துரோகிகளின் பட்டியல் ..
விடுதலைப் புலி ஆதரவாளர்களின் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போகப்போகிறது.
அடுத்து தயா மோகனைத் துரோகியாக்குவதா? இல்லையா என்ற அரை குறைக் குழப்பத்தில் இப்போது புலி ஆதரவாளர்கள் திக்கு முக்காடுகிறார்கள்.
பத்மநாதனின் தலைமையை ஏற்பதா இல்லையா எனும் குழப்பமே இன்னும் தீர்ந்தபாடில்லை, அதற்குள் தயாமோகனையும் துரோகியாக்குவதா இல்லையா எனும் திடீர்க் குழப்பம் உள் நுழைந்துவிட்டது.
பி.பி.சிக்கு அவர் “செவ்வி” கொடுத்தது தான் காரணமாம் என்றால் காறித் துப்பத்தான் முடியும், பி.பிசி நம்மை செவ்வி எடுக்காதா என்று அவர்கள் அலைந்து திரிந்த காலத்தை மறந்துவிட்டாலும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
எனவே தயா மோகன் என்ன சொன்னார் என்பது இங்கு முக்கியம் பெறுகிறது.
புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்ற இந்த நிலையில் அங்கு இருப்பவர்களின் மன நிலை எப்படியிருக்கிறது? அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி அமையும்? என்று கேட்கப்பட்ட போது
“எமது தேசியத் தலைவர் வீரச்சாவடைந்தபோதும் கூட, வீரச்சாவடையவதற்கு முன்னர் கூட ” எமது மக்களுக்காக… என்று தனது பதிலை திட காத்திரமாக பி.பி.சி வானலையில் அவர் ஒலிக்க விட, அதிலிருந்து இந்தப் புதிய குழப்பத்திற்குள்ளாகிறார்கள் புலி ஆதரவாளர்கள்.
தயா மோகன், புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட உயர்மட்ட உறுப்பினர்.
அவர் பி.பி.சிக்கு வழங்கிய இந்த செவ்வியில் புலிகளின் எதிர்காலம் குறித்து என்ன பேசினாரோ இல்லையோ தீவிர புலி ஆதரவாளர்களைக் கோபப்படுத்தும் வகையில் இரண்டு விடயங்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.
1. பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது 2. அவர் இறக்க முன் பத்மநாதனிடம் பல விடயங்களைக் கூறிப் பொறுப்பளித்தது, இதன் மூலம் தாம் இப்போது பத்மநாதனின் வழிகாட்டலில் தான் நடந்துகொள்கிறோம் என்பது.
இது தீவிர புலி ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியாத விடயம்.
ஏன்?
தீவிர புலி ஆதரவு என்பது ஒரு மாய வித்தை மாத்திரமே. அப்படியொன்று நிஜத்தில் இருந்திருக்கும் என்றால், அதன் அடிப்படையை மற்றவர்கள் நம்பும் போது மக்கள நலன் அங்கே இருந்திருக்காது என்கிற உண்மையையும் சேர்த்துத்தான் நம்ப வேண்டும்.
எனவே, தீவிர புலி ஆதரவு அல்லது மக்கள் நலன் சார்ந்த ஆதரவு, இந்த இரண்டில் ஒன்றுதான் நிஜமாக இருக்க முடியும்.
இந்த சர்ச்சைக்குள் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று தான் புலிகளின் கொள்கை வகுப்பாளர்கள், தம் பிரச்சாரத் தளபதிகள் மூலம் புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள் எனும் வடிகட்டிய மாற்று வழியை முன்வைத்தார்கள்.
எனினும், அது அவர்கள் அளவில் மாத்திரம் தான் நிலைபெற்றதே தவிர, சர்வதேசத்தின் கண்களில் உண்மைக்குப் புறம்பாண வடிகட்டிய பொய்யாக மட்டுமே தென்பட்டது.
மக்கள்தான் புலிகள், புலிகள் தான் மக்கள் என்றால் புலிகளை விட்டுவிட்டு இந்த மக்கள் ஓடி வந்திருக்கக்கூடாது என்கிற அடிப்படை உண்மை ஒரு புறமும், ஓடி வந்து அகதியாகப் பதிந்த நாடுகளில் ” புலி எங்கள் பிள்ளைகளைக் பிடிக்கிறது ” என்று இவர்கள் தஞ்சம் கோரியிருக்கக்கூடாது எனும் எதர்த்தமான உண்மையும் எதிராகச் சாட்சியளிக்கும் காரணத்தினால் சர்வதேசம் இதை எப்போதும் நம்பவில்லை.
புலிகளின் ஆதரவாளர்களிடம் மட்டுமே இந்தக் கொள்கை எடுபட்ட காரணத்தினால் அவர்கள் தாம் சார்ந்த சமூகத்திலிருந்தே ஆதரவாளர்களையும், எதிர்ப்பாளர்களையும் அடையாளங் காண ஆரம்பித்தார்கள்.
ஆதரவானவர்கள் வாய் மூடியவர்களாகவும், எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் எதிரிகளாகவும் காணப்பட்டார்கள்.
இதில் எதிரிகள் “துரோகிகள்” என்று வர்ணிக்கப்பட்டார்கள், தமது சமூக ஒன்று கூடல்களிலிருந்து கூட விலக்கிப் பார்க்கப்பட்டார்கள், மீறியும் எதிரானவர்கள் ஒன்று கூடினால் அவர்களது சுதந்திரங்கள் மறுக்கப்பட்டன, குழப்பப்பட்டன, அவர்கள் கூடும் இடங்கள் எல்லாம் கூச்சலிடப்பட்டன, இணையங்கள் எங்கும் அவர்கள் படங்கள், பெயர்கள் வெளியாகி நாறடிக்கப்பட்டன, ஒரு மனிதனை எதிர்ப்பதற்காக அவன் குடும்பத்தின் மானமே ஏலமிடப்பட்டன என்று இந்த அடாவடித்தனம் கட்டு மீறிப் போனது.
இத்தனைக்கும் காரணம் அவர்களது “துரோகிகளின் பட்டியல்” ஆகும்.
தமிழ்ச் சமூகத்தின் புத்திஜீவிகளை அழிப்பதற்கு முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த “துரோகிகளின் பட்டியல்” , 30 வருட காலங்கள் அவர்களுக்கிருந்த “அந்த” அடையாளத்தைப் பேணுவதற்காகப் போராடிய!? அதன் தலைவர்களையும் மெல்ல வந்து சேர்கிறது.
இது “தம்மால் வளர்க்கப்பட்ட மனிதர்களின்” அரசியல் அறிவை அவர்கள் அறிந்து கொள்ளும் அதிஷ்டமா துரதிஷ்டமா என்பதை துரோகிகளாக்கப்பட்டவர்கள் உணர்ந்துகொள்வதே சாலச் சிறந்தது.
ஒவ்வொரு தடவையும் “துரோகி” ப் பட்டங்கள் சூட்டப்படும் அவசரத்தில் தம் வண்டவாளங்கள் கசிந்துவிடுமோ என்கிற பயம்தான் புலிகளுக்கு இருந்ததே தவிர, அவர்கள் மக்களுக்கு எதிராக எதையும் செய்ததற்காக அந்தத் துரோகிப்பட்டங்கள் சூட்டப்பட்டதில்லை.
இப்பொழுதும் தயா மோகனும் இந்தப் பட்டியிலில் இணைவது மூலம் பட்டியல் நீள்கிறதே என்கிற கவலை சில புலி ஆதரவாளர்களுக்கு இருந்தாலும், தற்போதைய கால சூழ்நிலையில் இவர் உண்மையில் துரோகியாக்கப்பட வேண்டியவரா இல்லையா எனும் கேள்வியும் ஒரு சிலர் மனதில் எழுகிறது.
ஆம் அவர் துரோகியாக்கப்பட வேண்டும் என்று யாராவது சொல்வதானால், அதற்கு முன் பிரபாகரனை துரோகி, அதுவும் இனத்தை அழித்த மகா துரோகி என்று சொல்லும் வரலாற்றுக் கடமை அவர்களுக்கு இருக்கிறது.
அதற்குப் பல உதாரணங்கள் இருந்தாலும், மிகக் குறுகிய அளவில்
ஊரான் பிள்ளையையெல்லாம் பழிகொடுத்தாலும் தன் உயிருக்காக எதிரியின் காலில் விழுந்தமை
“தமிழன்” அழிகிறான், “தமிழன்” அழிகிறான் என்று உலகத்தையே கதற வைத்துவிட்டு அதே தமிழர்களைச் சுற்றிவர வைத்து பின்னால் சென்று ஒளிந்து கொண்டமை
அவர்கள் பிள்ளைகளையும், உறவினர்களையும் கட்டாயப்படுத்தி ஆயுதந்தூக்க வைத்து, போய் அவர்கள் நாடாளுமன்றங்கள் முன் நின்றாவது இந்த யுத்தத்தை நிறுத்தித் தாருங்கள் என்று மக்களை எல்லாம் வலிந்து அனுப்பிவைத்துவிட்டு, நோர்வேக்காரன் மூலமாகவும், இங்கிலாந்து பத்திரிகைக்காரர்கள் மூலமாகவும் தன் உயிரைக் காப்பாற்ற விழுந்து விழுந்து துடித்தமை.
சரணா? அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று மக்களை உசுப்பேற்றி விடட்டுகூறி விட்டு அதே இராணுவத்தின் கையில் போய் வழி தவறிய முயல் போல் மரணத்தைப் பெற்றுக்கொண்டமை
இப்படி பல காரணங்கள் இருக்கிறது, இவற்றை நாம் பட்டியலிட்டால் நம் மீது புலி ஆதரவாளர்களுக்குக் கோபம் வரும், ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நாம் வலியுறுத்தி வந்ததுபோன்று மிக அருகில் வைத்து அதுவும் தலையில் தாக்கப்பட்டு கோழை போல இறந்து கிடக்கும் தம் தலைவரின் சென்சார் செய்யப்படாத புகைப்படங்களைப் பார்த்த பின்னாவது அந்தக் கோபம் அடங்க வேண்டும்.
உள்ளவனுக்கெல்லாம் சயனைட் மாட்டிவிட்ட தலைவன், இறுதியில் தனது உயிருக்காக எவ்வளவு போராடி, எப்பேற்பட்ட மாவீரனாக மடிந்திருக்கிறான் என்பதை சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.
இராணுவம் நயவஞ்சமாகக் கொன்றதோ இல்லையோ, அந்த இராணுவத்திடம் போய் சரணடைந்த அந்தத் தருணத்திலும் சரி, அதற்கான திட்டம் தீட்டிய முழுப் போர்க் காலத்திலும் சரி, பிரபாகரன் தன்னை நம்பிய மக்களுக்கு செய்தது வடி கட்டிய நயவஞ்சகம், துரோகம் மாத்திரமே.
மாவீரனாவான் என்று வீரத்துடன் பார்த்திருந்த தன் ஆதரவாளர்களையும் ஏமாற்றி, தன் மீது பந்தயங்கட்டியவர்கள் எப்படியாவது தன்னை சயனைட் அடிக்க வைத்துவிடுவார்கள் என்று பயந்து ஓடிச்சென்று இராணுவத்தின் கைகளில் சரணடைந்தது துரோகமில்லையா?
அதற்கு முன்னதாக நடேசனையும், புலித்தேவனையும் காவு கொடுத்தது துரோகமில்லையா?
இறுதி நேரத்திலும் சூசையை வைத்து பிலிம் காட்டியது துரோகமில்லையா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு துரோகமிழைத்து விட்டு இப்போது சத்தமே இல்லாமல் பொட்டம்மான் ஓடி விட்டாரே அதுவும் கூடத்தான் துரோகம், வேலையெல்லாம் முடிந்து சர்வதேச வலைப்பின்னல்களை எல்லாம் அவிழித்துவிட்டு அவரும் ஒரு ஏரிக்கரையில் மிதக்கும் நாள் வரும் போதுதான் அவரது துரோகமும் இவர்களுக்குத் தெரிய வரும்.
ஒருவேளை தன் துரோகத்திற்குப் பரிசாக தன் உடல் வெளியே தெரியும் அளவுக்கு எதையும் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்க, அதை அவரையை கைப்பற்றிய “இவர்களது” புலனாய்வுத்துறை ஏற்றுக்கொண்டால், ஆகக்குறைந்தது பிரபாகரனை விட வீரமாக பொட்டம்மான் வீர மரணம் அடைந்ததாக புலி வரலாறு பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
ஆதரவாளர்கள் உசுப்பேற்றப்பட்டார்களே தவிர, பெருந் தலைகள் எல்லோரும் தம் உயிருக்குப் பயந்து துப்பாக்கியின் துணையில் வாழ்ந்த ஏமாற்றுக்காரர்களே.
பிரபாகரனின் பெற்றோரும் இப்போது அரச நிவாரண முகாம்களில் நலமாக இருக்கிறார்களாம்.
இறுதியில் நலம் குறைந்து போனது, அவர்களை நம்பி அல்லது அவர்களின் அடக்கு முறையில் தம் பிள்ளைகளைப் பறி கொடுத்த அப்பாவி மக்கள் மாத்திரமே.
குளிர்,மழை பாராது தெருக்களில் காலம் கழித்து மன அளவிலாவது நலம் குறைந்து போன அந்த மக்களுக்கு இந்த விடுதலை வீரர்கள் இதுவரை தம் வரலாறு மூலம் நிரூபித்தது என்ன?
இனிமேலும் அவர்கள் வந்து தம் முன்னால் எதைக்கொண்டு அவர்களை வெளியேற்ற வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்று இவர்கள் சிந்திக்கும் போது இந்த மக்களுக்கு இருக்கப்போகும் தெரிவுதான் என்ன? என்று சிந்தித்தால் அன்றைய எதிரி இன்றைய நண்பனாகும் தேவையைக் காலம் உணர்த்திச் சொல்லும்.
இதன் அடிப்படையில் புலிகளின் துரோகப் பட்டியல் மறு சீரமைக்கப்பட்டு மக்களால் ஒதுக்கப்பட்ட இன விரோதிகளாக அவர்களே மாற்றப்படுவது திண்ணம்.
அதிகாரம், ஆளுமை, வசதி வாய்ப்பு என்று எல்லாமே வந்திருந்த போதும் கூட இவர்கள் மக்களை சுதந்திரமாக மூச்சு விடவில்லை, மாறாக தொடர்ந்தும் மக்களை ஒரு பதட்டத்துடன், உணர்வு மேலோங்கிய ஒரு மந்தை நிலையில் வைத்து பரிபாலனம் செய்வதிலேயே குறியாக இருந்தார்கள்.
எனவே, மக்களின் நலன் அடிப்படையில் வைத்து நேர் கோட்டில் சிந்திக்கும் போது இந்தக் கோழை வரலாற்றுக்காக மக்கள் உள்ளங்களில் சப்பாணி கொட்டி அமர்ந்து கொள்ள அத்தனையையும் செய்த அவர்களே துரோகிகளாக உரு மாற்றம் பெருவார்கள்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தலித் மக்களுக்கு நேர்ந்த கொடுமையான ஒரு புகைப்படத்தை வைத்து அது இலங்கையில் நடந்த ஒரு விடயம், அதுவும் பாதிரியார் ஒருவர் கண்டு சொன்னார் என்று இவர்கள் கதை கட்ட, அதை எத்தனை பேர் சேர்ந்து “பொய்” என நிரூபித்திருந்தும், இன்றும் நம்பும் “அறிவாளிகள்” கண்களில் தலையில் வெட்டுக்காயத்துடன் பிரபாகரன் இறந்து போன படம் கிடைக்க இன்னும் அரை நூற்றாண்டாவது செல்லும்.
அதுவரையில் அவர்கள் கைகளில் “புலியின் துரோகப்பட்டியல்” பாதுகாப்பாக இருக்கும்.
அரைநூற்றாண்டுகளுக்குப் பிறகாவது அவர்கள் கொஞ்சம் வெளியில் எட்டிப்பார்த்தால், அப்போதாவது “உண்மை” வெளிவரும், இல்லையென்றால் மாவீரப் புலிகளுக்கு தனித்தனியாக ஆலயங்கள் கட்டப்பட்டு அதில் பிரபாகரக் கடவுளுக்கு அர்ச்சணைகள் நடந்தால் அதிலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.
-அறிவுடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment