புலிகளால் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பல சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என முல்லைத்தீவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு.
புலிகளின் படையணியில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட பல சிறுவர்கள் அங்கிருந்து தப்பிவந்து தமது அனுபவங்களை சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். அந்தச் சிறார்களுடனான நேர்காணல்கள் மற்றும் பேட்டிகள் என்பன சர்வதேச இணையதளங்களில் வெளியாகியுள்ளன. புலிகளின் படையணியில் செயற்பட்ட சசி கணபதிப்பிள்ளை என்னும் சிறுமி தனது அனுபவங்களைத் தெரிவிக்கையில் தான் புலிகளின் படையில் பலவந்தமாக இணைக்கப்பட்டு சிறிது காலம் பணியாற்றியதாகவும் தன்னுடன் இன்னும் பல ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு புலிகள் கட்டாய இராணுவப் பயிற்சியளித்ததாகவும் பயிற்சியின் பின்னர் முன்னரங்கக் காவல் நிலையங்களில் பணிபுரியுமாறு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
புலிகள் பலவந்தமாக மேற்கொண்ட சிறுவர் ஆட்சேர்ப்புக் குறித்து வடக்கிலுள்ள பல பாடசாலை அதிபர்களும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பாரதியார் வித்தியாலயத்திலிருந்து 100ற்கும் அதிகமான சிறுவர்களை புலிப் பயங்கரவாதிகள் தமது படையணிகளில் இணைத்துக் கொண்டதாக அப்பாடசாலையின் அதிபர் இராசேந்திரா தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி இரவு தான் வீட்டிலிருந்து தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி ஓடும்போது புலிகளின் படையணிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த தனது மகளை மிகுந்த சிரமத்தின் மத்தியில் காப்பாற்றிச் சென்றதாக பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் யுத்தத்தில் புலிகளால் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பல சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என முல்லைத்தீவு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளார் கே.செல்வராஜன் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.






0 விமர்சனங்கள்:
Post a Comment