இராணுவத்தில் புதிதாக ஒரு இலட்சம் பேர் இணைக்கப்படவுள்ளனர்: சரத் பொன்சேகா
இராணுவ நடவடிக்கைகளில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீட்சிபெறாமல் தடுப்பதற்கு இராணுவத்தில் மேலும் 100,000 பேர் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருக்கும் விடுதலைப் புலிகள் புதிய தலைமையின் கீழ் மீண்டும் போராளிகளை உருவாக்க முயற்சிப்பதாக ஜென்ரல் சரத் பொன்சேகா அரசாங்கத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குற்றஞ்சாட்டினர்.
“வெளிநாடுகளிலுள்ள மக்கள் புதிய தலைவர் ஒருவருக்கான பிரசாரங்களை மேறகொண்டு அவரை மீண்டும் போராட்டங்களில் இறக்க முயற்சிக்கலாம்” என அவர் கூறினார்.
இராணுவத்தின் படைப்பலம் தற்பொழுது 200,000ஆக இருப்பதுடன், இந்த எண்ணிக்கை கூடிய விரைவில் 300,000 ஆக அதிகரிக்குமெனவும், பயங்கரவாதக் குழுக்களுக்கு முன்னரைப்போல தமது அமைப்புக்களை மீளக்கட்டியமைக்க முடியாதெனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கடந்தவாரம் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதுடன், புலிகளின் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைமைத்துவங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 22,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், 9,000 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட பின்னர் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் ஒழிந்திருக்கும் தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தமுடியும் எனவும் கூறினார்.
எனவே, இதனைத் தடுத்து விடுதலைப் புலிகள் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதைத் தடுப்பதற்கு இளைஞர்கள் பலர் விரைவில் இராணுவத்தினருடன் இணைந்துகொள்ளவேண்டுமெனவும், இலக்கை அடைவதற்கு பல இராணுவத்தினர் தேவையொனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment