கப்டன் அலி கப்பல் விடுவிக்கப்படும்: கோதபாய ராஜபக்ஷ
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமானப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த கப்டன் அலி கப்பலை கடற்படையினர் விடுவிக்கவிருப்பதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய கப்பலில் மனிதாபிமானப் பொருள்கள் மாத்திரமே காணப்படுகின்றன, வேறு பொருள்கள் இல்லையென விசாரணை நடத்தும் கடற்படை அதிகாரிகள் உறுதிப்படுத்தும் பட்சத்தில் அக்கப்பல் விடுவிக்கப்படும் என அவர் கூறினார்.
“அக்கப்பல் குறிப்பிட்ட சர்வதேச கடல் சட்டத்தை மீறியுள்ளபோதும் அதில் இதுவரை எந்தவிதமான ஆபத்தான பொருள்களும் மீட்கப்படவில்லை. இவற்றைக் கருத்தில்கொண்டு விரைவில் முடிவொன்று எடுப்போம்” என கோதபாய ராஜபக்ஷ கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காகப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் சேகரித்த 884 தொண் உணவு மற்றும் மருந்துப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்படன் அலி அல்லது வணங்காமண் கப்பல் கடந்த வியாழக்கிழமை இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்தபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கப்பல் பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் இழுத்துவரப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. அக்கப்பலிலிருந்த 13 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர். அக்கப்பலில் சட்டவிரோதமான பொருள்கள் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லையென கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், மனிதாபிமானப் பொருள்களுடன் வந்திருக்கும் இக்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து அங்கு பொருள்களை இறக்குமா இல்லையா என்பது பற்றி இதுவரை தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அரசாங்கத்தின் அதிகாரிகளும் இது குறித்துத் தகவல் வெளியிட விரும்பவில்லை. இது பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹண கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment