ஈழப் படுகொலை: பாதுகாப்பு கவுன்சிலில் இன்று பான் கி மூன் விளக்கம்
ஐ.நா.: ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதிக்கவுள்ளது. அப்போது பொதுச் செயலாளர் பான் கி மூன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
இதில் பான் கி மூன் கலந்துகொண்டு இலங்கைப் போர் மற்றும் உயிரிழப்பு குறித்து விளக்கமளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் டைம்ஸ் இதழ்தான், உரிய புகைப்பட ஆதாரங்களோடு 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் மிருகத்தனமாக கொன்று கடற்கரையில் சமாதி ஆக்கப்பட்டதாக முதன் முதலில் செய்தி வெளியிட்டு உலகை அதிர வைத்தது.
ஆனாலும் படு சாவாதனமாக இதை இலங்கை மறுத்து விட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறி விட்டது இலங்கை.
மேலும், இதுபற்றிய உண்மைள் பான் கி மூனுக்கும், அவரால் தூதராக கொழும்புக்கு அனுப்பப்பட்ட இந்தியரான விஜய் நம்பியாருக்கும் இது நன்கு தெரியும் எனவும், ஆனாலும் இருவரும் சேர்ந்து இதை மறைத்து விட்டதாகவும் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
விஜய் நம்பியார் கிட்டத்தட்ட இனப்படுகொலைக்கு துணை போயுள்ளார் என்றும் டைம்ஸ் கூறியுள்ளது.
ஐ.நா. சபையின் இத்தயை போக்கிற்கு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விளக்கமளிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும், நடுநிலையாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இன்று சாதாரண முறையிலான விவாதம் நடைபெற இருக்கிறது.
பான் கி மூன் இலங்கை செல்வதற்கு முன்பு நடந்ததை போன்றே இந்த விவாதமும் நடைபெறும் என ஐக்கிய நாடுகள் சபை செய்திகளை வெளியிடும் 'இன்னர் சிட்டி பிரஸ்' தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கலந்துகொண்டு அண்மையில் தாம் இலங்கையில் மேற்கொண்ட சுற்றுப் பயணம் குறித்தும், இலங்கை இனப் படுகொலை குறித்து தமக்குத் தெரிந்த செய்திகள் குறித்தும் விளக்கமளிப்பார்.
இதேபோல இலங்கையில் போர் முடிவதற்கு முன்பு அங்கு சென்று திரும்பிய விஜய் நம்பியார், அப்பயணம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு விளக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகள் வலியுறுத்திய போதிலும் அதனை ஏற்று விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
பின்னர் கடுமையான வலியுறுத்தலுக்குப் பின்னரே அவர் விளக்கம் அளித்தார் என்பது நினைவிருக்கலாம்.
இன்றைய கூட்டத்தில், 20 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து பான் கி மூன் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றைய விவாதத்துடன் இலங்கைப் பிரச்சினை குறித்து இனியும் விவாதிக்காமல் பாதுகாப்பு கவுன்சில் நிறுத்திக் கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழர்கள் படுகொலை மற்றும் அகதிகள் முகாமிலிருந்து 13 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்தும்படி ஐ.நா. சபையை பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment