சிவகுமாரன் என்றொரு மனிதன்……..
ஒரு விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் வித்தியாசமானவை, மகத்தானவை, மதிகப்பட வேண்டியவை. சில காத்திரமான முடிபுகளுக்கு, செயற்பாடுகளுக்கு சில தனி மனிதர்களின் பாத்திரம் பெரிதும் உதவி இருக்கின்றன. இவை வெற்றிகளையும் தோல்விகளையும் ஏற்படுத்தியும் இருக்கின்றன. பின்பு இவை சரித்திரமாக மாறியதுண்டு. இத் தனிமனிதன் ஒரு அமைப்பை சார்ந்து நின்று செயற்படும் போதுதான் இது சாத்தியம் ஆயிற்று, ஆகும். ஆனால் ஒரு தனி மனிதனால் மட்டும் ஒரு சமூகத்தின் விடுதலையை தனித்து நின்று பெறமுடியாது. இது வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடம். ஒரு தனி மனிதனின் ;வீரம் மிக்க’ செயற்பாடு சிறிது காலம் ஒரு சாகசத்தை செய்து விட்டு மறைந்து போகுமே ஒழிய, அதற்கு மேல் எதனையும் தொடர்சியாக தன்னகத்தே கொண்டிருக்க மாட்டாது. இதுவே சிவகுமாரனின் வாழ்விலும், ‘போராட்டத்திலும்’, மரணத்திலும் நிகழ்திருக்கின்றது.
சிவகுமாரன் எதிரியின் கையில் உயிருடன் பிடிபடுவதில்லை என்ற கொள்கையை ஏற்று அதன்படி செயற்பட்டு தற்கொலை செய்து கொண்டது இன்றுடன் 35 வருடங்கள் ஓடிவிட்டன. யாழ்பாணத் தமிழ் மக்கள் மத்தியில் 1970 களில் தைரியம் மிக்க வீரனாக கணிக்கப்பட்டவன் சிவகுமாரன். இலங்கை அரசின் பொலிஸாரின் நடவடிக்கைகள் மீது யாழ்பாணத்து மக்கள் வெறுப்படைந்திருந்த நேரம். தமிழ் அரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழர் சுயாட்சிக்கழகம் போன்ற தமிழ் மிதவாத கட்சிகள் தமக்குள் யார் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்பதை நிலைநாட்ட முனைந்திருந்த கால கட்டம். இதற்கு அவர்கள் தூக்கிப்பிடித் ஆயுதம் தமிழ் இன உணர்வு என்ற போர்வைக்குள் இருந்த ஒரு வகையான இனவெறி.
இது அன்றைய காலகட்டத்தில் எம்மில் பலரால் விருப்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. இது சரியான கொள்கையோ, செயற்பாடோ கொண்டதாக இல்லாது இருந்திருப்பினும் ஒரு வகையான மயக்க உணர்வினால் இதன்பால் ஈர்க்;கப்பட்டு செயற்பட்டு வந்த கால கட்டம். தமிழ் மிதவாத தலைமைகளும் தமது வாக்கு வங்கிகளை சிதறாமல் இருக்க இதனை நன்றே பாவித்து வந்தனர். உணர்ச்சி ஊட்டி உருவேற்ற மங்கயற்கரசி அமிர்தலிங்கம், காசியானந்தன் போன்றோரின் பாடல்களும் கோவை மகேசனின் சுதந்திரன் பத்திரிகையும் பெரிதும் உதவி கால கட்டம் இது. ஒரு வகையில் ஜனசன்சரமாக இவை செயற்பட்டு வந்தன என்றுதான் கூறவேண்டும்.
இவர்கள் தமது ‘தமிழ்’ என்ற உணர்ச்சியூட்டலுக்கு பாவித்த கருவி சிவகுமாரன். சிவகுமாரனின் இருந்த இயல்பான ;துணிச்சல்’ அவனை பொலிசாருக்கு எதிராக குண்டெறியத் தூண்டியது. மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவை குண்டெறிந்து கொலை செய்யத்தூண்டியது. தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டில் இறுதி நாளில் நிகழ்ந்த 7 பேரின் மரணங்கள் பொலிஸார் மீதும், துரையப்பா மீதும் தமிழ் மக்களுக்கு காழ்புணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இதுவே மேற்கூறிய குண்டெறிந்து கொல்லுதல் என்ற முடிவிற்கு சிவகுமாரனை தள்ளியது என்பது யாவரும் அறிந்ததே. இவ் தாக்கியழிக்கும் முறமைகளை தமக்கு சாதகமா பயன்படுத்த முயன்றனர் தமிழ் மிதவாத கட்சிகள்;;. இதனால் மரணத்திற்கு முன்பு துணிச்சலான போர் வீரனாகவும் மரணத்தின் பின்பு மாவீரனாகவும் பாராட்டப்பட்டான் சிவகுமாரன். மற்றயபடி சிவகுமாரன் ஒரு விடுதலை அமைப்பையோ அல்லது ஒரு சமூக அமைப்பையோ சார்ந்தவன் அல்ல. இதற்காக போராடும் அணிதிரட்டலில் ஈடுபட்டவனும் அல்ல. வீர சாகசம் புரிந்த? புரிய முற்பட்ட ஒருவன் மட்டுமே!. மக்களின் விடுதலைக்காக ஒரு அமைப்பை கட்டி அல்லது அன்றய காலகட்டத்தில் இருந்த இடதுசாரி, தமிழ்மாவர் பேரவை ஏன் தமிழர் கட்சி ஏதாவது ஒன்றில் அமைப்பு ரீதியாக இணைந்து செயற்பட்டு மரணத்தை தழுவி இருந்திருந்தால் சிவகுமாரன் இன்னும் பல மடங்கு உயரிய போராளியாக மதிக்கப்பட்டிருப்பான், மதிக்கப்பட்டிருக்க வேண்டும்
தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்த இடதுசாரிகள் தமிழர்களின் பிரச்சனைக்கு தேசிய அளவில் சரியான காத்திரமான பங்களிப்பை செய்ய முடியவில்லை. இடதுசாரித் தேசியத் தலைவர்களின் கண்ணோட்டங்களுக்கு இழுபட்டு போகும் பலவீனமான நிலையில் இடதுசாரித் தமிழ் தலைவர்கள் இருந்தனர் இதனால் இவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கவும் நேரிட்டது. மேலும் இவர்களின் செல்வாக்குகளை இழக்கச் செய்யும் வேலைத்திட்டங்களை கட்சிகளும் முழு மூச்சில் செயற்படுத்திவந்தனர்.
யாழ்பாண மேட்டுக்குடி மக்கள் மத்தியில் நிலவி வந்த சாதிய வெறியும் இதற்கு எதிரான இடதுசாரி தமிழ் தலைமைகளின் மாவிட்புரம் கோவில் திறப்பு போராட்டம், பண்டைத்தரிப்பு சாதி எதிர்ப்பு போராட்டம், அச்சுவேலி காதி எதிர்ப்பு போராட்டம் போன்றவற்றில் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் வைத்திருந்த நிலைப்பாட்டை தமிழர் கட்சிகள் இடது சாரிகளுக்கு எதிராக இலாவகமாக திருப்பிவிட்டனர். இப் போராட்டங்களின் போது சாதி ஒடுக்கு முறைக்கு எதிரா போராடிய பல இடதுசாரிகள் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினாலும், சாதி வெறியர்களினாலும் கொல்லப்பட்டனர். இதில் சாவைத் தழுவியவர்கள் ஒரு சமூக விடுதலைக்கான போராட்டத்தில் மக்களை அணிதிரட்டி போராட்டத்தில் ஈடுபட்டு தம்மை அர்பணித்துக் கொண்டனர். இது ஒரு மக்கள் போராட்டம். இவர்கள் உண்மையில் மாமனிதர்கள், தியாகிகள், மக்கள் போராளிகள். இதேபோல மலையகத்தில் தோட்டத் தொளிலாளர்களுக்காக போராடி பொலிசாரின் குன்டடிபட்டு மரணத்தை தழுவிய வெள்ளையனும் ஒரு மக்கள் போராளி
ஆனால் சிவகுமாரன் எச்சந்தர்பத்திலும் மக்களைத்திரட்டி போராடும் ஒரு அமைப்பையோ அல்லது ஒரு மக்கள் அமைப்பை சார்ந்தோ இருக்கவில்லை. தனி மனிதனாக இலங்கை பொலிஸின் அட்டூழியங்களுக்கு தன்னால் இயன்ற ஆயுத வன்முறையை செயற்படுத்த முயன்று தோற்றுப் போன தனி மனிதன் அவனின் வன்முறைச் செயற்பாட்டை தமிழ் தேசியவாதக்கட்சிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. இதன் மூலம் தம்மை வாக்குக்களுக்காக வளர்த்துக் கொண்டன. சிவகுமாரின் மரணத்தையும், மரண ஊர்வலத்தையும் நன்றாகவே பயன்படுத்தின எனலாம்.
சிவகுமாரின் காலகட்டத்தில் செயற்பட்ட தமிழ்மாணவர் பேரவை ஒரு அமைப்பாக செயற்பட்டு வந்தது. கூடவே இவர்களிடம் சரியோ பிழையோ ஒரு வேலைத்திட்டம் இருந்தது. இதனால்தான் இவ் இமைப்பை சேர்ந்த பலர் ஈழவிடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தம்மை தமக்கு சரியானது என காணப்பட்ட விடுதலை அமைப்புக்களுடன் இணைத்து போராட்டத்தில் ஈடுபட முடிந்தது. தமிழ் மாணவர் பேரவையின் வாரிசுகள் இன்றுவரை இலங்கைத்தமிழ் மக்களின் போராட்ட வாழ்வில் உள்ளனர் என்று கூறும் அளவிற்கு நிலமை ஏற்பட்டது.
சிவகுமாரனை எடுத்துக் கொண்டால், சிவகுமாரனின் மறைவிற்கு பின் அவரின் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் அல்லது அவரின் வாரிசு, வழித்தோன்றல் என்று யாரையும் கூறமுடியாத நிலமையே உள்ளது என்பது அவர் கொண்டிருந்த அமைப்பு அற்ற தனிநபர் சாகச செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே பார்க்க முடியும்.
எவை எப்படி இருப்பினும் சிவகுமாரன் மரணம் யாழ்பாண அன்றை சமூக வழமைகளை உடைத்து பெண்களையும் சுடலைவரை அழைத்து வந்து அவருக்கு அஞ்சலி செலுத்த வைத்த ஒரு வகையான உணர்ச்சி எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மையே! புhடசாலை மாவ மாணவிகள் உட்பட கிராமம் கிராமமாக ஆண்கள் பெண்கள் என்று சுடலையை நிரப்பிய நிகழ்வு இன்றும் கண்முன்னே நிழலாடுகின்றது.
ஒரு சரியான மக்கள் நலன் சார்ந்த கொள்கை உடைய அமைப்பு உறுப்பினரின் திறமையான செயற்பாடானது, ஒரு அமைப்பின் உறுப்பினராக இல்லாத தனி நபரின் திறமையான செயற்பாட்டைவிட கோடான கோடி மடங்கு அறுவடையை கொடுத்திருக்கும் என்பது யதார்த்தத்திலும் யதார்த்தம். இதுவே சிவகுமாரன் வாழ்விலும், மரணத்திலும் நடந்திருக்கின்றது.
மீண்டும் அவருக்கு எமது அஞ்சலிகள். தனிமனிதனாக செயற்பட்டாலும் ஒடுக்கு முறைக்கு எதிராக செயற்படுதல் என்ற அவரின் செயற்பாட்டிற்கும், அவரின் மரணத்திற்கும் நாம் சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்.
(சாகரன்) (ஆனி 06, 2009)
0 விமர்சனங்கள்:
Post a Comment