வெளிநாட்டிலுள்ள கூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஒகஸ்ட் 8ஆம் மாதம் நடைபெறவுள்ள நிலையில் நீண்டகாலமாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாடு திரும்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அவ்வாறு நாடு திரும்பாதவர்களுக்குப் பதிலாகப் புதியவர்களை நியமிப்பது குறித்துக் கூட்டமைப்பினர் ஆராய்ந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம்,கஜேந்திரன், என்.கே.ராஜலிங்கம் ஆகியோர் நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்.
இவர்களில் சிலருக்கு நாடாளுமன்றத்தில் விடுமுறை பெற்றுக் கொடுப்பதில் இங்கிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
விடுமுறை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அவர்களுக்கு விடுமுறை வழங்கக் கூடாது எனவும் நாடாளு மன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியிருந்ததுடன், நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வெளிநாடுகளில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திய அத்தாட்சிப் பத்தி ரத்தை கொடுத்து விடுமுறை பெற வேண்டிய நிலைக்குக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே வெளிநாடு சென்று நீண்டகாலமாக நாடு திரும்பாதவர்கள் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூடி ஆராய்ந்திருப்பதுடன், உடனடியாக நாடு திரும்பாதவர்களுக்குப் பதிலாகப் பொருத்தமானவர்களை நியமிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையிலேயே கூட்டமைப்பு இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment