டக்ளஸ் தேவானந்தா ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளார்
மக்களின் ஆரவாரமான வரவேற்பிற்கு மத்தியில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏ-9 தரைவழிப் பாதையின் ஊடாக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
யாழ்.மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியான அமைச்சர் ஒருவர் கொழும்பிலிருந்து தரைவழிப் பாதையாக யாழ்ப்பாணம் சென்றடைந்த முதலாவது வரலாற்றுப் பதிவு இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலிருந்து தனது வாகனத்தின் மூலம் பயணத்தை ஆரம்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவிலுள்ள தமது பணிமனையில் அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வவுனியாவைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும் அவருடன் கலந்துரையாடி எதிர்வரும் நகரசபைத் தேர்தலில் தமது ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று காலை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கித் தமது பயணத்தினை ஆரம்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏ-9 பாதையிலுள்ள முக்கிய இடங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் அந்தப் பிரதேசப் படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொண்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட அப்பகுதிகளில் புனர்நிர்மாண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இன்று நண்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சுப் பணிமனையினை வந்தடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு தமது தேவைகள் மற்றும் கோரிக்கைகளுடன் வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.






0 விமர்சனங்கள்:
Post a Comment