மக்களுக்கு உதவிசெய்யவே அரசுக்கு ஆதரவு: சிவநாதன் கிஷோர்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் 3 இலட்சம் மக்களையும் மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் 180 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தீர்மானித்துள்ளார்.
“வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்தவேண்டிய பொறுப்பு உள்ளது. இந்த நோக்கத்திற்காக அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு நான் ஆதரவு வழங்கவுள்ளேன்” என அவர் கூறினார்.
எனினும், அரசாங்கத்துடன் இணையப் போவதாக வெளியாகியிருக்கும் செய்திகளை மறுத்திருக்கும் கிஷோர், அரசாங்கத்துடன் தான் இணையப் போவதாக வெளியான தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகவே தான் தொடர்ந்தும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
“அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை எடுப்பது என் நோக்கமல்ல. அமைச்சுப் பதவிகளை வைத்திருந்தால் மாத்திரம்தான் மக்களுக்கு உதவிசெய்யமுடியும் என்ற நிலைப்பாட்டில் நான் இல்லை” என கிஷோர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் அரசாங்கத்துடன் இணையப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகள் குறித்தே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற அரசாங்க நிகழ்ச்சிகள் சிலவற்றில் சிவநாதன் கிஷோர் கலந்துகொண்டிருந்தார். சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோருடன் அவர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், தாண்டிக்குளம் புகையிரதநிலையத் திறப்புவிழா நிகழ்விலும் கிஷோர் கலந்துகொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் அரசாங்கத்துடன் இணையப் போவதாகவும், அவர் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கம் கோரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment