ஜாக்ஸனின் மரணத்தால் பலர் மனரீதியாகப் பாதிப்பு : 12 பேர் தற்கொலை
பொப் இசை மன்னன் மைக்கல் ஜாக்ஸனின் மறைவைத் தாங்க முடியாமல், இதுவரை உலகம் முழுவதும் 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஏராளமான ரசிகர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிவர உதவுமாறு அதற்கான ஹொட்லைன் வசதியைத் தொடர்பு கொண்டபடி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 50க்கும் மேற்பட்டோர் இவ்வாறு உதவி கோரி தொடர்பு கொண்டுள்ளதாக மன நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
லண்டனைச் சேர்ந்த ரசிகர் கேரி டெய்லர் என்பவர் ஜாக்ஸனுக்கான இன்டர்நெட் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். அவர் கூறுகையில்,
"இதுவரை 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது.
மைக்கேல் ஜாக்ஸன் இதுபோன்ற மரணத்தை விரும்ப மாட்டார். அதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே ஜாக்ஸனின் விருப்பம்" என்றார்.
ஜாக்ஸனின் மரணத்தால் அவரது பல ரசிகர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனராம். இதுபோன்ற பிரபலங்கள் மரணமடையும்போது அது மனதளவில் பலரையும் வெகுவாகப் பாதித்து விடுகிறது என்கிறார் லைப்லைன் என்கிற மன நல ஆலோசனை அமைப்பின் தலைமை செயலதிகாரி டான் ஓ நீல்.
இதற்கிடையே, ஜாக்ஸனின் குடும்ப நண்பரான ஜெசி ஜாக்ஸ்ன் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,
"யாரும் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளக் கூடாது. இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.
ஜாக்ஸனின் மரணம் பெரும் வலிதான். ஆனால் அவரது வாழ்க்கையை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அதுதான் ஜாக்ஸனுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்" என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment