தமிழ்கட்சிகள் - ஜனாதிபதி சந்திப்பு! மக்களின் நலன்களை கண்காணிக்க தமிழ்கட்சிகள் தலைமையில் குழு!
நேற்றையதினம் தமிழ்கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பினை தொடர்ந்து தமிழ்கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்தன. இவ் சந்திப்பில் தமிழ் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அதனை தமிழ் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதியின் விசேட ஆலோகரும் பா.உ மான பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலர் வீரதுங்க, தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அமைச்சர் டி.யு.குணசேகரா உட்பட பல அமைச்சர்கள் பங்கு கொண்டனர். தமிழ்கட்சிகள் தரப்பில் த.வி.கூ தலைவர் வீ.ஆனந்தசங்கரி, மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், இ.தொ.கா. சார்பில் முத்து சிவலிங்கம், ம.ம.மு.சார்பில் ராதகிருஷ்ணன், ஈ,பி.டி.பி. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) சார்பில் செயலர் ஸ்ரீதரன் ஆகியோர் பங்கு கொண்டனர்.
தமிழ்கட்சிகள் மத்தியில் பேசி பசில் ராஜபக்ஷ வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நலன்கள் குறித்து உரையாற்றிய பசில் ராஜபக்ச எம்.பி, இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமாக எடுத்துக் கூறினார். இதன்போது தமிழ்க் கட்சிகளைச் சார்ந்தவர்கள் முகாம்களில் இருக்கக்கூடிய குறைகள் தொடர்பில் எடுத்து விளக்கினர். பசில் ராஜபக்ச எம்.பி பேசும்போது, நலன்புரி நிலையங்களில் துணைப்படைகளைச் சேர்ந்தவர்கள் மக்கள் மத்தியில் சேவை செய்வதாக குற்றஞ்சாட்டி யூ.என்.எச்.சீ.ஆர் தனக்கு ஒரு கடிதமெழுதியதாக தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த புளொட் தலைவர் சித்தார்த்தன், புளொட் அமைப்பைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது தனக்குத் தெரியுமென்றும், இது சம்பந்தமாக தான் ஏற்கனவே கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் எம்மைப் பொறுத்தமட்டில் அங்கு வாழுகின்ற மக்கள் எங்களுடைய இரத்த உறவுகள், அவர்களுடைய துன்பங்களை துடைப்பதுதான் எங்களுடைய நோக்கம், நிச்சயமாக வெளிநாடுகளிலிருந்து வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் எங்களுக்குப் பாடம் சொல்லித்தரத் தேவையில்லை, 20ம் திகதியன்று பெருமளவிலான மக்கள் வவுனியா நோக்கி வந்தபோது அரச அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரவிரவாக 10ஆயிரம் உணவுப்பொதிகளைத் வவுனியா கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் தயாரித்து அம்மக்களுக்கு உதவினோhம், அதுமாத்திரமன்றி தொடர்ந்து ஒருவார காலமாக தினமும் 40ஆயிரத்திற்கும் 50ஆயிரத்திற்கும் உட்பட்ட உணவுப்பொதிகளை மதிய உணவாக அம்மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வந்தோம், வவுனியாவில் வாழுகின்ற மக்களின் பங்களிப்புடனேயே இதனைச் செய்தோம், இந்த நிறுவனங்கள் வாயால் எதனையும் கூறலாம், ஆனால் சேவைகளை நாங்கள்தான் செய்கின்றோம் என்பதையும் அங்கு தெளிவுபடுத்தினார். அப்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, புலிகள் எது செய்தாலும் அவர்கள் கேட்கமாட்டார்கள்.
இப்போது ஜனநாயகத்திற்குள் வந்திருக்கின்ற கட்சிகளைத்தான் அவர்கள் துணைப்படைகள் என்று இழிவுபடுத்த முயற்சிக்கிறர்கள் என்று தெரிவித்தார். அத்துடன் புளொட் அங்குள்ள அகதி மக்களுக்கு செய்கின்ற சேவைகளை தாங்கள் நன்றாக அறிந்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன் சிறீதரன் அவர்கள், அனைத்துக் கட்சிகளும் அந்த இடங்களுக்கு சென்று சேவை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதை ஜனாதிபதி அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
ஆனந்தசங்கரி அவர்கள், முகாம்களில் இருக்கின்ற குறைபாடுகளை எடுத்துக் கூறினார். அவற்றை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். அத்துடன் இந்தத் தமிழ்க் கட்சிiளை சேர்ந்த குழுவொன்று அமைக்கப்பட்டு, அந்தக்குழு இந்த முகாம்களைப் பராமரிக்கின்ற மற்றும் அந்த மக்களை மீள்குடியமர்த்துகின்ற அலுவல்களில் முழுமையாக ஈடுபட ஆவன செய்யப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment