சர்வதேச மருத்துவக் குழுவின் உறுப்பினர்கள் இலங்கை விரைவு
இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களில் 80,000 பேரைப் பராமரிப்பதற்கான 3.3மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உதவிப் பொருள்களை சர்வதேச மருத்துவக் குழு அனுப்பிவைத்துள்ளது. வெளிநாட்டு அனர்த்த உதவிக் காரியாலயம் இந்த மருத்துவ உதவிப் பொருள்களுக்கான நிதியுதவி வழங்கியுள்ளது.
“எமது உதவி தேவைப்படும் ஏராளமான மக்கள் அங்கு இருக்கின்றனர்” என சர்வதேச மருத்துவ உதவிக்குழுவின் சர்வதேசத் திட்டப் பணிப்பாளர் ஜோ டிகார்லோ தெரிவித்தார்.
“எமது உறுப்பினர்கள் சுகாதார அமைச்சின் நிவாரணப்பொருள் தொகுதிகளுடன் சென்று எமது உதவிப் பொருள்களையும் வழங்குவார்கள்” என்றார் டிகார்லோ.
கட்டில்கள், தண்ணீர், அத்தியாவசிய பொருள்கள் போன்றவற்றை அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடுத்துச்செல்வதுடன், அவற்றை வழங்குவதற்கான சரீர உதவியும் தம்மிடம் கோரப்பட்டிருப்பதாகவும், வைத்தியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இலங்கை சென்று உதவுவார்கள் எனவும் அவர் கூறினார்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது தமது உறுப்பினர்கள் இலங்கையின் தென்பகுதிக்குச் சென்று பணியாற்றியிருந்ததாக டிகார்லோ சுட்டிக்காட்டினார்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு சர்வதேச நாடுகள் உதவி
இதேவேளை, இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவ பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. இலங்கைக்குக் கூடுதலான உதவிகளை வழங்கிவரும் நாடான ஜப்பான் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இதனைவிட, இந்தியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட பல நாடுகள் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment