புலிகளின் சர்வதேச வலையமைப்பினை இயக்கி வந்த சில முக்கிய புள்ளிகள் மிக விரைவில் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவர்
இலங்கையில் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைள் மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்தவாறு உதவிய நபர்களை உடனடியாக கைது செய்து, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு வெளிவிவகார அமைச்சு சகல நாடுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனடிப்படையில் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை இயக்கி வந்த சிலர் மிக விரைவில் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவரென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு உதவிய நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்த தகவல்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சிடம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.
தற்போதும் அந்த நபர்கள் தங்கியுள்ள நாடுகளில், அவர்களை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப இவ்வாறான நபர்கள் உறுப்பு நாடுகளில் இருந்தால், அவர்களை கைதுசெய்து ஒப்படைப்பது சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமை எனவும் போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு உதவிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச காவற்துறையின் உதவியும் கோரவும் திட்டமிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும், நிதியுதவியையும் வழங்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி கொண்டனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முடக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த வேலைத் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும் போகொல்லாகம கூறியுள்ளார்.
இதனடிப்படையில் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை இயக்கி வந்த சில முக்கிய புள்ளிகள் மிக விரைவில் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment