மனிதக் கொடுமையினூடாகப் பயணித்த இளம் தாயின் நேரடிச் சாட்சியம். : தொகுப்பு குமாரி
”கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் - இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம்.”
தமது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பல இடங்களில் தங்கி சகல உடமைகளையும் இழந்து ஆனால் உயிர்தப்பி தற்போது முகாமில் இருக்கும் ஒரு இளம்குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்நேரடி உரையாடலில் அவர்கள் பகிர்ந்துகொண்ட, அவர்கள் அனுபவித்த துன்பங்கள் மனக்கசப்புகள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பே இக்கட்டுரையாகும்.
”கிளிநொச்சியில் ஏ9 அருகாமையில் அமைந்த எங்கள் வீடு, வசதிகளுடன் கூடிய பெரியவீடு. இவ்வீட்டை தம்மிடம் தரும்படி பலதடவைகள் புலிகள் எங்களிடம் கேட்டனர். ஜந்துபேரைக் கொண்ட எமது குடும்பத்திற்கு அறைகளற்ற குடிசை வீடுகளை பதிலாகக் காட்டினார்கள். உறுதியை எழுதி அவ்வீட்டை எம்மிடமிருந்து எடுப்பதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. எப்படியும் எமதுவீடு பறிபோய்விடும் என்ற பயம் எமக்கிருந்தது. எனவே இதை வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனத்தினருக்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு டிசம்பர் 2008 நடுப்பகுதியில் நாம் அக்கராயன் நோக்கி இடம்பெயர்ந்தோம்.
தொழில் - கம வசதிக்காகவும் அக்கராயன் போனோம். அங்கு எமக்குக் கிடைக்கும் மாத வருமானத்தைவிட அதிகமான பணத்தை புலிகள் அறவிடுவார்கள். என்றுமே புலிகளுக்கு இதைச் சொல்லிக்கொள்ள முடிவதில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் தரவுமில்லை. தாம் நினைத்ததை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். இதன் காரணமாகவே தொழில்துறைகள் நஷ்டப்பட்டு அழிந்து போனது பலருடைய அனுபவங்கள். ஏ9 பாதையை அண்மித்த வியாபாரத் தளங்களின் வியாபாரிகள் இதற்கு நல்ல உதாரணம். எமது தொழில்துறைகளை அழித்தது மட்டுமல்ல கிளிநொச்சிக்கு இராணுவம் வருகின்றதென எவ்வித ஆயத்தங்களோ முன்னறிவிப்போ இன்றி உடனடியாக எம்மை வற்புறுத்தி வெளியேற்றியமை மிகவும் கொடுமையானது.
கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் - இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம். வெளியேறிய நாட்களிலிருந்து பல இடங்களில் தங்கினோம். எம்மிடமிருந்த உடமைகள் உடுப்புகள் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு இடத்திலும் தொலைத்தோம். குண்டுச் சத்தம் அருகாக கேட்கையில் பயத்தில் பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு ஓடுவோம். திரும்பி வந்து பார்க்கையில் எமது பொருட்கள் களவாடப்பட்டிருக்கும். எமது அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் இழந்தோம். இவையாவும் எமது மக்களுக்கான எமது தமிழ் இனத்திற்கான விடிவைத் தேடித்தரும் என்று நம்பினோமோ? இல்லையோ? இந்த வழியால் போய்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயநிலை எமக்கு.
இலங்கை அரசும் இராணுவமும் எமது எதிரியா? அல்லது நண்பனா? நாம் என்றுமே பரீட்சித்துப் பார்க்கவில்லை. ஆனால் எம்மீது விழும் குண்டுகள் எமது எதிரிகளே. இது யாரிடமிருந்து வருகிறது என்றும் எமக்கு தெரியாது? ஆனால் இலங்கை இராணுவத்தின் கொடுமை என்ற பேச்சிலிருந்து நாம் விலகுவதில்லை. குண்டு வரும் திசை பார்க்க எமக்கு தெரியாது. எல்லா திசைகளுமே ஒரே திசையாகவே தெரிந்தது.
இடம்விட்டு இடம்மாறுவது கூட யாரோ சொல்வார்கள், மக்கள் அசைவார்கள் நாமும் போவோம். ஏன் மாறுகின்றோம்? காரணம் எப்போதும் ஒன்றாகவே இருந்தது. அது இலங்கை இராணுவம் முன்னேறுகின்றது என்பதே. நாம் எங்கே போகிறோம் என்று யாரும் கேட்பதில்லை. விலகிப்போகிறோம். செல்விழுந்தால் ஓடுவோம். யார்மீது விழுந்தது? அவரது நிலை என்ன? திரும்ப வந்து பார்த்தது கிடையாது. விலத்திப் போகிறோம். புதிய மண், புதிய கிராமம், புதிய குறிச்சி நோக்கி போகிறோம். ஒவ்வொரு புதிய இடங்களிலும் ஒவ்வோரு புதிய பிரச்சினைகள் வரும். தண்ணீர் கிடையாது. தண்ணீர் கிடைத்தால் மரநிழல் கிடையாது. இருந்த பிறகு தான் தெரியும் நாம் கடியெறும்பின்மேல் இருந்து விட்டோம் என்று. ஒழுங்கான நித்திரை கிடையாது. நித்திரையானால் மீண்டும் கண்விழிப்பமோ தெரியாது என்ற மனப்பயம் எப்போதுமிருக்கும். எவ்வளவு கேவலமாகவெல்லாம் நாம் நடத்தப்பட்டோம்.
பாரதிபுரம் ரெட்பார்னா விஸ்வமடு உடையார்கட்டு குரவயல் இருட்டுமடு அம்பலவன்பொக்கணை மாத்தளன் ஆகிய கிராமங்களைத் தாண்டி நந்திக்கடல் அருகே வந்தோம்.
நாம் கிளிநொச்சியை விட்டு வெளியேறும் போது ஒரு உழவுயந்திரம் ஒரு லொறி சமையற்பாத்திரங்கள் மாற்று உடைகள் நகைகள் பணம் எம்மிடம் இருந்தன. இன்று எம்மிடம் எந்த உடமைகளோ பொருட்களோ இல்லை. உடுத்த உடுப்பும் கையில் உள்மாற்று உடுப்புகளும் மட்டுமே மிஞ்சியிருந்தது.
நாம் இத்தனைகளையும் ஏன் இழந்தோம்? எமக்கு தெரியவில்லை? இத்தனை கஸ்டங்களை அனுபவித்தோம் - எதற்காக என்றும் தெரியவில்லை. இது எதிர்காலத்தில் எதை தரப்போகின்றது? என்பதுவும் எமக்கு தெரியவில்லை. பசி களைப்பு. சாப்பாடு தண்ணி எங்கு கிடைக்கும் என்பதைத்தவிர வேறெந்த சிந்தனையும் எம்மிடம் இருக்கவில்லை.
கடந்த 3 ,4 மாதங்களாக நடந்த இந்த மக்கள் யாத்திரையில் எத்தனை நாட்கள் உணவு கிடைத்தது என்று எம்மால் கூற முடியும். எந்த இடங்களில் எந்த மரங்கள் காபய்க்கவில்லை. கனிகள் இல்லை என்பதுவும் எமக்கு தெரியும். எமக்கு உணவுதர யாரும் இல்லை! பாதை சொல்ல யாரும் இல்லை! நடைபயணம் மட்டும் வெற்றிகரமாக முன்னேறியிருந்தது.
குழந்தைகளும் நாமும் படும் அவலங்கண்டு மாத்தளன் பகுதியிலுள்ள ஒரு பெரியவர் நாம் தப்பி ஓடுவதற்கு உதவி புரிந்தார். இவரது வீட்டில் புலிகளுக்குத் தெரியாமல் ஒளித்திருந்து பலர் இந்த வழியாக நந்திக்கடலில் நீந்தி இராணுவம் உள்ள பக்கத்திற்கு போயிருந்தனர். புலிகளின் சென்றி பொயின்ற்றுக்கு பக்கத்தில் உள்ள வீடுகளில் மக்கள் ஒளித்திருந்து புலிகளின் சென்றி பொயின்ரில் அவர்கள் இல்லாத வேளைகளில் நந்திக்கடலினூடாக தப்பியோடுவார்கள். சிலசமயங்களில் புலிகள் வேறு இடத்தில் இராணுவத்தினரை மறிப்பதற்காக ஓடும்போதும் மக்கள் அலை அலையாக நந்திக்கடலில் இறங்கி ஓடுவது வழக்கமானது. பொதுவாக இரவு வேளைகளிலேயே தப்பியோடுவர்.
நந்திக்கடல் அருகே புலிகளின் நடமாட்டங்களை மற்றவர்கள் போல் நாமும் அவதானித்துக் கொண்டிருந்தோம். தப்பி ஓடுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது எமக்கு இலங்கை இராணுவத்தின் திசை திட்டவட்டமாக தெரியும். அதை நோக்கி போக வேண்டும் என்பது மட்டுமே எமது இலக்காக இருந்தது.
இராணுவப் பகுதிக்குச் சென்றபின்னர் என்ன நடக்கும் என்றும் எமக்குத் தெரியாது. இலங்கை இராணுவம் உள்ள பக்கம் நோக்கிச் சென்றால் அங்கு எமக்கு தெரிந்த சிலராவது எமக்கு உதவுவார்கள் என நம்பினோம்.
எல்லோரையும் போலவே நாமும் புலிகளின் நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தோம் சிலநாட்களுக்கு முன்பு போல் அல்லாது தற்போது புலிகளின் நடமாட்டம் குறைவடைந்தது. பசியால் கதறும் குழந்தைகளையும் கொண்டு நந்திக்கடலை கடப்பதைவிட வேறு வழியில்லை என புரிந்து கொண்டோம். எனது சகோதரத்தையும் சேர்ந்து வரக் கேட்டேன். அவர்கள் எமக்கு இருப்பதோ ஒரு குழந்தை அந்தப் பிள்ளையை நந்திக்கடலுக்கு பலிகொடுப்பதைவிட இங்கேயே இருப்போம் என்றார். அவரது நியாயம் எனக்கு விளங்கியது. நாம் எமது குழந்தைகளுடன் நந்திக்கடலில் இறங்கினோம். இரவு 06மணி 45 நிமிடம். இரவு கவிழ ஆரம்பித்த நேரம். நாம் வாழ்வா சாவா என்ற தாயக்கட்டையில் இருந்த அந்தகணப்பொழுது இன்றும் நினைவுவரின் பயப்பிடுகிறோம்.
தப்பிஓட முயன்ற பலர் நந்திக்கடலில் இறங்கும்போது இவர்களால் நந்திக்கடல் சிவந்தது. உடல்கள் மிதந்தது. சிலர் தப்பி ஓடினர். எமது குடும்பத்தினருக்கும் எதுவும் நடக்கலாம். என்னவும் நடக்கட்டும் என்று இறங்கினோம். எமக்கு வேறு மாற்றுவழி எதுவுமே இருக்கவில்லை எம்பின்னால் இருந்து துப்பாக்கி ரவைகள் எம்மீது பாய்ந்தது. ஒவ்வொரு சத்தத்துக்கும் குழந்தைகளும் நாமும் தண்ணீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து தலைகள் மட்டும் தண்ணீருக்கு மேல் தெரிய மிருகங்கள் போல் புலிகளிடமிருந்து தப்பித்து ஓடினோம். கடலில் மிதந்த சடலங்கள் இந்தக் கடலை நிரப்பியிருந்ததை நாமும் குழந்தைகளும் பார்த்துக்கொண்டே நகர்ந்தோம். இடையிடையே ஆழமான பள்ளங்களுள் ஆள்மாறி ஆள்மாறி விழுந்தெழும்பினோம். அருகேவந்த மற்றவர்களின் முதுகில் புலிகளின் துப்பாக்கி வேட்டுக்கள் பட்டு அலறும் சத்தம் கேட்கையில் எமக்கும் உயிர்போகும். குழந்தைகள் பல தடவைகள் செத்துப் பிழைத்தனர. இந்தப்பயணம் முன்னைய பயணங்கள் போல் அல்லாத பசிதீர்க்கும் பயணமாகவே இருந்தது. குடிதண்ணீர் கிடைக்கக் கூடிய பயணமாகவே இருந்தது. பல மணிநேர போராட்டத்தின் பின் நள்ளிரவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி கரையேறினோம். நந்திக்கடலின் இறுதிக்கட்டத்தில் அடைமழை எம்மை மிகவும் வருத்திவிட்டது.
புலிகளின் பார்வையிலிருந்து தப்பி கரையேறும்போது இரவு 11மணி 30 நிமிடம் நாம் வரும்திசைகளை மிகதிட்டவட்டமாக அரச இராணுவம் அவதானித்திருந்தது. இந்த இருட்டினுள் இராணுவம் அடிக்கும் பரா லைட் வெளிச்சத்தில் எமது பயணம் தொடர்ந்தது. சிலர் வழிதவறிப் போய் நிலக்கண்ணி வெடியில் அகப்பட்டு உயிரிழந்தார்கள். அங்கங்களை இழந்தவர்களின் அலறும் குரல்களும் இருட்டினுள் அப்பா அம்மா என்று அலறும் குரல்களும் எம்மை மரணத்தின் விளிம்புக்கு எடுத்துப் போய்வந்தது. இவ்வளவு பரிதாபங்களையும் பராலைட் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டு இருட்டில் அசையும் போது நாம் அனுபவித்த மனவேதனையை நினைத்துப் பார்க்கும் போது இப்போதும் அழுகைவருகிறது.
அந்த நள்ளிரவில் எமது கண்ணீரை கழுவிப் போன அடை மழையையும் நாம் மறக்கவில்லை. எமக்கு தப்பியோட உதவிய முதியவரையும் நாம் இன்றும் நன்றியுடன் நினைக்கிறோம்.
இராணுவத்தின் பரா லைட் எமக்கு பாதுகாப்பாகவும் வழிகாட்டியாகவும் புலிகளுக்கு எம்மை காட்டிக் கொடுக்கும் எமனாகவும் அதே நேரத்தில் இருந்தது. ஆனாலும் நாம் இராணுவத்திடம் போய் சேர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். எம்மை மரணத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய புலிகள் எம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை நாம் என்றும் மன்னிக்க மாட்டோம். இது எத்தனை சந்ததிக்கும் நினைவிருக்கும்.
மீண்டும் பசிப்போராட்டம். சாப்பிட ஏதும் இல்லை. இப்போது நாம் புலிகளின் பயறிங் றேஞ்சில் இல்லை (firing range) களைத்துப்போய் கரையில் பல மணிநேரம் இளைப்பாறினோம். குழைந்தைகளின் பசிக்களையை கண்டு கூட இருந்தவர் தான் கொண்டுவந்த ரொட்டியில் இரண்டை எமக்குத் தந்தார். அதை எனது மூன்று குழந்தைகளுக்கும் பிரித்துக் கொடுத்தேன். தூரத்தே இலங்கை இராணுவம் தெரிந்தது. அவர்களை நோக்கி நடந்தோம். கற்களும் முட்களும் நிறைந்தபாதை எமக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
மாத்தளனில் புலிகளின் துப்பாக்கிகள் அவர்களின் கைகளில் எம்மை நோக்கியபடியே இருந்தன. தற்போது இலங்கை இராணுவத்தினரின் துப்பாக்கிகள். ஆனால் அவை அவர்களின் தோளில் இருந்தன. அவர்கள் கைகளில் பிஸ்கட் பைக்கட்டுக்ளுனும் தண்ணீர்ப் போத்தல்களுடனும் எம்மை அணுகினர். சாப்பிட்டோம் தண்ணீர் குடித்தோம். எமது குடும்பம் தப்பித்துக் கொண்டது என்ற நிம்மதியில் மரத்தடியில் அடுத்த 7 மணித்தியாலங்கள் உறங்கிவிட்டோம்.
பின்னர் இராணுவம் எம்மை அகதி முகாமிற்கு அனுப்பி வைத்தது. 7 நாட்களின் பின்னர் மாற்று உடுப்பு கிடைத்தது. கிளிநொச்சியில் ஆரம்பித்த பயணம் பல மாதத்தின் பின்னர் வவுனியா அகதி முகாமில் முடிவடைந்துள்ளது இனி என்ன? எமது எதிர்காலம் என்ன? எல்லாம் கேள்வியாகவே உள்ளது. யாரிடமும் பதில் இல்லை!
தற்போது சைவப்பிரகாச நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளோம். 3600 பேர் இங்குள்ளனர். ஒருசிறு கட்டிடத்தில் 55 பேர்கள் ஒரு வகுப்பறையில் படுத்திருக்கிறோம். இரவில் ஒருவரின் தலையில் ஒருவரின் கால்படுவது சாதாரணமானது எனினும் நித்திரைக்குப் போகிறோம். நித்திரை உண்மையிலேயே நித்திரைதான. நித்திரை விட்டு நிச்சயமாக எழுவோம். என்ற நம்பிக்கையுண்டு.
முகாமில் சாப்பாடு ஒருதரம் என்றாலும் நிச்சயம் கிடைக்கும். சாப்பாட்டின் தரம் என்பதைவிட சாப்பாடு கிடைக்கின்றது. குடிதண்ணீர் கிடைக்கின்றது. குழந்தைகள் ஓடி விளையாடுகிறார்கள்.
முகாமில் மக்கள் தொகை அதிகமாதலால் பலவிதமான அசௌகரியங்களை சந்திக்கிறோம். மலசலகூடமும் அதன் சீர்கேடுகளும் துர்நாற்றங்களும் சகிக்க முடியாது. குளிப்பதற்கு நீண்ட வரிசை காத்திருக்கும். நான் இரவு 12 மணியளவிலேயேதான் குளித்துள்ளேன்.
எமது மருத்துவப் பிரச்சினைகளுக்கு வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். எமது குழந்தை ஒன்றின் இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு விசேட மருத்துவர் ஒழுங்கு செய்யப்பட்டும் தரப்பட்டுள்ளது.
எனது சகோதரர் குடும்பம் இறுதியாக வெளியேறிவர்களுடன் வெளியேறி வேறு முகாமில் உள்ளதாக அறிந்தேன்.
நாம் எப்போது எமது வீட்டுக்குத் திரும்பிப்போவோம் என்ற எதிர்பார்ப்புடன் முகாம்களில் காத்திருக்கின்றோம். எமது முகாமிற்கு டக்ளஸ் பல தடவைகள் வந்துள்ளார் எல்லோருடனும் தனித்தனியே கதைப்பார். நானும் கதைத்துள்ளேன். எமது தேவைகள் பற்றி சொல்லியுள்ளேன் பலர் கடிதங்களாக எழுதிக் கொடுப்பார்கள். நாம் எமது வாழ்விடங்களுக்கு திரும்பிப்போக வழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். தற்போது நாம் இருக்கும் இந்தப் பள்ளிக் கூட அகதி முகாம் மிக விரைவில் உழுக்குளம் 6வது நிவாரணக் கிராமத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அறிகிறோம். பிரிந்த குடும்பங்களை ஒன்றாகச் சேர்க்கின்றார்கள். அதே வேளை தத்தமது வசிப்பிடங்களுக்கு போக விரும்புவர்களது பெயர்விபரங்களும் சேகரிக்கப்படுகின்றது.”
இவ்வாறு இந்த இளம்தாய் தனது நீண்ட கொடுமையான பயணத்தை விளங்கப்படுத்தினார். மிகவும் மனம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வெறுப்புடனும் உள்ள இவர்கள் மனஆறுதலுக்கு யாருடனாவது கதைப்பதற்கு ஏங்குவதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. அவர்கள் இழந்தது சொத்து சுகமல்ல. அவர்களது வாழ்க்கை. தாம் வெளியேறிய பின்னர் நடந்த விடயங்கள் பற்றி கேட்டறிந்தனர். அவர்களுக்கு போர் முடிந்ததை தவிர எவ்வாறு முடிந்தது என்ற விபரம் தெரியாதுள்ளனர். தமது வாழ்வு வளம் தமது எதிர்காலம் எல்லாமே புலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக குறைப்படும் இவர்களுக்கு தமது எதிர்காலத்தை எவ்வாறு ஆரம்பிக்கப் போகின்றோம் என்ற அச்சஉணர்வும் உள்ளது.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நிதிஉதவி அளித்துத்தானே புலிகளை இந்த யுத்தத்தை செய்விக்கத் தூண்டினீர்கள். நாம் இன்று இந்த நிலைமைக்கு வர நீங்களும்தானே காரணம். நாம் எமது வாழ்விடங்களுக்கு போய் வாழ நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள்? எனக் கேட்கிறார்கள். அவர்களிடம் கேள்விகள் மட்டுமே நிறையவே உண்டு.
நன்றி: தேசம் நெற்
0 விமர்சனங்கள்:
Post a Comment