புதுமாத்தளனில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்

சோர்வும் வேதனையும் அப்பிய முகங்களுடன் வந்து கொண்டிருக்கும் மக்கள்...
வன்னியில் முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற முக்கிய நகரங்களைத் தவிர ஏனைய இடங்கள், நகரங்களின் பெயர்கள் நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? வன்னி இராணுவ நடவடிக்கையின் பின்னர் சிறிய கிராமங்களின் பெயர்களும் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்று அத்துப்படி.
தோல்வியடையச் செய்ய முடியாத இயக்கமென்றும் உலகின் மிகக் கொடூரமான இயக்கமென்றும் அறியப்படும் விடுதலைப் புலிகளை ஆயுத பலத்தால் தோல்வியடையச் செய்திருக்கும் இலங்கை இராணுவம், தமது பிரதான போர் நடவடிக்கைகளின் முடிவில் வித்தியாசமான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சிக்குண்டிருக்கும் பொது மக்களை சேதமின்றி மீட்டெடுக்கும் பணி தான் அது என்பது உங்களுக்குத் தெரிந்த விடயம் தான். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய போர்கால மீட்புப் பணியாக இது இன்று பேசப்படுகிறது. இந்த மீட்புப் பணி காரணமாக முல்லைத்தீவு கரையோர பிரதேசத்தில் அமைந்துள்ள புதுமாத்தளன் பகுதி மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை மீட்டெடுக்கும் பாரிய மீட்பு நடவடிக்கை கடந்த 20 ஆம் திகதி, அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தின் நிலைமைகளை நேரில் காண்பிக்கும் பொருட்டும் படையினர் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கைகளை நேரில் தெளிவுபடுத்தும் பொருட்டும் கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து ஊடகவியலாளர் குழுவொன்று விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டது. மீட்பு பணி ஆரம்பிக்கப்பட்டு சுமார் நான்கு தினங்களில் அழைத்துச் செல்லப்பட்டதால் சகல ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இறுதியாக சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை அதிகாலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப் படை விமானத்தின் மூலம் அதிகாலை 6.30 மணியளவில் புறப்பட்டுச் சென்ற நாங்கள் சுமார் அரை மணி நேரத்தில் அனுராதபுரம் விமானப் படைத் தலைமையகத்தைச் சென்றடைந்தோம். அங்கிருந்து இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் கிளிநொச்சியை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டோம். இந்தப் பயணம் சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவதால் ஹெலிகளின் கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன. கூட வந்த கெமரா ஊடகவியலாளர்களுக்கு இது விருந்தாக அமைந்தது. மேலே இருந்து பசுமையை மட்டுமின்றி யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் கோரமான வடுக்களையும் எம்மால் பார்க்கக் கூடியதாக இருந்தது. இறுதியில் கிளிநொச்சியிலுள்ள ஒரு மைதானத்தில் ஹெலிகள் தரையிறக்கப்பட்டன.
58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா (வலம்) ஏனைய அதிகாரிகளுடன் எம்மை வரவேற்க அங்கே வந்திருந்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார எமது பயணம் குறித்து சிறு விளக்கம் அளித்தார். அதன் பின்னர் கவச வாகனங்களில் கிளிநொச்சியிலுள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அது தான் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் அவர்களது சமாதான செயலகமாக இயங்கி வந்த கட்டடம். அங்கு காலை உணவை அருந்திய பின்னர் இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு ஆகிய நகர்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிய ஒரு சில தினங்களில் இது போன்று நாங்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தோம். அன்று இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தலைமையகமாக பூநகரியிலுள்ள புலிகள் பயன்படுத்தியிருந்த வைத்தியசாலை இயங்கியது. தற்பொழுது புலிகளின் தலைவரின் முக்கிய தளமும், நிர்வாக அலுவலகமாகவும் விளங்கிய கட்டடத்தில் 58 வது படைப் பிரிவின் தலைமையகம் இயங்கி வருகிறது.
முன்னர் சென்றிருந்தபோது நாங்கள் கண்ட கிளிநொச்சி நகரமும் அதனை அண்டிய பகுதிகளும் இம்முறை முற்றிலும் மாற்றமடைந்து காணப்பட்டது. அன்று தரைமட்டமாக காட்சியளித்த கட்டடங்களில் பல மீளமைக்கப்பட்டு ஒவ்வொருப் படைப் பிரிவுகளின் அலுவலகங்களாக மாற்றியமைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். ஏ-9 பிரதான வீதியை அண்மித்த பகுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டிருந்ததை அவதானித்தோம்.
58 வது படைப் பிரிவின் கட்டளைத் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களுக்கு விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா மன்னார் சிலாபத்துறை கடல் பரப்பிலிருந்து தமது படைப் பிரிவினர் ஆரம்பித்த நடவடிக்கையிலிருந்து தற்பொழுது புதுமாத்தளன், பாதுகாப்பு வலயத்தில் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கை வரை தெளிவாக விளக்கமளித்தார்.
“ஆரம்பத்தில் பல புலிகளை நாம் கொல்ல வேண்டியிருந்தது. பின்னரேயே அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த ஒவ்வொரு பகுதியையும் கைப்பற்ற ஆரம்பித்தோம். “சிலாபத்துறை - பரப்பக்கண்டான், கடற் புலிகளின் முக்கிய தளமான விடத்தல்தீவு, இலுப்பக்கடவை, முளங்காவில், நாசிக்குடா, கிராஞ்சி என்று படிப்படியாக முன்னேறி பூநகரியை கைப்பற்றினோம். இங்கிருந்து எமக்கு பாரிய வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்தன. பூநகரியிலிருந்து முன்னேறிய நாம், பரந்தனை 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நள்ளிரவு கைப்பற்றினோம். அதிலிருந்து 12 மணி நேரத்தில் அதன் வட பகுதியில் அமைந்துள்ள புலிகளின் முக்கிய நிர்வாக நகராக விளங்கிய கிளிநொச்சியை கைப்பற்றினோம். அதிலிருந்து சரியாக நான்கு நாட்களிலில் சுமார் 8 கிலோ மீற்றர் பகுதிக்குள் முன்னேறிய நாம் ஆனையிறவு பிரதேசத்தை கைப்பற்றினோம்.
“யாழ். குடாவுக்கான பிரதான போக்குவரத்து பாதையான ஏ-9 வீதியையும் அதனை அண்டிய பகுதிகளையும் வெற்றிகரமாக கைப்பற்றி யாழ்குடா முழுவதையும் விடுவித்த நாம், அதன் கிழக்கு பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்றோம். முரசுமோட்டை தர்மபுரம், விஸ்வமடு, சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு என்று படிப்படியாக கைப்பற்றினோம். தர்மபுரம் வீழ்ச்சி அடைந்த பின்னரேயே புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் சிவிலியன்களின் வருகை ஆரம்பித்தது. பாரிய பதுங்கு குழிகளையும், மண் அரண்களையும் தகர்த்து முன்னேறிச் செல்ல செல்ல சிவிலியன்களின் வருகையும் அதிகரித்தது.
எம்மை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டிருந்த புலிகள் தப்பிவரும் அப்பாவி பொது மக்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் சுந்தரபுரம் பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த மக்களை சோதனையிட்டு உள்வாங்கிக் கொண்டிருக்கும்போது தமது தற்கொலை குண்டுதாரி ஒருவரை அங்கு அனுப்பி அதனை வெடிக்கச் செய்தனர். அங்கு படை வீரர்கள் உட்பட அப்பாவி பொது மக்கள் பலர் உயிரிழந்தனர்.
“ஏ-35 வீதி ஊடாக வேகமாக முன்னேறி புதுக்குடியிருப்பை கைப்பற்றிய பின்னர் இரணப்பளை பிரதேசத்தை கைப்பற்றினோம். “புலிகளின் முக்கிய உறுப்பினர் பலரை நாங்கள் இந்தப் பிரதேசத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது நேருக்கு நேர் மோதிக் கொள்ள நேரிட்டது. புலிகளின் 15 வகையான படைப் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்களை இந்தக் களத்தில் நாங்கள் சந்தித்தோம். அவர்களது சகல எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் வெற்றிகரமாக முகம்கொடுத்தோம்.
இரணைப்பளை பிரதேசமும் படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததையடுத்து, பொது மக்களின் நலன் கருதி அரசாங்கம் அறிவித்திருந்த முல்லைத்தீவு கரையோரப் பிரதேசத்தில் மிகவும் ஒடுக்கமானதும் 21 சதுர கிலோ மீற்றர் நீளமும் கொண்ட பாதுகாப்பு வலய பகுதிக்குள் புலிகள் பின்வாங்கிச் சென்று நிலை கொண்டனர். அன்றிலிருந்து மக்களுடன் மக்களாக இருந்த வண்ணம் புலிகள் எமது படையினரை இலக்கு வைத்து கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். எனினும் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு நாங்கள் பதில் தாக்குதல்கள் எதுவும் செய்யாமல் காத்திருந்தோம்.
பின்னர் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்திய வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பலமாத்தளன், புதுமாத்தளன், அம்பலவான்பொக்கணை ஆகிய பிரதேசங்களை கைப்பற்றினர்” என்று தெரிவித்தார் சபேந்திர சில்வா.
பாரிய மீட்பு நடவடிக்கை
கடந்த 20ம் திகதி அதிகாலை பாதுகாப்புப் படையினர் அதிரடியாக முன்னெடுத்த பாரிய மீட்பு பணி தொடர்பாகவும் அவர் விளக்கம் அளித்தார். “வழக்கமாக தாக்குதல்கள் நடத்திய வண்ணம் முன்னேறிச் செல்வதே வழமை. இம்முறை பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு நேரடித் தாக்குதல்களைத் தவிர்த்துக் கொண்டோம். புலிகள் 10 அடி உயரமாகவும் சுமார் 3 கிலோ மீற்றர் நீளமாகவும் அமைக்கப்பட்டிருந்த மண்அணையை நாம் கைப்பற்ற வேண்டியிருந்தது. இந்த அணைக்குப் பின்புறமாக இடைக்கிடையே பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறு குழுக்களாகப் பிரிந்த இராணுவத்தினர் மண் அரணைக் கைப்பற்றிய அதேசமயம் பதுங்கு குழிகளுக்குள்ளும் பாய்ந்தனர். அரண் எமது வசமானதும் புல்டோஸர் கொண்டு அரணின் ஒரு பகுதி திறந்து விடப்பட்டது. இதன் வழியாக மக்கள் வெளியே வரத் தொடங்கினர்.
இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் அரை மணிநேரமே சென்றது. ஒரே நேரத்தில் சுமார் ஐயாயிரம் பொதுமக்களை மீட்டெடுத்த நாம் அவர்கள் எம்மை நோக்கி ஓடிவரத் தொடங்கினர். குறித்த சில மணிநேரத்திற்குள் அது பல ஆயிரங்களாக அதிகரித்தது. இவ்வாறு மக்களின் வருகை அதிகரித்துச் செல்ல செல்ல அதனை தாங்கிக் கொள்ள முடியாத புலிகள் தப்பிவரும் மக்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். அத்துடன் மக்கள் கூட்டத்துடன் கூட்டமாக தங்களது மூன்று தற்கொலை குண்டுதாரிகளை அனுப்பிவைத்த புலிகள் ஆங்காங்கே அதனை வெடிக்கச் செய்தனர். இதனால் 17 உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன் சுமார் 200 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்” என்றும் தெரிவித்தார் அவர்.
சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தது எமக்கு கிடைத்த பாரிய பெற்றியாகவே கருதுவதாகவும் பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
புலிகளின் தலைவர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளே மக்களோடு மக்களாக தங்கியிருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்த அவர் படையினரிடம் சரணடைந்த புலிகளின் முக்கியஸ்தர்களான தயாமாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியவர்கள் தெரிவித்த தகவல் தொடர்பாகவும் விளக்கமளித்தார். இதன் பின்னர் புதுமாத்தளன் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
பரந்தன் சந்தியிலிருந்து ஏ-35 வீதி ஊடாக சென்ற நாம் விசுவமடு, தர்மபுரம், புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை ஆகிய பிரதான நகர்களை கடந்து புதுமாத்தளனை சென்றடைந்தோம். பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு ஆகிய பிரதேசங்களைவிட பரந்தனிலிருந்து புதுமாத்தளன் வரையான பிரதேசத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருந்ததை காணமுடிந்தது. வேகமாக வாகன தொடரணிகள் சென்றதால் அந்தப் பிரதேசம் எங்கும் புழுதி நிறைந்து காணப்பட்டது. வீதியின் இரு ஓரங்களிலும் ஆங்காங்கே இராணுவ வீரர்கள் ரோந்திலும் சுத்திகரிப்பு பணிகளிலும் ஈடுபட்டிருந்ததைக் கண்டோம்.
பரந்தன் சந்தியின் ஆரம்பத்திலிருந்து புதுக்குடியிருப்பு வரையான பகுதியில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த வீடுகள் அலுவலகங்கள், கடைத் தொகுதிகள், மற்றும் கட்டடங்கள் இடிந்து தகர்ந்து காணப்பட்டன. பல கட்டடங்கள் தரைமட்டமாகி யிருந்தன. இது, வன்னியில் மிகவும் உக்கிர மோதல்களில் இந்தப் பிரதேசங்களில் தான் நடைபெற்றிருப் பதற்கான அடையாளமாக இவற்றைக் கொள்ளமுடியும். பனை, தென்னை மரங்கள் குண்டு வீச்சின் உக்கிரத்தில் முறிந்தும் வீழந்தும் காணப்பட்டன. வழியெங்கும் சேதமடைந்த பல வாகனங்களைக் கண்டோம். புலிகள் பாவித்த அதிநவீன கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இடைக்கிடையே கிறிஸ்தவ ஆலயங்களைக் கண்ட எமக்கு ஏனைய பிரதேசங்களில் கண்டதுபோல இங்கே அதிக இந்துக் கோயில்களைக் காணமுடியவில்லை. ஒரு சில கோயில்களே காணப்பட்டன. பின்வாங்கிச் சென்ற புலிகள் அங்குள்ள அனேகமான சிறிய மற்றும் பெரிய பாலங்களை படையினரின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் குண்டு வைத்து தகர்த்திருந்தனர். இந்தப் பாலங்கள் அனைத்தையும் இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் துரிதமாக மீள நிர்மாணித்துள்ளனர். இந்த பாலங்கள் ஊடாகவே நாங்கள் பயணித்தோம்.
இடைக்கிடையே புலிகளின் பல்வேறு பணிமனைகளையும் காணக்கூடியதாக இருந்தது. புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து இடது பக்க வீதியூடாக இரணப்பளை புதுமாத்தளன் பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இடிபாடுகளுக்குள்ளான ஒரு கட்டடத்தைக் காட்டி புலிகளின் நீதிமன்றமாகப் பயன்படுத்தப்பட்ட கட்டடம் இது என்று எம்மிடம் கூறினார்.
ஒரு கட்டத்தில் அகன்ற பாதை முடிவடைந்து மண் பாதை ஆரம்பித்தது. நாம் இறங்கி வேறு வண்டிகளில் ஏறிக்கொண்டோம். அங்கிருந்து இரணைப்பாளை நோக்கி பயணம் ஆரம்பமானது. சற்று தூரம் சென்று கொண்டிருக்கும் போது இடைக்கிடையே கால்நடைகள் நடமாடுவதையும் செல்லப் பிராணிகள் உலாவித் திரிவதையும் கண்டோம். இங்கு மக்கள் நடமாட்டங்கள் ஏதும் இருக்கிறதா? கால் நடைகளைக் கண்டோமே! என்று படை வீரர்களிடம் வினவிக் கொண்டிருக்கும் போது வேகமாக சென்று கொண்டிருந்த வாகனத் தொடரணிகள் திடீரென நின்றன. அனைவரையும் இறங்கி வருமாறு கூறினார்கள். நாங்கள் நினைத்தது போன்று குறுக்கு வீதி ஒன்றின் ஊடாக கைகளில் குழந்தைகளையும், தங்களது மூட்டைகளையும் காவிக் கொண்டு பொது மக்கள் வருவதைக் கண்டோம். இது இரணப்பளைச் சந்தி எனப் பின்னர் அறிந்து கொண்டோம்.
“இவர்கள் இன்று மீட்டெடுக்கப்பட்டவர்கள் நீங்கள் இவர்களுடன் கதைத்துக் கொள்ளலாம்” என்று பிரிகேடியர் குறிப்பிட்டார். அவர்கள் மூட்டை முடிச்சு மற்றும் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தர். சோர்வும் சோகமும் முகங்களில் அப்பிக் கிடந்தன. அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பாவம், எவ்வளவு துயரங்களைச் சந்தித்திருப்பார்கள்?
இதற்கிடையே இந்த மக்களை வரவேற்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நன்கு தமிழ் பேசக் கூடிய இராணுவ வீரர்கள் “இங்கே வாருங்கள்... வாருங்கள் அம்மா.... சாப்பிட்டீர்களா?” என்று இன்முகத்துடன் கரங்களை நீட்டி வரவேற்றுக் கொண்டிருந்தனர். முதலாவதாக அவர்களுக்கு பிஸ்கட் பக்கட்டுக்களையும், உலர் உணவுகளையும் வழங்கினார்கள். இன்னும் சிலருக்கு குடிப்பதற்காக தண்ணீர் போத்தல்களையும் மென்பான பக்கட்டுகளையும் வழங்கினார்கள். இவர்களை நமது ஊடகவியலாளர்கள் சுற்றி வளைத்தனர். எமது கேள்விகளுக்கு பதிலளித்த ஒரு வயோதிப பெண்மணி, என்னத்தைச் சொல்ல என்பது போல விரல்களை விரித்தார். தன்னைத் தயார்ப்படுத்தும் வகையில் எச்சிலை விழுங்கியவர் கண்களின் கண்ணீர் வழிந்தோடியது.
ஒரு குழந்தையை கையில் ஏந்திய வண்ணம் வந்த பெண்மணியிடம் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டேன். அவரும் கவலை நிறைந்த முகத்துடன் “நாங்கள் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம், எம்மை மீட்டெடுத்தது போன்று எஞ்சியுள்ள சகோதரர்களையும் மீட்டெடுத்துத் தர வேண்டும்” என்றார்.
இன்னுமொரு பெண்மணி, படையினர் எமக்கு செய்த உதவியை நாங்கள் எமது வாழ்நாளில் ஒரு போதும் மறக்க ஷிநிகி!ஜி என்றும் இப்பொழுது உங்கள் முன் பேசுவதற்காவது எமது உயிரை பாதுகாத்தவர்கள் அவர்கள் தான் என்று கூறியதோடு படையினரின் நடத்தை, இதுவரை புலிகள் படையினரையும், தென்பகுதி மக்களையும் பற்றித் தவறான தகவல்களையே எமக்கு ஊட்டிவந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது என்று சொன்னார்.
பெரிய தம்பளை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட பெண் ஒருவரை சந்தித்தோம். நீங்கள் எவ்வாறு இதில் சிக்கிக் கொண்டீர்கள் என்று கேட்டேன், “நாங்கள் மடு கோவிலுக்கு வந்த நிலையிலேயே மோதல்கள் உக்கிரமடைந்தது. படையினர் முன்னேறிவரவும் எங்களைப் பின்வாங்கிச் செல்லுமாறு புலிகள் கூறினர். பாண்டிக்குளம், மல்லாவி என்று படிப்படியாக அழைத்துச் செல்லப்பட்ட நான் இறுதியாக பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கினேன். மாத்தளன் பகுதிக்கு வந்து தற்பொழுது ஒன்றரை மாதங்களாகுது. அங்கு எமக்கு உண்ண உணவும், உடுக்க துணிகளும் இருக்கவில்லை. நானும் எனது பிள்ளைகளும் மிகவும் கஷ்டப்பட்டோம்” என்றார் அப்பெண்மணி.
இவர்களில் சிலர் சிங்களம் பேசக் கூடியவர்களாக இருந்தனர். இதற்கு காரணம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமையாகும் என்று கூறினார். இது இவ்வாறு இருக்க, அங்கே ஒரு பகுதியில் மக்கள் மிகவும் குதூகலத்துடன் நீராடுவதைக் காணக்கூடியதாக இருந்தது. மாதக் கணக்காக கூடாரங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் உணவு, நீராடும் வசதிகளின்றி சிக்கித் தவித்துக் கொண்டிருந்த இந்த அப்பாவி மக்கள் படையினரை நோக்கி வந்தவுடன் உண்ண கொடுப்பது போன்றே நன்றாக நீராடவும் வசதிகளை படையினர் செய்து கொடுத்துள்ளனர்.
பாலைவனம் போன்று காட்சியளிக்கும் அந்தப் பகுதிக்கு படையினர் பவுசர்கள் மூலம் நீரைக் பல சிரமங்களுக்கு மத்தியில் கொண்டு வந்து பாரிய தாங்கிகளில் நிரப்ப அங்குள்ள சின்னஞ் சிறார்களும், பெண்களும், ஆண்களும் சந்தோசமாக குளித்து மகிழ்ந்ததை காணக்கூடியதாக இருந்தது. இன்னும் சிலர் மரத்திற்கு அடியிலும், ஆங்காங்கேயும் இருந்த வண்ணம் தங்களது பொருட்களை ஒன்று சேர்ப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடும்பங்களாக மரத்தடியில் ஒன்றிணைந்த சிலருக்கு மத்தியில் நாய், பூனை, ஆடுகளும், அதேபோன்று மாடுகள் அலைந்து திரிந்து கொண்டிருப்பதையும் காணமுடிந்தது.
அதாவது தங்களது உயிரை பணயம் வைத்து புலிகளிடமிருந்து தப்பி தங்களது குழந்தைகளையும், சின்னஞ்சிறார்களையும் பல சிரமத்திற்கு மத்தியில் அழைத்து வரும் இவர்கள் தாங்கள் வளர்த்த செல்லப் பிராணிகளையும் எடுத்துவர மறக்கவில்லை.
மிகவும் கொடுமைகளை அனுபவித்த பெற்றோர்களும், பெரியோர்களும் மிகவும் கவலைகளுடன் காட்சியளித்த போதிலும் சில சின்னஞ் சிறார்கள் குதுகலமாக விளையாடித் திரிந்து கொண்டிருந்தனர்.
எமக்கு எது இல்லாமல் போனாலும் சரி எமது உயிராவது மிஞ்சியிருப்பது பெரிய விடயமாகும். எந்த தொழிலை செய்தாவது நானும் எனது குடும்பமும் உயிர் வாழ்ந்து கொள்வோம் என்றார் ஒருவர். அவரது தோற்றமோ முகம் நிறைய அடர்ந்த தாடியும், முற்றிலும் தூசுபடிந்த உடையுமே அணிந்திருந்தார் ஒரு வழிப்போக்கர்.
எம்மை படைவீரர்கள் பாதுகாப்பாக மீட்டெடுத்து உபகாரம் செய்தது போன்று அங்கு சிக்கியுள்ள எமது பிள்ளைகளையும், குடும்ப உறவினர்களையும், ஏனைய சகோதரர்களையும் பாதுகாத்து மீட்டெடுத்து தாருங்கள் என்பதே அங்கு வந்த பலரது கருத்தாகவும் வேண்டுகோளாகவும் இருந்தது.
புதுமாத்தளன் நோக்கிச் செல்ல வேண்டி இருந்ததாலும், நேரம் போதமையினாலும் சுமார் பத்து பதினைந்து நிமிடங்களே இந்த பொது மக்களுடன் பேசக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. புதுமாத்தளனை நோக்கி முன்னேறிச் செல்ல செல்ல மிகவும் குறுகிய மண் வீதிகளே இருந்தது. இரணப்பளை சந்தியிலிருந்து முன்னோக்கிச் சென்ற நாங்கள் இடைக்கிடையே அங்கு தென்னந்தோப்புக்கள் இருந்ததை கண்டோம்.
இந்த தோப்பினிலேயே புலிகள் பெருந்தொகையான ஆயுதங்களையும், பெற்றோல், டீசல் போன்றவற்றையும் நிலத்திற்குக் கீழ் புதைத்தும், மறைத்தும் வைத்திருந்தனர் என்றார் எம்முடன் வருகைதந்த படைவீரர் ஒருவர். இடைகிடையே சின்னஞ்சிறிய களப்புக்கள் தென்பட்டன. பின்னர் மிகவும் குறுகிய வீதி ஒன்றின் ஊடாக வேகமாக சென்று கொண்டிருந்த எமது வாகனத் தொடரணி நிறுத்தப்பட்டது.
களப்புக்கள், காடுகளுக்கு மத்தியில் ஒரு பாலைவனத்தில் இருப்பது போன்ற ஒரு சிந்தனை எமக்குள் தோன்றியது. இதுதான் பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் அறிவித்திருந்த பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சர்வதேச அறிமுகம் பெற்றுள்ள புதுமாத்தளனாகும். மிகவும் பறந்த விரிந்த பாலை வெளியில் தூரத்தில் ஆங்காங்கே கூடாரங்களும், சின்னஞ்சிறிய வீடுகளையும் காணமுடிந்தது. இந்தப் பிரதேசம் எங்கும் படைவீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
“இது தான் மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கைகளின் போது நாங்கள் கைப்பற்றிய மண் அரணாகும். இந்த அமைப்பிலேயே இதனைக் கைப்பற்றினோம் என்று நேரில் அமைவிடங்களை எமக்கு காண்பித்த வண்ணம் விளக்கமளித்தார் பிரிகேடியர் சபேந்திர சில்வா.
புதுமாத்தளனில் இருந்த வண்ணமே அதன் தென்பகுதியை நோக்கி கையை நீட்டி காண்பித்த பிரிகேடியர் சபேந்திர சில்வா அதோ அங்குதான் தற்பொழுது பாதுகாப்பு முன்னரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு அப்பால் உள்ள மிகவும் குறுகிய பிரதேசத்தையே புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அந்தப் பிரதேசத்திலிருந்து இரு வகையான சத்தங்களும், புகை மூட்டமும் காணப்பட்டது. இந்தச் சத்தங்கள் என்னவென்று வினவியதற்கு ஒன்று பாதுகாப்பு வலயத்தின் தென்பகுதியிலிருந்து கனரக ஆயுதங்களை பயன்படுத்தி பொது மக்களின் வருகையை தடுத்து நிறுத்தும் வகையில் புலிகளால் ஏவப்படும், பீரங்கி குண்டுகளின் சத்தம் என்னும். மற்றைய சத்தம் மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றி அதனை எமது படைவீரர்கள் செயலிழக்கச் செய்யும் சத்தமாகும் என்றார் அவர். பல கோணங்களிலும் இருந்தவண்ணம் செய்திகளை சேர்த்துக் கொண்ட பின்னர் அங்கிருந்து புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை நோக்கி நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம்.
பின்னர் மீண்டும் கப் வண்டிகள் மூலம் ஏ-35 பிரதான வீதி, புதுக்குடியிருப்பு, விசுவமடு, பந்தன் சந்தியை வந்தடைந்த நாம் ஏ-9 வீதி ஊடாக கிளிநொச்சி நகரை சென்றடைந்தோம். பின்னர் வவுனியா விமானப்படைத் தளத்தை வந்தடைந்து அங்கிருந்து கொழும்பு திரும்பினோம்.
(தினகரன்)






0 விமர்சனங்கள்:
Post a Comment