வன்னி மக்களுக்கு சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் அதிகளவில் உதவி
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தலைநகர் கொழும்பிலும், ஏனைய தென்பகுதி நகரங்களான காலி, மாத்தறை, அனுராதபுரம், பொலநறுவை உள்ளிட்ட பல பகுதிகளிலும் சிங்கள மக்கள் அதிகளவில் உதவிப்பொருள்களை சேகரித்து வன்னி மக்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அரசாங்கம் ஆரம்பித்த நிவாரண உதவி சேகரிப்புப் பணி கொழும்பிலுள்ள பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது, பெருமளவில் சிங்கள மக்கள் திரண்டு வந்து அதிகளவு உதவிப் பொருள்களை வழங்கியிருந்தனர்.
ஏப்ரல் 20ம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த நிவாரண உதவி சேகரிப்பின்போது முதற்கட்டமாக 13 பாரிய நகரூர்திகளில் உதவிப்பொருள்கள் சேகரிக்கப்பட்டு வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இங்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் தாமாக முன்வந்து பெருந்தொகை உதவிப்பொருள்களை வழங்கியிருந்தனர்.
இதுதவிரவும், நாட்டின் ஏனைய பல பகுதிகளிலும் உதவிப்பொருள் சேகரிப்புப் பணிகள் அரசாங்கத்தினாலும், பல சிங்கள பொது அமைப்புக்களினாலும், விகாரைகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, முஸ்லிம் அமைப்புக்கள், பள்ளிவாசல் நிர்வாகங்கள், வர்த்தகர்களும் பெருமளவில் உதவிப்பொருள்களை வழங்கியுள்ளனர். பள்ளிவாசல் சம்மேளனங்களால் சேகரிக்கப்பட்ட பெருமளவு உதவிப்பொருள்கள் புனர்வாழ்வு அமைச்சினூடாக வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்த சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் வவுனியா மனிக் முகாமில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவுப்பொதிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இதற்கென விசேட சமையல் குழுவினரை நியமித்து மதிய உணவு சமைக்கப்பட்டு முகாமிலுள்ள மக்களுக்கு நாளாந்தம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துவரும் யுத்தம் பற்றிய தென்பகுதி மக்களின் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், இலட்சக்கணக்கில் வன்னி மக்கள் இடம்பெயர்ந்து அனுபவித்துவரும் துன்பங்கள் குறித்த மனிதாபிமான அக்கறை அவர்களிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
பல தனிப்பட்ட சிங்கள, முஸ்லிம் முக்கியஸ்தவர்களும், அமைப்புக்களும் இந்த விடயத்தில் கூடுதல் அக்கறை எடுத்து இரவு பகல் பாராமல் செயற்படுவதையும் காண முடிகிறது.
நீண்டகாலமாக நடைபெற்றுவரும் மோதல்களால் பிளவுண்டுபோயிருக்கும் சமூகங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது இருப்பதாக உதவிப் பணிகளில் ஈடுபட்டுவரும் சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எம்மிடம் கருத்துத் தெரிவித்தனர். படங்கள்: சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலின் உணவு விநியோகம்






0 விமர்சனங்கள்:
Post a Comment