பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் கிருஸ்ணா அம்பலவாணர்
வரலாற்றுத் தவறுசெய்த தமிழினமே உனக்கு ஒருமடல்
தத்தளிக்கும் தமிழினத்தை கரையேற்ற வாருங்கள்!
துடுப்பும் இல்லாமல் – போகும் திசையும் தெரியாமல் – நடுக்கடலில் தத்தளிக்கின்ற படகு போன்றது, ஈழத் தமிழினத்தின் இன்றைய நிலை.
வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கொடூரமான இன அழிப்புப் போரில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப் பட்டிருக்கிறது.
இதுவரை காலமும் ஈழத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக – அவர்களின் உரிமைக் குரலாக உலகெங்கும் ஒலித்த புலிகள் இயக்கம், இப்போது இராணுவ ரீதியாகச் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
மூன்று தசாப்தமாக தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்திய மாபெரும் விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மறைவினால் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை எவராலும் நிரப்பவே முடியாது.
அதேவேளை, இந்த இழப்புகளினால் ஏற்பட்டிருக்கின்ற ஒரு அரசியல் வெறுமையைப் பயன்படுத்தி, ஈழத் தமிழரின் அரசியல் உரிமைகளை நசுக்குகின்ற முயற்சிகளில் இலங்கை அரசு முனைப்புடன் ஈடுபட்டிருப்பதையும் மறந்து விட முடியாது.
இராணுவ வல்லமையை மட்டுமே நம்பி நடத்திய எமது போராட்டத்தின் சாதக, பாதகங்களைப் புரிந்து கொண்டு – அடுத்த கட்டமாக, ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்தை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.
ஆனால், நாம் இந்த விடயத்தில் எங்கே நிற்கிறோம்? மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் தோல்வி கண்டுள்ள நாம், அடுத்து என்ன செய்யப் போகிறோம்?
இவற்றையெல்லாம் தீர்க்கமாகத் தீர்மானிக்க வேண்டிய நேரத்தில் -அதைச் செய்யாமல் இருப்பது வேதனைக்குரிய விடயம்.
வன்னியில் மே மாத நடுப்பகுதியில் ஈழத் தமிழினத்துக்கு ஏற்பட்ட வரலாறு காணாத பேரழிவுக்குப் பின்னர் – அரசியல் ரீதியாகவோ, இராஜதந்திர ரீதியாகவோ எதையும் முன்னெடுக்க முடியாத நிர்க்கதி நிலை உருவாகியிருக்கிறது.
தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மரணத்துக்குப் பிற்பட்ட இந்த வெறுமை நிலை ஈழத் தமிழினத்தையை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதாகவே உணர முடிகிறது.
அவரது மரணம் தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துகள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது.
அந்த மரணம் ஈழத் தமிழனத்தால் மட்டுமன்றி உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் யதார்த்த நிலையில் இருந்து தான் அதை நாம் நோக்க வேண்டும்.
ஆனால், இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது.
தனது வாழ்வின் 37 வருடங்களை முழுமையாகவே ஈழத் தமிழருக்காகவே அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற தலைவனுக்கு இறுதி மரியாதை கூடச் செய்ய முடியாதளவுக்கு நாம் முட்டாள்களாக நிற்கிறோம்.
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் வீரச் சாவடைந்தபோது அவருக்காக உலகத் தமிழினமே அழுதது. ஆனால், இன்று தேசியத் தலைவர் பிரபாகரன் வீரமரணத்தை தழுவியுள்ள நிலையில் அவருக்காக ஒரு வணக்க நிகழ்வு கூட நடக்கவில்லை.
துக்க தினத்தைப் பிரகடனம் செய்து அழுது புரண்டு எம்மைத் தேற்றிக் கொள்ள முடியாத நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் எமக்குள்ளே இருக்கும் பிளவு நிலைதான்.
தேசியத் தலைவர் மரணமானதை அடுத்து அவரது வித்துடலை அடுத்த நாளே இரகசியமாக – அவசரமாக அரசாங்கம் எரித்தது. இதற்குக் காரணம் மக்கள் எழுச்சி உருவாகி விடக் கூடாதென்பதே.
ஆனால், அத்தகைய மக்கள் எழுச்சிக்கான தடயம் எதுவுமே ஈழத் தமிழினத்திடம் இருந்து உருவாகவில்லை. இதையிட்டு சிங்கள தேசத்துக்கே ஆச்சரியம் ஏற்பட்டிருக்கிறது.
தேசியத் தலைவர் அவர்களின் மரணத்துக்குப் பின்னரும் புலிகள் இயக்கம் தொல்லை தரும் ஒன்றாக இருக்கும் என்றே அரசாங்கம் கருதியிருந்தது.
ஆனால், இப்போது அந்தக் கவலையே அரசாங்கத்திடம் கிடையாது. காரணம் அப்படி அச்சம் கொள்ளவே தேவையில்லை என்ற நம்பிக்கையை நாமே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
தேசியத் தலைவர் அவர்களின் மரணத்தை தமிழ் மக்களால் ஜீரணிக்க முடியாதிருப்பது – ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பது உண்மை தான்.
ஆனால், உண்மையாகவே நிகழ்ந்து விட்ட அந்த மரணத்தை – ஏற்றுக் கொள்ள மறுப்பதைப் போன்ற மடமை வேறேதும் இருக்க முடியாது.
அவரது உடலைக் கைப்பற்றி அதைத் தெளிவாகவே வீடியோ படங்களில் அரசாங்கம் காண்பித்த போதே அது உண்மையானதென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
மரணம் எப்படி நேரிட்டது என்ற குழப்பம் இருக்கலாம். ஆனால், மரணம் நிகழவில்லை என்று குழம்பவே தேவையில்லை.
இந்தக் கட்டத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களின் மரணத்தை நம்ப மறுப்பதோ – அவர் உயிரோடு இருக்கிறார் என்ற மாயைக்குள் இருந்து விடுபடாமல், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதோ எமது இனத்தின் எதிர்காலத்துக்கே ஆபத்தானது.
எமது இனத்தின் எதிர்காலத்துக்காக – சுதந்திரத்துக்காக – உரிமைகளுக்காப் போராடிய தலைவனையே இன்று நினைவுகூர முடியாதளவுக்கு மடைமையும் முட்டாள் தனமும் எம்மை ஆக்கிரமித்து நிற்கிறது.
இது ஒன்றே போதும் இலங்கை அரசு குதூகலிக்கவும் – கொண்டாடவும்.
புலிகள் அழிந்து போனாலும் அவர்கள் அரசியல் ரீதியாக அழிந்து போகமாட்டார்கள் – ஏனெனில் அவர்களின் கொள்கை வலுவானது என்று பொதுவான நம்பிக்கை இன்று தகர்ந்து வருகிறது.
தேசியத் தலைவர் மரணமாகவில்லை என்று முட்டாள்தனமான நம்பிக்கையில் இருக்கின்ற தமிழினத்தையிட்டு நாளை உலகமே எம்மைக் கேவலமாகப் பார்க்கப் போகிறது.
தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அவர் உயிரோடும் நலமோடும் நீண்ட காலத்துக்கு வாழ வேண்டும் என்ற மன ஆதங்கமும் விருப்பமும் எமக்கு இருக்கிறது.
ஆனால், இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு அவரது மரணம் என்ற யதார்த்தத்தை எம்மால் புறக்கணித்து விடமுடியாது.
ஆனால், நாம் குழம்பி நிற்கின்ற இந்த நிலையைக் கண்டு – முன்பெல்லாம் எம்மை அச்சத்துடன் பார்த்த – சிங்கள தேசம் இப்போது வெறும் புழுவாகவே பார்க்கிறது.
போருக்குப் பிந்திய அடுத்த கட்டம், அரசியல் தீர்வு பற்றியெல்லாம் குழம்பிப் போயிருந்த சிங்கள தேசத்துக்கு இப்போது எந்தக் கவலையும் கிடையாது. ஏனெனில், தமிழருக்காக குரல் கொடுக்கக் கூடிய தலைமைத்துவம் இப்போது இல்லை. புலிகள் இயக்கத்தின் எஞ்சியிருக்கின்ற தலைமைகள் எல்லாம் இப்போது சிதறிப் போய் – ஆளுக்கொரு நியாயம் கூறும் அளவுக்கு வந்திருப்பதைப் போன்ற மிகவும் கேவலமான நிலை முன்னெப்போதும் ஏற்பட்டதில்லை.
இங்கே தான் தேசியத் தலைவர் அவர்களின் தலைமைத்துவத்தின் அவசியம் உணரப் படுவதுடன் அவரது இறுக்கமான கொள்கைகளின் மீதும் இன்னும் இன்னும் மதிப்பு அதிகரிக்கிறது.
அவர் உயிரோடு இருந்திருந்தால் இப்படியொரு நிலை உருவாகியிருக்குமா?
அவர் இல்லை என்றதும் அவரது மரணத்தையே அறிவிக்க முடியாதளவுக்கு – துக்கம் அனுஷ்டிக்க முடியாதளவுக்கு முரண்பாடுகளின் உச்சத்தில் நாம் ஏறி நிற்கிறோம்.
பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப் போன்று இனிமேல் எமது இனத்துக்குத் தலைமையேற்கக் கூடிய ஒருவர் கிடைக்கவே முடியாது.
ஆனால், இல்லாத ஒருவரை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு எவ்வளவு காலத்துக்கு நாம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியும்?
புலிகள் இயக்கத்தின் அழிவு எப்போது நிகழ்ந்ததோ – அப்போதிருந்தே தமிழினத்தை அரசியல் வழியில் அடக்கி ஒடுக்கும் முயற்சிகளில் இலங்கை அரசும் சிங்களப் பேரினவாதிகளும் இறங்கி விட்டனர்.
வடக்கில் கலப்புக் கிராமங்களை உருவாக்குவது பற்றிப் பேசுகிறார்கள், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவது பற்றிப் பேசுகிறார்கள், 5 வருடங்களுக்கு இராணுவ ஆட்சியில் வடக்கை வைத்திருப்பது பற்றிப் பேசப்படுகிறது.
ஆனால், அரசியல் தீர்வு பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியமர்வு பற்றிப் பேசவில்லை. போரில் அழிந்து போன மக்களின் வாழ்வாதார மீள்கட்டுமானம் பற்றி எவருமே சிந்திக்கவில்லை.
இறந்து போன சொந்தங்கள் பற்றி, தொலைந்து போன உறவுகள் பற்றி, கடத்தப்பட்டு காணாமற் போனவர்கள் பற்றி யாருமே பேசவில்லை.
இன்னொரு புறத்தில் வடக்கில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இப்படியே, இதுவரையில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்து வந்த மாபெரும் தேசிய விடுதலை இயக்கத்தை ஓரம்கட்டி விட்டு இன்னொரு அரசியல் தலைமையை உருவாக்கவும் – வட-கிழக்கை இராணுவ மயப்படுத்தி சிங்களக் குடியேற்றங்களை நிறுவி தமிழரின் தாயகக் கோட்பாடு, சுயநிர்ணய உரிமைக் கோரி;க்கைகளை வலுவற்றதாக்கவும் தீவிரமான முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.
சிங்கள அரசு முன்னெடுத்துவரும் இந்த வேகமான நகர்வுகளுக்கு மத்தியில் – தமிழ் மக்களாகிய நாம் இன்னும் இன்னும் எவ்வளவு பின்னோக்கிப் போகலாம் என்றே முயற்சி செய்கிறோம்.
போர் எம்மை வெகுதூரத்துக்குப் பின்தள்ளி விட்டது.
எமது இனத்துக்கு ஏற்பட்ட உயிரழிவுகள் காலத்தால் ஈடுசெய்ய முடியாதவை. பொருள் அழிவுகள், சொத்து அழிவுகள் கணக்கில் அடங்காதவை.
இவற்றையெல்லாம் மீளக் கட்டியெழுப்ப எமக்கென்றொரு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.
இந்த இடத்தில் நாம் செய்யக் கூடிய தவறு எம்மை வரலாற்று ரீதியாக இன்னும் பின்நோக்கித் தள்ளி விடப் போகிறது.
தமிழீழத்தின் தேசியத் தலைமையை – போராட்டத்தின் பலத்தை – மக்களின் வாழ்வைச் சிதைத்து விட்டு மகிந்தவின் அரசாங்கம் வெறுமனே வெற்றிக் கோசமிடவில்லை.
அடுத்த தலைமுறைத் தமிழனை இலங்கையில் இருந்து எப்படி அழிக்கலாம் என்றும் திட்டம் போடத் தொடங்கி விட்டது.
இன்று இலங்கைத் தீவில் வாழும் தமிழரின் பாதுகாப்பு, உரிமைகள் பற்றிப் பேசவே முடியாத கட்டம் உருவாகியுள்ளது.
புலிகளே தமிழினத்தின் பாதுகாப்பாக இருந்த நிலை மாறிவிட்டது. புலிகளின் அழிவையடுத்து தமிழ் மக்கள் எதையுமே தட்டிக் கேட்கத் திராணியற்றவர்கள் என்ற கருத்து சிங்கள தேசத்தில் உருவாகி விட்டிருக்கிறது.
தமிழ் மக்களின் தலைமையை – வாழ்வை – வளத்தைச் சீரழித்த சிங்கள அரசாங்கத்தை சர்வதேசத்தின் முன்னிலையில் நிறுத்தி நீதி கேட்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
இதற்குக் காரணம், அடுத்த கட்டத்துக்குப் போராட்டத்தை எப்படி நகர்த்துவது என்பது பற்றிய தெளிவான கருத்தோ – தலைமையோ எம்மிடம் இல்லாமைதான்.
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தை முழுமையாக நம்பிய தமிழ் மக்கள், இன்று அவர் இல்லாதபோது அவரது மரணத்தைப் பற்றியே தெளிவான முடிவை எடுக்க முடியாதளவுக்குத் தள்ளப் பட்டிருக்கின்றனர்.
இந்தக் கட்டத்தில் அடுத்த கட்டத்துக்குப் போராட்டத்தை எப்படி நகர்த்துவது? யார் தலைமையில் போராட்டத்தை நகர்த்துவது? போன்ற முடிவுகள் மிக விரைவாக எடுக்கப்பட வேண்டும்.
தேசியத் தலைவர் பிரபாகரனால் வெளிவிவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் பத்மநாதன். ஆனால், அவரது அறிக்கையைப் பொய் என்றும் அவரைத் துரோகி என்றும் கூறிக் கொண்டு ஒரு தரப்பு மக்களைக் குழப்புகிறது.
அதேவேளை, பத்மநாதனோ புலிகள் இயக்கத்தின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்துவது? யார் தலைமையேற்பது என்பது பற்றிய எந்த முடிவையும் அறிவிக்காதிருப்பது மற்றொரு சிக்கலை உருவாக்கியிருக்கிறது.
மொத்தத்தில் அழிவின் பின்னரும் தமக்குச் சவாலாக இருக்கலாம் என்று கருதி, புலிகள் இயக்கத்தைப் பற்றி அஞ்சிக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு இதைவிடக் குளிர்ச்சியான செய்தி வேறேதும் இருக்க முடியாது.
உரிய காலத்தில் எடுக்கப்படாத எந்தத் தீர்மானமும் பிரயோசனமற்றது.
இராணுவ வல்லமையை நம்பி – அந்நிய வாக்குறுதிகளை நம்பி நாம் மோசம் போனது உண்மை. அதேவேளை, கற்பனை நிலைப்பாட்டுக்குள் இருந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்கு எமது உரிமைப் போராட்டத்தை அடக்கி வைத்திருக்கப் போகிறோம்?
சர்வதேச சமூகம்; முன்னர் புலிகள் இயக்கத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றே பேச்சுக்களை நடத்தியது. 30 வருடப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த பங்களிப்புகளை சர்வதேசம் மறக்கவில்லை.
அதேவேளை, சர்வதேசம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஜனநாயக வழிகளில் தொடர்ந்து செயற்படத் தொடங்கினால் அதற்கான அங்கீகாரத்தைக் கொடுக்காது என்று சொல்வதற்கும் இல்லை.
• இந்தக் கட்டத்தில் நாம் புலிகளின் தலைமை என்று யாரை ஏற்கப் போகிறோம்?
• எவர் ஊடாக எமது நிலைப்பாட்டை – கோரிக்கைகளை முன்வைக்கப் போகிறோம்?
இப்போதிருப்பது போன்ற வெறுமை நிலை இன்னும் சில வாரங்களுக்கோ – மாதங்களுக்கோ நீடித்தால், புலிகள் இயக்கம் என ஒரு அமைப்பு இருந்ததா என்ற கேள்வியே வந்து விடும். உலகம் எம்மையும் புலிகள் இயக்கத்தையும் மறந்து விடும். ஏனெனில் அதன் அசைவும் வேகமும் மிக அதிகம். அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து நாமும் ஓடினால் தான் எமக்கான உரிமைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கலாம். எமது நியாயங்களை முன்வைத்து நீதி கேட்கலாம்.
இவ்வளவு அநீதிகளையும் அக்கிரமங்களையும் செய்து விட்டு – வெற்றி மிதப்பில் இருக்கும் மகிந்தவைப் போர்க் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வாய்ப்பைக் கூட நாம் தொலைத்து விடும் நிலை வரலாம்.
போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைகள் தேவை என்ற கருத்து தற்போது பரவலாக இருக்கின்ற நிலையில் இதுபற்றி தமிழர் தரப்பில் இருந்து எவராலும் அழுத்தம் கொடுக்கப்பட முடியாத நிலை காணப்படுகிறது.
தற்போது புலிகள் இயக்கத்தின் தலைமை அழிக்கப்பட்டு விட்ட நிலையில் – தமிழர் தரப்பில் இருந்து குரல் கொடுக்கும் சக்தி என எவருமே இனங்காணப் படவில்லை.
ஒன்றில் அரசாங்கத்துக்கு கால் பிடிக்கின்ற கூட்டம் இருக்கிறது. அல்லது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று எமக்குள்ளே மாறி மாறி சண்டை போடும் இன்னொரு தரப்பு இருக்கிறது.
பிரபாகரன் உயிரோடு இருந்தால் அதைவிடத் தமிழினத்துக்கு மிகப் பெரிய பூரிப்பு வேறெதுவும் இருக்க முடியாது.
ஆனால், அவர் வெளிப்பட்டு வந்து போராட்டத்தை முன்னெடுக்கும் வரை உலகம் பொறுத்திராது.
இதைவிட, சிங்களதேசம் இன்னும் வேகமாக மாற்றுத் தலைமையை உருவாக்கி விடும் ஆபத்தும் உள்ளது.
சரியான தருணத்தில் எடுக்கப்படாத எந்த முடிவுமே பயன் உள்ளதாக அமையாது.
எமது போராட்டத்தை அரசியல் வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான தலைமையை உருவாக்க வேண்டிய நேரம் இதுவே.
தமிழருக்கு புதியதொரு அரசியல் தலைமை என்ற பெயரில் தமக்குத் தாளம் போடக் கூடிய ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கு சிங்கள தேசம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னதாக – புலிகளை முற்றாக அழித்து விட்டு தமிழ் மக்களுக்கு புதியதொரு தலைமையை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண கூறியிருந்தமை நினைவிருக்கலாம்.
புலிகள் என்ற நாமமே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தெரியக் கூடாதென்ற நோக்கில் தான் இலங்கை அரசு புதிய தலைமையை உருவாக்கப் போவதாகச் சொல்கிறது.
நாம் இந்தக் கணம் சரியான முடிவுகளை எடுக்கத் தவறினாலோ தாமதித்தாலோ – சிங்கள அரசு உருவாக்கப் போகும் தலைமைக்குத் தலைவணங்கும் நிலை ஈழத் தமிழினத்துக்கு வந்து விடும்.
தமிழீழத் தேசியத்துக்கான விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்து – பிரதேசவாதத்தை விதைத்து தமிழ் மக்களின் வாழ்வையே கேள்விக் குறியாக்கி நாசப்படுத்திய கருணாவை – தமிழ் மக்களின் தலைவனாக முடிசூட்ட இலங்கை அரசு முயற்சிக்கிறது. இந்த இழிசெயலுக்கு நாமும் துணை போகலாமா?
புதியதொரு தலைமையின் கீழ் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் நாம் தள்ளாடி நிற்கின்ற ஒவ்வொரு கணமும், சிங்கள அரசின் புதிய தலைமை உருவாக்கத்துக்குத் துணை போகும் யுகங்களாகும்.
இது நமக்கு நாமே வெட்டுகின்ற குழி. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்க, நாசப்படுத்த நாமே வழிகாட்டுவதற்கு ஒப்பானது.
இவற்றையெல்லாம் விட, கடைசி மூச்சு வரைக்கும் போராடி மரணித்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மற்றும் தளபதிகள் போராளிகளின் இறுதி விருப்பத்தை – அவர்களின் இரத்தம் காய்வதற்கு முன்னரே குழிதோண்டிப் புதைக்கின்ற செயலாகவே இது அமையும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடுவதென்ற நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தாமதிப்பதும், அடுத்த கட்டமாக நாம் எப்படிச் செயற்படப் போகிறோம் என்று தீர்மானிப்பதை தவிர்ப்பதும் இதுவரை வீரமரணத்தைத் தழுவிய 27,000 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களை இழிவுபடுத்துவதாகவே அமையும். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் மரணங்களைக் கேவலப்படுத்துகின்ற செயலாகவே அமையும்.
சாத்தியமான வழிகளில் புதியதொரு தலைமைத்துவத்தின் கீழ் எமது போராட்டதைக் கட்டியெnழுப்ப வேண்டிய தருணத்தை தவற விடுவது – தமிழினத்துக்கு வரலாற்று ரீதியாகச் செய்யும் துரோகமாகும்.
இந்தத் தருணத்தை தவற விட்டால் இதற்குப் பின்னர் எமக்காகக் குரல் கொடுக்க எவரும் வரமாட்டார்கள்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம். இனிமேலும் நாம் இரண்டுபட்டு நிற்காமல் ஒன்று பட்டுப் போராடுவதற்கான வழிகளைத் தேடுவதே புத்திசாலித்தனமானது.
செய்வோமா? செயல்படுத்துவோமா? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!!
இதுவே தலைவனுக்கும், மரணித்த மாவீரருக்கும், மக்களுக்கும் நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.
சுவிசிலிருந்து கிருஸ்ணா அம்பலவாணர்
0 விமர்சனங்கள்:
Post a Comment