'இந்தியாவின் யுத்தத்தை நான் முன்னெடுத்தேன்': ஜனாதிபதி
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியானது பயங்கரவாதத்துக்கு எதிராகத் தெற்காசிய நாடுகள் முன்னெடுத்த பிரசாரத்தின் ஒருபகுதியென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
“இந்தியாவின் யுத்தத்தை நான் முன்னெடுத்தேன்” என த வீக் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியா என்ன நினைக்கின்றதோ அதைத்தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமல்ல” எனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் இலங்கைக்கு உதவிய இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றிதெரிவித்துள்ளார்.
“சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்தே எனது வெற்றியமைந்தது. தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து நான் அவருக்குக் கடிதமொன்று அனுப்பியிருந்தேன். மோதல்கள் நடைபெற்ற சமயம் இந்தியா வழங்கிய ஆதரவு முக்கியமானது” என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மோதல்கள் முடிவடைந்த பின்னர் தமிழகத்திலுள்ள பல அரசியல் தலைவர்கள் தனக்கு வாழ்த்துத் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.
மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் இடம்பெயர்ந்த வடபகுதி மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுப்பதே அரசாங்கப் படைகளின் அடுத்த குறிக்கோளாகவுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உள்ளூரில் தயாரிக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டமே இறுதித் திட்டமாக முன்வைக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்ற பின்னரே இம்முறை இறுதித் தீர்வு முன்வைக்கப்படும் எனக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment