விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு
ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் இன்றித் தற்பொழுது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றிருப்பதாகவும், ஆயுதங்களைக் கைவிட்டு அரசாங்கப் படைகளிடம் சரணடைபவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுமெனவும் அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
“பாதுகாப்பு வலயத்திலிருந்து அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவருபவர்களுக்கே இந்தப் பொதுமன்னிப்புப் பொருந்தும். எனினும், ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்களுக்கு இது பொருந்தாது. ஆனாலும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் அவர்.
அதேநேரம், இடம்பெயர்ந்து வந்த மக்களுடன் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலரும் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
“இவர்களில் சிலர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதுடன், ஏனையவர்கள் புலிகளுடன் தொடர்புபட்டுள்ளார்களா என விசாரணை நடத்தப்படுகிறது” என்றார் சமரசிங்க.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் எத்தனைபேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தார்கள் என்பது பற்றி உறுதியாகத் தெரியாதபோதும், 3000 பேர் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.
விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இணைத்தலைமை நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும், இந்தக் கோரிக்கையை ஆரம்பத்தில் நிராகரித்திருந்த இலங்கை அரசாங்கம் தற்பொழுது அதற்கு இணங்கியுள்ளது.
இதேவேளை, ஆயுதங்களைக் கீழே வைத்துத் தாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லையென விடுதலைப் புலிகளும் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment