பிரபாகரன் படையினரின் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதான செய்தியில் உண்மையில்லை : பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாபரன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைக்கு உட்படுத் தப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரபாகரனோ அல்லது வேறு எந்தவொரு முக்கிய விடுதலைப் புலி உறுப்பினரோ படையினரால் உயிருடன் கைதுசெய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறியுள்ளதாவது:
"விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரால் கொல்லப்படுவதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு பாரிய சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்று ஊடகங்கள் வாயிலாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் அரசியல்வாதி ஒருவரின் பிரசன்னதுடன் 53 ஆவது படையணி முகாமில் பிரபாகரன் சித்திரவதைப் படுத்தப்பட்டதாகவும் அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. இருப்பினும் இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. இவை அடிப்படையற்றவை.
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற கடும் மோதல்களின் போதே அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உறுதிசெய்துள்ளார். அதுவே உண்மையுமாகும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment