இலங்கை இராணுவத்தினர் மேலும் முன்னேறியதாக அறிவிப்பு
இலங்கையின் வடக்கே வன்னியில் விடுதலைப்புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கைப் படையினர் இரட்டைவாய்க்கால் பகுதியிலுள்ள புலிகளின் இறுதி நிலைகளை நோக்கி மேலும் சுமார் 800 மீட்டர்கள் வரை திங்கட்கிழமை முன்னேறியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இது குறித்து இன்று அதிகாலை தகவல் வெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இரட்டைவாய்க்கால் பகுதியின் தெற்குப்பகுதியில் நிலைகொண்டிருந்த 58வது பிரிகேட் படைப்பிரிவின் துருப்புக்கள், மேலும் சுமார் 800 மீட்டர்கள் முன்னேறி புலிகளின் ஆட்டிலறி துப்பாக்கிநிலை உள்ளிட்ட பல நிலைகளை கைப்பற்றி அழித்திருப்பதாகவும், தற்போது புதிதாக அரசினால் மோதல்களற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இரண்டு கிலோ மீட்டர் பகுதிக்கு அருகாக நிலைகொண்டிருப்பதாகவும்
தெரிவித்திருக்கிறது.
திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது புலிகளிடமிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள், கனரக வாகனங்கள், விசைப்படகுகள் உட்பட பல இராணுவ உபகரணங்களை கைப்பற்றியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புலிகள் இந்தப் பகுதிகளில் பெருந்தொகையான மிதிவெடிகளையும், பொறிவெடிகளையும் புதைத்து வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகவும், ஆனாலும் படையினர் அந்தத் தடைகளையும் தாண்டி புதிதாகக் கைப்பற்றிய நிலைகளைப் பலப்படுத்திவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து இதுவரை செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment