கேப்டன் “கருணா நிதி”
புலியின் முகத்தில் சாணியடித்தே தீருவது என்பதில் முழு உலகமும் எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கிறது என்பதை இறுதியில் கலைஞரிடம் “வணங்கிய மண்” தெளிவு படுத்தியிருக்கிறது.
இன விடுதலையா? போராட்டமா? இன உணர்வா? அதெல்லாம் அவர்களிடம் எங்கே இருந்தது? என்று ஒவ்வொரு புலி ஆதரவாளரும் தம்மைத்தாமே கேள்வி கேட்க அவர்கள் நிர்ப்பந்திக்கப்படும் வகையில் உலக அரசியல் நடந்தேறுகிறது.
பேச்சுக்குத்தானும் புலிக்கு அப்படியொரு நினைப்பு இருந்தது என்று ஒத்துக்கொண்டால், புலி எனும் உலகமெங்கும் தடை செய்யப்பட்ட அதுவும் பயங்கரவாத இயக்கமாகத் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கம் தமது 30 வருட கால இருப்புக்கு பல்வேறு உயர் மட்ட அரசியல் தொடர்புகளை பல்வேறு நாட்டில் பேணிப்பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கும், அதை அவர்கள் செய்யாமல் தனிமையில் வெறும் துப்பாக்கியை நம்பி எதையுமே சாதிக்க முடியாது என்பதை ஆகக்குறைந்தது புலித் தலைவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, இப்போது எஞ்சியிருக்கும் முன்னாள் காட்டு மிராண்டிப் புலிகளை இலங்கை அரசு தேடியழிக்கும் இந்தத் தருணத்திலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழீழம் என்று ஒரு தேசம் அமைய வேண்டுமாக இருந்தால் முதலில் அண்டை நாடும் அதற்கடுத்ததாக தாம் சார்ந்த பிராந்தியம் முதல் உலகின் பல்வேறு சக்திகளின் அனுசரணை இல்லாவிடினும் விருப்பம், ஆதரவும் இருந்தால் மட்டுமே முடியும் என்பது புலி ஆதரவாளர்கள் தவிர்ந்த சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த விடயம்.
அப்படி அமைய வேண்டுமானால் தம்மைப் போராட வைக்கும் சித்தார்ந்தம் தெளிவானதாகவும், அதனடிப்படையில் தாம் செய்யும் செயல்கள், எடுக்கும் நடவடிக்கைகள், போரிடும் முறைகள், தாக்குதல் வகைகள் என அனைத்தும் தமது உளத் தூய்மையான போராட்டத்தை வெளியுலகிற்கு கொண்டு செல்வதாக இருந்திருக்க வேண்டும்.
தவிரவும் தம்மை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திப்பதற்காக, அல்லது கூட்டு உடன்படிக்கையில் அப்பாவி உயிர்களைப் பலி கொடுக்க, தாம் விரும்பாவிட்டால் அது தம் இனமாகவே இருந்தாலும் அழித்து விட்டுத் தம் ஏக பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டியே தீருவது என்று தம் போக்கை எப்போது புலி மாற்றிக்கொண்டதோ அப்போதே அது உலகத்தால் நிராகரிக்கப்பட்ட இயக்கமாகியது.
படித்தவனோ படிக்காதவனோ தாம் எதைச் செய்தாலும் அவன் அதை நியாயப்படுத்த மட்டுமே வாய் திறக்க வேண்டும் எனும் பாசிசம் மேலோங்கியதால் தம் சித்தார்ந்தத்தை அவருக்குச் சொல்லி விளங்கப்படுத்தவோ அல்லது அதே மண்ணில் பிறந்திருந்தும், தமிழர்களாக இருந்தும் சட்ட வல்லுனர்களாக, இலங்கை அரசின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களாக இருந்த நீலன் திருச்செல்வம், கதிர்காமர் போன்ற பல தரப்பட்ட உலகறிந்த “தலை” களைப் பாவிக்கவோ முடியாமல் போன வெற்றுச் சித்தார்ந்தம், தம் கொள்கைகளுக்கு உடன்படவில்லை என்று அவர்களை இன்னொரு அப்பாவி உயிரைக் கொடுத்தாவது கொன்றொழித்தது.
எனவே, புலியையும் அதன் சித்தார்ந்தத்தையும் ஏற்றுக்கொண்டோர் தவிர மற்ற அனைவரும் தமிழர்களாகவே இருந்தார்கள் என்றாலும் பயங்கரவாதப் புலிகளிடமிருந்து அன்னியப்பட்டே இருந்தார்கள் என்பது வரலாறு நமக்குக் கற்பித்த பாடம்.
இது புலிகளின் நடைமுறை வங்குரோத்து நிலையாக இருந்த போதே இதற்கான விமர்சனங்கள் எந்தத் தரப்பில் இருந்து எழுந்தாலும் அதற்கு செவி சாய்க்கும் நிலையில் புலி இருக்கவில்லை, அவற்றை மீள் பரிசீலனை செய்யவும் அவர்கள் தயாராக இருக்கவில்லை.
அதற்கான காரணம், அவர்கள் கைகளில் எப்போதும் இருந்த இரும்புத் துண்டங்களும், கழுத்தில் கவர்ச்சிக்காகத் தொங்க விடப்பட்டிருந்த சயனைட் குப்பிகளும் மட்டுமல்ல, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஈழ தேசத்தின் நிலங்களும், அதற்குள் அடக்கப்பட்ட அப்பாவி மக்களும் சேர்ந்தாயாகும்.
உலகில் இருந்து தாம் அன்னியப்படுத்தப்பட்டு விட்டோம் என்பதை புலி ஆதரவாளர்கள் வேண்டுமானால் 2009ம் ஆண்டுதான் உணர்ந்திருக்கலாம், பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? “வன்னியிலிருந்து” செய்தி வருகுதாம் என்று அவிழ்த்து விடப்படும் குரூரப் பொய்கைளை மட்டுமே நம்பி வாழ்பவர்கள்.
ஆனால், புலிகளுக்குமா இது தெரியாமல் போனது? இதை சிறு குழந்தையும் ஏற்றுக்கொள்ளாது. புலிக்கு இது எப்போதோ தெரியும்.
ஆகக்குறைந்தது 10 வருடங்களுக்கு முன்னராவது தெரியும்.
அப்படித் தெரிந்தும் என்ன செய்தார்கள்? பழகிப்போன வாழ்க்கையைக் கைவிட முடியாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு, வன்னிக் காடுகளுக்குள் இருந்து உணர்வு உணர்வு என்று வெளி நாடுகளில் இருந்தவர்களைப் பிழிந்து உணர்வுச் சாற்றைப் பருகிக்கொண்டு அவர்கள் நீச்சல் தடாகங்களில் பிள்ளை குட்டிகளோடு கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் கும்மியடித்துக்கொண்டிருந்தாலும் உலகம் சும்மாயிருக்கவில்லை, தம்மிலிருந்து படிப்படியாகப் புலியை நிரந்தரமாக அன்னியப்படுத்திக்கொண்டு வந்தது.
எப்போதாவது ஒரு நிலையான அரசு இலங்கையில் வரும், அப்போது இந்தப் புலிக்கொட்டம் அடங்கும், அன்று தங்கள் கைகளைக் கழுவிக்கொண்டு அந்த அரசோடு கை குலுக்கிக்கொள்ளலாம், அதன் பின் இந்த வளம் மிகுந்த தீவினைப் பொருளாதார ரீதியாகக் கொள்ளையிடலாம் என்று “ஆ” வெனப்பார்த்துக்கொண்டிருந்தது.
அந்த நிலையும் வந்தது, இலங்கையில் நிரந்தரமான ஒரு அரசு உருவானது, நிலையான ஒரு கொள்கையை அது கொண்டிருந்தது, போர் தொடுத்தது, புலியை அழித்தது எல்லாம் இப்போது பேசிப் பேசி அலுத்துப் போன விடயங்கள்.
ஆனால், போருக்குப் பின் வந்து சேரப்போகும் புதிய கூட்டாளிகளோடு கை குலுக்கக் காத்திராமல் பல பங்காளிகளைச் சேர்த்துக்கொண்டே போரை ஆரம்பித்து, அதை நிறைவு செய்து, இன்று தம் நன்றிக் கடனை உலகறியச் செய்து வெள்ளை ஆசாமிகளுக்கும் சேர்த்தே முகத்தில் சாணியடிக்கும் இன்றைய இலங்கை அரசின் சித்தார்ந்தம் சந்தேகமே இல்லாமல் பலருக்குப் புதிய அனுபவம்.
ஆக மொத்தத்தில் உலக அரசியல் பற்றிய ஒரு தெளிவு இல்லாத வங்குரோத்து நிலையில் ஒரு அரசாங்கம் அமைக்க முடியாது என்பதை நன்கறிந்த புலி, தம்மால் இயன்ற மட்டும் காலத்தைக் கடத்தி தமது இருப்பைப் பாதுகாத்துக்கொண்டால் மாத்திரம் போதும் எனும் தெளிவான முடிவுக்கு வந்திருந்தார்கள் என்பதும் இனியும் மறுக்க முடியாத விடயம்.
தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வெளிநாட்டில் ஈழத்தமிழர்களை உணர்ச்சி மயப்படுத்திக்கொண்டு, அதே வேளை தாம் பாரிய அரசியல் ராஜ தந்திரிகள் என்று பறைசாற்றுவதற்கு வைகோ, நெடுமாறன் வகையறாக்களை தமிழகத்திலும், ஒரு சில வெள்ளைக்கார எம்.பிக்களை இங்கிலாந்து, ஜேர்மனி, கனடாவிலும் “பிலிம்” காட்டப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, உண்மையாகவே மக்கள் அபிப்பிராயம் தமிழீழமாக இருந்தால் அந்தத் தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ள, இறுதியாகக் கிடைத்த சமாதானக் காலத்தில் தானும் ஒன்றையும் உருப்படியாகச் செய்யவில்லை.
ஆகக்குறைந்தது அண்டை அயல் நாடுகளில் உள்ள உறவுகளை சீர்ப் படுத்தவோ இல்லை தமது அரசியல் சி்த்தத் தெளிவை நிரூபிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை. மாறாக சோதனைச் சாவடியில் சுங்க வரி முதல் வீட்டுக்கொரு பிள்ளையைப் பலி கொடுக்கச் செய்வதற்கும் முழு மூச்சாக இருந்தார்கள்.
இதன் கொடூரப் பின்ணனியை இனிமேல் தான் தமிழினம் தோண்டி அறிந்து கொள்ளும்.
இதற்கிடையில் தமக்கொரு நண்பனைத்தான் உருவாக்கவில்லை என்றாலும், அதற்கு சற்றும் குறையாமல் பகைவர்களை உருவாக்குவதில் மிகவும் கடினப்பட்டு உழைத்திருக்கிறார்கள் புலிகள்.
செய்தால் நான் தான் செய்ய வேண்டும், பிடித்தால் நான் தான் பிடிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்த புலியின் தலைவரும் முள்ளிவாய்க்கால் புலிகளும், இறுதிக்கட்டத்தில் தாம் ஓடும் இடங்களெல்லாம் மக்களை இழுத்துச் சென்று விட்டு, அரசு அனுப்பும் உணவைக் கூட அவர்கள் அபகரித்து, அதிலிருந்து மக்களுக்கு “கஞ்சி” ஊற்றினார்களே, அந்த தியாகத்தை தமிழினம் ஒரு போதும் மறக்கக் கூடாது.
தம் தலைவருக்கு மிஞ்சிய சீடர்களோ புலியால் முன் வைக்கப்பட்ட உப்புசப்பில்லாத பிரிவினையை உலகுக்கு நியாயப்படுத்த “வணங்கா மண்” எனும் பெயரில் பழைய சரக்குக் கப்பலை வழங்கிப் பார்த்தார்கள்.
உணர்ச்சி மேலோங்கிய நிலையில் இந்தக் கப்பல் எல்லாம் இலங்கைக் கடற்கரையில் அதுவும் இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் கரை சேருமா என்று கூட சிந்திக்காமல் தம் உறவுகள் மீது கொண்டிருந்த உண்மையான பாசத்தையும் ஒன்றரக்கலந்து அரை குறை நம்பிக்கையிலாவது கப்பலை நிரப்பியனுப்பினார்கள்.
மக்கள் கணக்கு இப்படியாக இருந்திருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் தாக்குப்பிடித்தால் போதும், கப்பலில் வரும் வெளிநாட்டுச சாப்பாடாவது வந்து சேரும், அதைக் காட்டி இங்கே பாருங்கள் நமக்கு வெளிநாடுகளில் இருந்துதான் உதவி வருகிறது என்று தம் பிடிக்குள் இருந்த மக்கள் மனங்களில் வாழ்வா சாவா எனும் நிலையில் ஆயுதத் திணிப்பை மேற்கொள்ள புலி நினைத்திருக்கும்.
அப்படியொரு கப்பல் வந்து சேர்ந்தால் அதை வைத்து உலகத்துக்கும் ஏதாச்சும் பிலிம் காட்டலாம் என்று கணக்குப்போட்ட புலியோ, இந்தப் போர் ஆரம்பிக்க முதல் கடலைச் சுற்றி இலங்கை அரசு நிலை கொண்டிருப்பதையோ அல்லது அவர்களை மீறி வர முடியாது என்பதையோ மறைத்தது கூட பரவாயில்லை, பாதுகாப்பு இணையம் நவீன கிராபிக்ஸ் மூலம் புலியின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதி நிலத்தைக் காட்டிய போதும், சிங்களவன் பிலிம் காட்டுகிறான் என்று தம் ஆதரவாளர்களையம் குமுதம்,ஜுவி ஆவி,நெடுமாறன்களையும் நம்ப வைத்திருந்தார்களே, அதற்கு நிச்சயமாக அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஆனாலும் அப்படியொரு கப்பலை புலி ஏற்றும் போதே அந்தக் கப்பலுக்குப் பெயர் “கப்டன் அலி” இல்லை “கப்டன் கருணா நிதி” என்று திட்டமிட்டுவிட்டார்கள் ஆசியாவின் நவீன அரசியல் பங்காளிகள்.
தம் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று சோமாலியா கடற்பரப்பு வரை நீண்டு செல்லும் கைகளைக் கொண்ட இந்தியாவை மீறி இந்து சமுத்திரத்தில் ஒரு வணங்காமண் நிலை கொள்ள முடியாது. அதையும் மீறி சண்டையிட்டு முல்லைத் தீவை வந்தடைய அது ஒன்றும் யுத்தக் கப்பல் இல்லை, சாதாரண பழைய சரக்குக் கப்பல்.
அப்படித்தான் முல்லைத் தீவை வந்தடைந்தாலும் அதை இலங்கையிடம் தான் கொடுக்க வேண்டுமே தவிர பிரபாகரன் உயிரோடு இருப்பதெல்லாம் ஊகம் மற்றும் சந்தேகம் மட்டுமே, அப்படி அனைத்துத் தடைகளையும் தாண்டி மிகப் புனிதமாக மக்களுக்கான உணவை மட்டும் கொண்டு போன வணங்கிப்போன மண் அப்படி அந்த ஊகம் நிறைவேறியிருந்தால் வரும் வழியில் பிரபாகரனையும் ஏற்றி வந்திருக்கலாம்.
சினிமாவில் தான் இப்படியான கதைகளைப் பார்க்கலாம், நிஜத்தில் இதுவெல்லாம் பகற்கனவு என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஏதோ ஒரு நப்பாசையில் என்னவோ எல்லாம் நடந்தேறிவிட்டது.
முடிவில், கேப்டன் அலி கேப்டன் கருணாநிதியாகி மக்களுக்குப் போய் சேர்வதில் அந்தக் கப்பலை நிரப்பியனுப்ப உதவி செய்த மக்களாவது நிம்மதியடையலாம்.
நம்பிக் கெட்ட தலைவனாலும் அவர் படைகளாலும் கொண்டு சேர்க்க முடியாமற் போன தம் உழைப்பையும்,உறவையும் நம்பாமல் கை விட்டாலும் தானாக வந்து தம் உறவைப் பலப்படுத்திய புதிய தலைவன், தான் உயிரோடு இருக்கும் வரை என்றுமே தமிழினத் தலைவனாக இருக்க விரும்பும் கேப்டன் கருணா நிதியாவது கொண்டு சேர்த்திருக்கிறார் எனும் போது, தம் கடந்த கால வரலாற்றுகளில் சந்தர்ப்பத்திற்காகப் பல தடவைகள் கலைஞரி்ன் பெயரை வைத்து தமிழீழ வியாபாரம் செய்திருந்தாலும், உண்மையில் கடந்த 30 வருட காலங்களாக ஏன் இந்த மனிதர் மறைக்கப்பட்டார் அல்லது மறக்கடிக்கப்பட்டார் எனும் கேள்வியை ஒவ்வெரு வெளிநாடு வாழ் தமிழரிடமும் விதைத்திருக்கிறது இந்த கேப்டன் கருணி நிதி.
ஆக மொத்தத்தில் அதி புத்திசாலிப் புலி மீண்டும் தன் புத்திசாலித்தனத்தை நிரூபித்திருக்கிறது.
புலியிள் புத்திசாலித்தனத்தை “மோட்டுச் சிங்களவன்” எப்படியெல்லாம் பாவித்திருக்கிறான் என்பதற்கு இது இன்னொரு மகத்தான சான்று.
அன்று முதல் இன்று வரை பல மூகமூடிகளை மாற்றிக்கொண்டாலும் செயற்பாட்டில் அதே புலி அதே கதையாக இன்றும் தமிழீழத்தை நாடு கடத்திச் செயற்பட வரும் அதே புத்திசாலிப் புலியை மக்கள் இனிமேலும் எப்படிக் கையாள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆகக்குறைந்தது, மக்களுக்கு இதில் நன்மை எனவே கேப்டன் கருணா நிதி செஞ்சிலுவைக் கொடியோடாவது வந்து கொழும்புத் துறை முகத்தைத் தட்டட்டும்.
அறிவுடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment