பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால் சொற்ப காலத்தில் நாட்டைப் பிரித்திருப்பார்
மாத்தறையில் அமைச்சர் டியூ குணசேகர ஐ.நா.வும் ஐரோப்பிய அமைப்புகளும் இணைந்து இந்நாட்டை இரண்டாகக் கூறு போட தனக்கு உதவுமென்று பிரபாகரன் நினைத்தார்.ஆனால், அது தோல்வியிலேயே முடிந்தது என கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளரும் அமைச்சருமான டியூ. குணசேகர கூறினார்.
மாத்தறை ராகுலக் கல்லூரியில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார். அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது; இலங்கை உள்விவகாரங்களில் வெளியார் தலையிடுவதை சீனாவும், ரஷ்யாவும் முற்றாக விரும்பவில்லை. ஐ.நா.வினதும் ஐரோப்பிய அமைப்புகளினதும் தலையீடுகளை சீனாவும்,ரஷ்யாவும் எதிர்த்து இலங்கை அரசுக்கு உதவி புரிந்து அதைத் தடுத்து நிறுத்தின.
இல்லாவிடில் ஐ.நா. படைகளையே இங்கு அனுப்பியிருக்கும். இந்த அமைப்புகளின் கண்கள் இலங்கையின் எண்ணெய் வளத்தின் மீதே தங்கியிருந்தது.
சீனா,ரஷ்யா,இந்தியா போன்ற நாடுகள் எமது நாட்டின் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும்.அதற்கான உதவிகளை நாம் வழங்குவோம்.உள்நாட்டு விவகாரங்களில் நாம் தலையிடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருந்தன.
மாவிலாறில் பிரபாகரன் ஏற்படுத்திய யுத்தமே அவரது அழிவுக்குக் காரணமாகும். அவர் யுத்தத்தை ஆரம்பிக்க எமது படையினர் அதற்கு முகம் கொடுத்தனர். எமது படையினரை விட புலிகளிடம் கூடிய அளவு ஆயுதங்கள் இருந்ததைக் கண்டு நாமே பிரமித்துப் போனோம். இவ்வளவு நவீன ஆயுதங்கள் புலிகளுக்கு எவ்வாறு, எங்கிருந்து கிடைத்தது என்பதே இன்றையகேள்வி.
பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால் இன்னும் சொற்ப காலத்துக்குள் தனது குறிக்கோளில் வெற்றி அடைந்து நாட்டைப் பிரித்திருப்பார். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
எமது ஜனாதிபதியின் தூரப்பார்வையாலும் ஆளுமையாலும் இந்த நாட்டுக்கு இந்த வெற்றி கிடைத்து மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.
யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போதே ஆயுதங்களை கீழேவைத்துச் சரணடையுமாறு ஜனாதிபதி விடுதலைப்புலிகளுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களையும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைய வைக்க முயற்சித்தார்.சிறந்த எதிர்காலத்தைத் தமிழ் சகோதரர்களுக்குப் பெற்றுக்கொடுக்கவே இந்த அழைப்பை ஜனாதிபதி விடுத்தார். படையினர் தியாகங்கள் செய்து பெற்ற வெற்றிமூலம் தமிழ் சகோதரர்களுக்கு மாத்திரமல்ல ஏனைய அத்தனை சமூகங்களுக்கும் ஒளி மயமான எதிர்காலத்தை ஜனாதிபதி பெற்றும் கொடுப்பார் என்ற உறுதியான நம்பிக்கை இன்று அனைத்து மக்களினதும் உள்ளங்களிலும் வேரூன்றிவிட்டது என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment