஜசூசி அகாசி இலங்கை வந்து நிதியுதவி வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment