ஈரமற்ற ஈன இனமே!!! : குலன்
யாரிவன்? பிரபாகரனா? யாராய்தான் இருந்தால் என்ன? இவன் ஒரு தமிழ் புலி வீரன் மட்டுமல்ல முக்கியமான ஒரு தளபதிதான். இவ்வளவு இராணுவமும் சுற்ற சூழ நின்று பார்க்கத் துடிக்கிறதே.
இவன் ஒரு புலிகளின் முக்கியமானவன்தான். அதைத்தான் பிரபாகரன் என்கிறது அரசு. இல்லை என்கிறார்கள் புலம்பெயர் தமிழர். யாராய்தான் இருந்தால் என்ன? அவன் எம்தேசத்தை நேசித்தான், அதனால் போராட உந்தப்பட்டான் அல்லது திணிக்கப்பட்டான். இந்தத் தேசத்தைத் தாங்கிய நெஞ்சம் எதிரியின் கைகளில் அநாதைப் பிணமாய் போகிறதே. ஈரமுள்ள நெஞ்சங்களே யாராவது இவன் உடலை உரிமை கோரினீர்களா? உங்களுக்காய் இவன் தன் இளமையையே தொலைத்தானே! நீங்கள் அன்று தூக்கி வைத்துக் கொண்டாடிய இப்புலிவீரன் எமது ஈழக் கோரிக்கைகள் போல் கேவலமாய் போனானே.
இப்பாடையில் போவது புலி வீரனோ பிரபாகரனே அல்ல. எம்மக்களின் தலைவிதி, சுயநிர்ணய உரிமை இதுமட்டுமல்ல எம்தேசமும் எமக்கிழைத்த நாசமுமே. உலகெங்கும் கொடி பிடித்துக் கோசம் போட்ட சமூகமே! உங்களுக்காய் ஒரு தேசம் அமைக்கபோய் எதிரியின் கையில் ஒரு ஈனனாய் அநாதைப் பிணமாய் போகும் இவனுடலை யார் உரிமை கோரினீர்கள்? ஈன இனமே உனக்கு விடுதலை ஒருகேடா?
அன்று ஈழவிடுதலை என்று ஆயுதம் தாங்கிப் புறப்பட்ட ஒவ்வொருவனும் தன்நலனை விட்டு மக்களுக்காக என்றே புறப்பட்டனர். எந்த நேரமும் தன்னுயிர் போகலாம் என்றே பயணத்தைத் தொடங்கினர். இதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க இயலாது. பாதைகள் மாறின, பயணங்கள் தடுமாறின, எதிரியை நோக்கிய துப்பாக்கிகள் எங்களை நோக்கியும் திரும்பின. காலம் இந்த ஈனவினத்தை அழிக்க நினைத்ததோ என்னவோ?
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி ஆராய்ச்சியில் சிலர் இறங்கியுள்ளார்கள். சிலர் கண்மூடித்தனமாக புலிகளின் ஊதுகுழல்கள் கூறுவது நம்புகிறார்கள். பிரபா உயிருடன் இருந்தால் மகிழ்சியானதுதான். ஒரு மரணத்தில் மகிழ்ச்சியுறும் மனம் எனக்கில்லை. ஆனால் பிரபாகரன் என்று அரசுகாட்டும் படம் பிரபாகரன் இல்லையென்று நிரூபிப்பதற்காகவாவது புலம்பெயர்ந்த தமிழர்களோ அன்றி உறவினர்களோ அந்த உடலை உரிமை கோரியிருக்கலாம். அரசின் முகமூடியாவது கிழிந்திருக்குமல்லவா?
கடைசிகாலத்தில் பிரபாகரனும் புலிகளும் எப்படி நடந்தார்களோ அவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு. எம்மினத்துக்காக துப்பாக்கி தூக்கியவர் என்ற முறையிலும், எமக்காக தலைமறைவு வாழ்க்கைளை மேற்கொண்டவர் என்ற வகையிலும், ஒவ்வொரு இறந்த புலிவீரனும் மரியாதைக்குரியவனே. இராணுவம் அவர்கள் பூதஉடல்களை மரியாதையாகத்தான் நடத்துகிறதா? கார்த்திகையை புனிதமாதமாக்கி 27ம் திகதியை புண்ணிய நாளாக்கி உலகெங்கம் தீபமேற்றினார்கள் புலிகள். அவையெல்லாம் உங்கள் பிள்ளைகளை மேடையில் காட்டுவதற்கான கொண்டாட்டமாகவே கருதியிருக்கிறீர்கள்? இவனைப்போல் எத்தனை புலிவீரர்கள் முகம் தெரியாமல் இடம்தெரியாமல் புதைக்கப்பட்டார்களோ? எரிக்கப்பட்டார்களே?
நீங்கள் துதிபாடிய, நேசித்த, சூரியபுத்திரன் என்று கூவியழைத்துக் கும்பிட்ட பெயரைச் சொல்லிக் கொண்டு அநாதைப் பிணமாய் ஒரு புலிவீரன் போனானப்பா? நெஞ்சு கனக்கிறது. ஈனஇனமே உன்நெஞ்சை தொட்டுப்பார் எங்கே உன்னிதயத்தில் ஈரம்?
புலிகள் குண்டுகளாலோ, போர் விமானங்களினாலோ சிதறவில்லை. எத்தனை துரோகங்கள்? எத்தனை வஞ்சகங்கள்? இத்தனையாலும் தானே புலிகள் சிதறினர். ஒரு சிலரை மட்டும் நம்பி இயக்கம் நடத்தியதன் விளைவுதான் இது. ஒரினமே சில தனிமனிதர்களின் கையில் அடைவு வைக்கப்பட்டு, விடுதலை என்ற சொல்லையே உச்சரிக்காதவாறு ஆக்கப்பட்டது. ஒரு தனிமனிதனுக்காகவே ஒரு கட்டமைப்பு இருக்கக் கூடாது. கட்டமைப்பானது மக்களுக்காக இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் புலிகள் நிச்சயம் வீழ்திருக்க மாட்டார்கள்.
கப்பல் கப்பலாய் 19 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. ஒரு கப்பல் சரி இரண்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்பும் அதேவழியில் யுத்தளபாடங்களை எந்த மடையன் அனுப்புவான். யார் பதில் சொல்வார்களா? இங்கேதான் பெரும் சதி நடந்தேறியிருக்கிறது. கப்பல் மூழ்கினால் கணக்கு யாருக்குக் காட்டுவது. வந்த சரக்கு கோடிகள் என்பது தானே கணக்கு. வெளிநாட்டில் மலசலகூடம் தேய்த்து போருக்காக, மக்களைக்காக்கவென கண்மூடித்தனமாகக் கொடுக்கப்பட்ட பணமல்லவா அவை.
போதிய யுத்த தளபாடங்கள் இருந்திருந்தால் நிச்சயம் புலிகள் இராணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியிருப்பார்கள். ஒரு விமானத்தை விழுத்த வக்கில்லாமல் போனது ஏன்? அதுவும் பழைய இரஸ்சிய மிக்29ஐ விழுத்தப் புலிகளால் முடியாமல் போனது ஏன்? சதி இங்கேயும் சரசமாடியே இருக்கிறது. இரஸ்சிய விமானத்தை விழுத்த இரசியாவிலேயே ஏவுகணைகளை வாங்கலாம். சதிகளால் மட்டுமே புலிகள் விழுந்தார்கள் என்பதுதான் உண்மை. இச்சதிகாரர்கள் யார்? தமிழர்களின் தலைவிதியை அடைவுவைத்த துரோகியார்? ஈனச்செயலுக்கு துணைபோய் நம்பிக்கை மோசடி செய்தவன் யார்? துரோகிகள் என்றும் அருகிலேயே இருப்பார்கள் இருந்திருப்பார்கள் என்பதை அறிக.
அப்பிணமானது பிரபாகரனினது இல்லையாயினும் யாரோ ஒரு புலி வீரனினுடையதாகக் கூட இருக்கட்டுமே? ஏன் இறந்தவர்களை யாருமே உரிமை கோரவில்லை? சரி இறந்துபோன உறுதிப்படுத்தப்பட்ட மற்றய தளபதிகளின் உடல்களை ஏன் உறவினர்கள், நண்பர்கள், ஊதுகுழல்கள் ஏன் உரிமை கோரவில்லை? இவனுக்கும் எம்மைப்போல் தாய், தந்தை, சகோதரம், உறவுகள் என்று இருந்துதானே இருந்திருக்கும். இவர்கள் வீரர்கள் இல்லையா? அறிவுள்ள சனங்களே அநாதையாக அனுப்பினீர்களே. ஒரினத்தை நெஞ்சில் தூக்கியவர்கள் அல்லவா இவர்கள். பொங்கு தமிழிலும், மாவீரர் தினங்களிலும் மேடை மேடையாய் தெருத்தெருவாய் கேட்டோமே எல்லாம் பொய்யா?
இராணுவம் ஒரு புலிவீரனையும் கொலை செய்யவில்லை என்கிறீர்களா? இக்கட்டுரையை பலர் பலவாறு கருத்துக் கூறினாலும் உ.ம் புலிகள் என்ன செய்தார்ளோ அதுவோ புலிக்கு நடந்தது எனலாம். இதற்கெல்லாம் அப்பால் நின்று ஒவ்வொரு தமிழனையும் கேட்கிறேன். இப்படி எம்புதல்வர்கள் அநாதைப் பிணமாய், ஏதிலியாய், யார் யாரோ எள்ளி நகையாட பிணமாய் போனார்களே. தெருவில் செத்த பிச்சைக்காரப் பிணத்துக்குக் கிடைத்த மரியாதை இவர்களுக்குக் கிடைத்ததா? எலும்பும் தசையுமாய் அள்ளி எடுத்து கூழம் குப்பை போல் எரிக்கப்பட்டார்களே! எரிகிறதையா இதயம், நோகிறதையா நெஞ்சம். எத்தனை புலி வீரர்களின் உடல்கள் உரிமை கோரப்பட்டன? அடையாளம் கண்டபின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டன? பிரபாகரன் வாழ்கிறாரா? செத்தாரா? என்று தேடுகிறீர்களே உண்மையில் செத்தவர்களை என்ன செய்தீர்கள்? இறந்தவர்களில் ஒருவராய் பிரபாவாக இருந்தாலும் அவருக்கும் இன்நிலைதான். இந்த நன்றி கெட்ட ஈனத் தமிழ்சாதிக்கு உயிர்கொடுத்தவர்களும் ஈனராய் போனார்களே. இந்த இனத்துக்கு விடுதலை ஒருகேடா?
இது என்வேதனையின் விசாரமே தவிர வேறில்லை.
-தேசம்நெற்






0 விமர்சனங்கள்:
Post a Comment