இயலாது என்ற சொல்லுக்கு இனி அரசின் அகராதியில் இடமில்லை
முடியாது என கைவிடப்பட்ட பலவற்றை நாம் சாத்தியமாக வெற்றி கொண்டோம். இயலாது என்ற சொல்லுக்கு இனி அரசின் அகராதியிலேயே இடமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பயங்கரவாதம், போதை ஒழிப்பு உட்பட பல்வேறு வெற்றிகளை ஈட்டியுள்ளயுகமிது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு அஞ்சிய யுகமொன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
இனி அபிவிருத்தியும் ஒழுக்கமும் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கென 959 புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் உட்பட கல்வித்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவுகின்ற இத்தருணத்தில் நாம் புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிலையில் உள்ளோம். எதிர்காலம் குறித்து சிந்தித்து பொருத்தமான தீர்மானங்களை நாம் எடுத்தமையே இதற்குக் காரணம். எமது நாட்டுக்குப் பொருத்தமான திட்டங்களை வகுத்து எதிர்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கல்வித் துறையில் சுமார் ஆயிரம் பட்டதாரிகளுக்கு புதிய நியமனம் வழங்கப்படும் மகிழ்ச்சியான நாளிது. நாம் பதவிக்கு வந்த மூன்று வருடகாலத்தில் 28,000 புதிய ஆசிரிய நியமனங்களை எம்மால் வழங்க முடிந்துள்ளது.
அரச துறையில் ஆறரை இலட்சம் பேரே தொழில் புரிந்ததுடன் சுற்று நிருபம் மூலம் அத்துறையின் வளர்ச்சியைத் தடுத்து புதிய நியமனங்களை நிறுத்திய யுகம் ஒன்றிருந்தது. அரச துறையை மட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அத்துறையை 12 இலட்சம் பேர் கொண்டதாக வளர்த்தெக்க முடிந்துள்ளமை எமது திட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகிறது.
அரச துறையில் ஆசிரியர் தொழில் என்பது உன்னதமானதும் கெளரவமானதுமானதொரு தொழிலாகும். நாட்டின் தலைவராயினும் கூட தமது ஆசிரியரைக் கனம் பண்ணுவது கெளரவமானதாகும். இத்தகைய உன்னதமான பணி செய்பவர்கள் நாட்டைப் பற்றிய தெளிவுடன் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்குவது அவசியமாகும்.
2004ம் ஆண்டு இந்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை 8.3 வீதமாக இருந்தது. எனினும் அது இன்று 5.1 வீதமாகக் குறைந்துள்ளது. எந்த அழுத்தமோ நிபந்தனைகளோ இன்றி நாம் நாட்டை அபிவிருத்தியில் இட்டுச் செல்கிறோம். பயங்கரவாதத்தைப் போன்றே போதையற்ற இலங்கையை உருவாக்குவதிலும் நாம் காத்திரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
புகையிலை, மது போன்றவற்றினால் அரசாங்கத்தின் திறைசேரிக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் குறைவடைகின்ற போதும் நாம் பணம் பற்றி சிந்திக்காமல் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்கின்றோம்.
நுரைச்சோலை, மேல்கொத்மலை மின்திட்டங்கள் உட்பட கைவிடப்பட்டிருந்த பாரிய அபிவிருத்திகள் பலவற்றை நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றைப் புதிதாக நிர்மாணிப்பதுடன் நகரங்களுக்கு மட்டுப்படுத்தியிருந்த அபிவிருத்தியை கிராமங்களின் அடிமட்டத்திற்கும் எடுத்துச் செல்ல முடிந்துள்ளது.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி கண்டு வருகின்றன. நாம் பதவியேற்ற போது 5 வீதமாக விருந்த தகவல் தொழில் நுட்ப அறிவை 28 வீதமாக அதிகரிக்க முடிந்துள்ளது. வடக்கு கிழக்கில் நாம் சகோதரத்துவத்தினைக் கட்டியெழுப்புவதுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக அவசியமானது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment