தேவைப்படுவதற்கும், நிறைவேற்றப்பட்டிருப்பதற்குமிடையில் நீண்ட இடைவெளி: பான்கீ மூன்
இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களின் தேவைகள் பல இன்னமும் நிறைவேற்றப்படவேண்டியிருப்பதாக இலங்;கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்; பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.
“நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. எனினும், போதியளவு வளம் அதனிடம் இல்லை. காணப்படும் தேவைக்கும், நிறைவேற்றப்பட்டிருப்பதற்குமிடையில் பாரிய இடைவெளியுள்ளது” என அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களும், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் முகாம்களுக்குத் தடையின்றிச் சென்றுவர நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென, நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது, பான்கீ மூன் கோரிக்கைவிடுத்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியிருப்பதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக இடம்பெயர்ந்திருக்கும் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயதுமுதிர்ந்தவர்கள் ஆகியோரின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என வலியுறுத்திக் கூறியுள்ளார்.
உடனடியாக அரசியல் ரீதியான தீர்வொன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும், அவ்வாறு தீர்வொன்று முன்வைக்கப்படாவிட்டால் கடந்த காலங்களில் நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் மீண்டும் தோற்றம் பெற்றுவிடும் என்பதை சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஐ.நா. செயலாளர் குறிப்பிட்டார்.
“அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபட்டு இறுதி சமாதானத்தை ஏற்படுத்தும் காலம் தற்பொழுது தோன்றியுள்ளது” என செயலாளர் நாயகம் கூறினார்.
இலங்கை அரசாங்கம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், மனித உரிமை விடயங்களைக் கையாழும்போது சட்டரீதியாகவும், வெளிப்படையாகவும் நடந்துகொள்ளவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் இந்த வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டுவிடுவார்கள் என அரசாங்கம் வழங்கியிருக்கும் உறுதிமொழியை பான்கீ மூன் வரவேற்றுள்ளார்.
அத்துடன், மோதல்கள் நடைபெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவி வழங்குமெனவும் ஐ.நா. செயலாளர் நாயகம் இலங்கை அரசாங்கத்திடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment