பிரபாகரனின் 12 வயது மகனையே சுட்டுக்கொன்ற பேரினவாத பாசிட்டுகள்
புலிகள் சிறுவர்களை தம் படையணியில் இணைத்ததற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், 12 வயது அப்பாவி சிறுவனை அவனின் தந்தையின் முன் படுகொலை செய்ததையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் படுகொலையை, மனிதவுரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கை, மீள உறுதி செய்துள்ளது.
பேரினவாத பாசிசம், இதில் எப்படிப்பட்ட குற்றத்தை இழைத்துள்ளது.
1. சரணடைந்தவர்களை படுகொலை செய்து, பாரிய யுத்த கிரிமினல் குற்றத்தைச் செய்துள்ளது
2. குழந்தைகளை படுகொலை செய்து, குழந்தைக்கு எதிராக சதி மற்றும் சித்திரவதையுடன் கூடிய கொடூர குற்றத்தை செய்துள்ளது.
இப்படிப்பட்ட பாரிய குற்றங்கள் பல. இதை மூடிமறைக்க அரசு நடத்தும் பாசிசக் கூத்தோ, இலங்கையில் ஊடகச் சுதந்திரத்தை இல்லாததாக்கியுள்ளது. தமக்கு எதிரானவர்கள் அனைவரையும், போட்டுத் தள்ளுகின்றது.
'ஜனநாயக" மற்றும் புலித் தேசிய பாசிச தமிழ் ஊடகவியல் கண்ணை மூடிக்கொண்டு அரசியல் விபச்சாரம் செய்கின்றனர்.
இது நடக்கவில்லை, இதற்கு ஆதாரமில்லை என்கின்றனர் சிலர். பலர் புலிகள் இது போன்றவற்றை செய்தனர் என்று கூறி, இதை நியாயப்படுத்த முனைகின்றனர். இதற்கு எதிராக குரல் கொடுக்கவும், போராடவும் வேண்டியதில்லை என்று எதிர்வாதம் செய்கின்றனர். வேறு சிலர், இதற்காக நாம் குரல் கொடுத்தால், இது புலியைப் பலப்படுத்தும் என்கின்றனர். மற்றொரு பகுதி இதுவல்ல, இன்றைய வர்க்க அரசியல் என்கின்றனர். அரசுக்கு எதிரானது, புலிக்கு சார்பானதாக மாறும் என எம்மைத் திருத்தி எமக்கு வழிகாட்ட முனைகின்றனர். புலியை அப்படியே நாம் எம் பின்னால் வென்றெடுக்க முனைவதாக கூட, சிலர் எண்ணி எதிர் வினையாற்றுகின்றனர்.
இப்படி இந்தக் குற்றங்களை மூடிமறைத்து, பாசிச அரசை பாதுகாக்கின்ற அரசியல் எங்கும் பூத்துக் குலுங்குகின்றது. ஜனநாயகம் முதல் வர்க்க அரசியல் வரை, இந்த கூத்து அரங்கேறுகின்றது.
அரசுக்கு எதிரான அரசியல் என்பது, கள்ள மௌனம் செய்கின்றது. கண்டும் காணாமல் இருக்க முனைகின்றது. அரசுக்கு எதிரான போராட்டத்தை தடுக்கும் வண்ணம், எமக்கு எதிரான நிர்ப்பந்தங்கள் கூட, பல வழிகளில் தருகின்றனர். இதை எல்லாம் கடந்து, நாம் போராட வேண்டியுள்ளது.
புலிகள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். அவர்கள் கண் முன்னால், அவர்கள் குழந்தைகள் கொல்லப்பட்டனர். பலத்த சித்திரவதை செய்யப்பட்டனர். பாலியல் உறுப்புகள் சிதைக்கப்பட்டன. பாலியல் ரீதியாக வன்முறைக்குள்ளானார்கள்.
ஜனநாயகத்துக்கு திரும்பியதாக கூறிக்கொள்ளும் கருணா உடன் இருக்க, இவை நடந்தேறியுள்ளது. பல்கலைக்கழக அறிக்கை, இதில் சிலவற்றை உறுதி செய்துள்ளது.
புலிகளும் இது போன்றவற்றை செய்தவர்கள் என்பதால் மட்டும் இவற்றை யாரும் நியாயப்படுத்த முடியாது. இதைக் கண்டும் காணாமல் நாம் போகமுடியாது. அன்று புலிகள் இவற்றைச் செய்தபோதும், நாம் அதை எதிர்த்து நின்றோம். இன்று இதை அரசு செய்கின்றது. இதையும் நாம் தனித்து எதிர்த்து நிற்கின்றோம்.
இப்படிப்பட்ட பாசிச அரசு, புலிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதாக கூறுவது ஊர் உலகத்தை ஏமாற்றுவது தான். இறந்த பெண்களைக் கூட பாலியல் ரீதியாக நிர்வாணப்படுத்தி, அதை ரசித்து உளவியலால் புணர்ந்தவர்களை பாதுகாக்கும் அரசுதான், இந்த அரசு. இவர்கள் கையில் சிக்கிய பெண்கள் எந்த வதையை அனுபவித்திருப்பார்கள் என்பதை, நாம் சொல்லித்தெரியத் தேவையில்லை.
இந்த உண்மைகளை மறுக்கும் எவரும், சுயாதீனமான ஒரு விசாரணையை நடத்தக்கோர வேண்டும். இதற்கு வெளியில் யாரும், உண்மையாகவும் நேர்மையாகவும் இதை விவாதிக்க முடியாது.
பி.இரயாகரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment