நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றியளிக்காது: கருணா அம்மான்
வெளிநாடுகளில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்களால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் திட்டம் ஒருபோதும் வெற்றியளிக்காது என தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறினார்.
“குமரன் பத்மநாதனும் ஏனைய தலைவர்களும் கனவு காண்பதற்கே முயற்சிக்கின்றனர். நாமோ அல்லது சர்வதேச சமூகமோ அவர்களின் கனவுகள் நனவாவதற்கு அனுமதிக்கப் போவதில்லை” என மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உதவுவார்கள் என நம்பிக்கைவெளியிட்ட கருணா அம்மான், அவர்களின் உதவிகள் கிடைக்குமாயின் எந்தவிதமான சிரமுமின்றி இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் விரைவில் மீள்குடியமர்த்த முடியும் எனக் கூறினார்.தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியிருப்பதால், தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் வெளிவிவகாரப் பொறுப்பாளர் பத்மநாதன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதற்காக விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவிருந்த விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் செயற்குழுவொன்றை அமைத்திருப்பதாகவும் பத்மநாதன் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் விடயம் பற்றி இலங்கையில் வாழும் தமிழர்கள் எவருடனும் கலந்துரையாடப்படவில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment