புலி மறைந்தாலும் புள்ளி இன்னும் மாறவில்லை
பயங்கரவாதத்தின் தனல் இன்னமும் சாம்பலுக்குக் கீழ் கனன்று கொண்டிருப்பதாகவும், அது காட்டுத் தீயைப் போல் பரவுவதைத் தடுக்க அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க வேண்டுமென்றும் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்ற பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நகத்தால் கிள்ளி எறிய முடியாததால் கோடரியைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று. எனினும், புலி மறைந்தாலும், புள்ளி இன்னும் மாறவில்லை. நாட்டைப் பாதுகாப்பதற்க அவசர காலச் சட்டம் நீடிக்க வேண்டியது அவசியமானதென்று பிரதமர் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. புதிய எம். பி. க்களின் சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:- “எவராவது உரியிழந்தால் மகிழ்ச்சியடையும் இனம் இந்த நாட்டில் இல்லை. ஆனால், கொடூர பயங்கரவாதிகள் அழிந்த போது மக்கள் பாற் சோறு பரிமாறி மகிழ்ந்தனர். பயங்கரவாதத்தின் வேர் இந்த மண்ணில் இன்னமும் வியாபித்திருக்கிறது.
அதனை அழித்து விடவேண்டும். வெளிநாட்டில் இருந்து கொண்டு ஒரு நபர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறான கிருமிகளுக்கும் நாம் தக்க பதில் கொடுக்க வேண்டும். பயங்கரவாதத்தால் வயிறு வளர்ப்பவர்களுக்கு பயங்கரவாதம் அழிவது மகிழ்ச்சியைத் தராது. அவர்களுக்கு பணத்தின் மீதுதான் குறி.
இந்தியாவில் பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டி யிருக்கிறார்கள். ஜனநாயகம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எம்மை சர்வதேசத்திற்கு முன் கொண்டு செல்ல சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை அவ்வாறு செல்வ தற்கு எவருக்காவது உரிமை இருக்கிறதா?
பயங்கரவாதத்தில் எமது பெளதீக வளங்களும் உயிர்களும் அழிந்தன. இவையெல்லாம் நாம் பிறந்த மண்ணின் சமூக, பொருளாதார அபிவி ருத்திக்குப் பயன்படவிருந்த வளங்கள்தானே? நாமும் மீண்டும் புதிதாக எழுந்து நிற்கத் தயார்.
கல்லடி பாலத்தின் கீழ் பாட்டுப்பாடும் மீன்களின் இசை வெளியில் கேட்க வேண்டும். நாம் ஒரு கொடியின் நிழலின் கீழ் ஒன்றுபட வேண்டும் எமது படைவீரர்கள் பயங்கரவாதிகளின் கண்ணி வெடியால் இன்னமும் காயமடைந்து வருகிறார்கள். எமது பயணத்திற்கான தடைகளைக் களைய வேண்டும். அதற்கு அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்” என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment