தமிழீழ அரசாங்கம்: இலங்கைவாழ் தமிழர்களுக்குத் தொடர்பில்லை- த.தே.கூ.
நாடு கடந்த தமிமீழ அரசாங்கமொன்றை அமைப்பது என்ற விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவினரின் தீர்மானம் குறித்து இலங்கையில் வாழும் எந்தத் தமிழர்களுடனும் கலந்தாலோசிக்கப்படவில்லையெனத் தெரியவருகிறது.
இவ்வாறான அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழுவில் இலங்கையில் வாழும் தமிழர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லையென இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“எம்முடன் இதுபற்றி ஆலோசிக்கப்படவில்லை. இவ்வாறான அரசாங்கம் குறித்து நாம் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துகொண்டோம்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறினார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர்களுக்கு உதவிவழங்கும் வகையில் அமைந்திருக்குமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மாவை சேனாதிராஜா, இது பற்றி தற்பொழுது கருத்துக் கூறமுடியாது எனவும், அவர்களின் செயற்பாடுகள் குறித்த அறிக்கைகள் வெளியான பின்னரே இது பற்றிய நிலைப்பாடொன்றை எடுக்கமுடியுமெனவும் தெரிவித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடையதோ அல்லது இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் அமைப்பினதோ நேரடி மற்றும் உடனடிக் கவனத்தைப் பெற்றிருக்கவில்லை எனவும் மாவை சேனாதிராஜா கூறினார்.
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியிருப்பதால், தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் வெளிவிவகாரப் பொறுப்பாளர் பத்மநாதன் அறிவித்திருந்தார்.
இதற்காக விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவிருந்த விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் செயற்குழுவொன்றை அமைத்திருப்பதாகவும் பத்மநாதன் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரம், கே.பி.யின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கனவிலேயே அமைக்கப்படுமென இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம அண்மையில் கூறியிருந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment