ஸ்ராலின் எழுதிய சுவிசேஸம்
அந்த சிறிய தீவுத் தேசம் அமைதியாகக் கிடக்கிறது. அங்கே யார் மீதும் யாரும் கொலையை ஏவிவிடவில்லை. யார்; மீதும் யாரும் குண்டுகளை வீசவில்லை. யாருக்கு விரோதமாகவும் யாரும் தற்கொலைக் குண்டுதாரிகளை பாயச்சொல்லவில்லை. ஏனென்றால் சுமார் 30 வருடங்களாக அந்த தேசத்தை ஆட்டிப்படைத்த பரமபிதா பரலோகம் அடைந்துவிட்டார். யார் அந்தப் பரமபிதா?
அவர் சர்வவல்லமை கொண்டவர் என மக்கள் நம்பினர். தனக்குத் தானே பரமபிதா என்று பெயரிட்டுக்கொண்டவர் அவர். தன்னை மட்டுமே விசுவாசித்து தன்னையே தினமும் தோத்திரம் செய்யுமாறு ஜனங்களுக்கு அவர் கட்டளையிட்டார். தன்மீது விசுவாசம் வைப்பவன் மட்டுமே இப்பூவுலகில் உயிர்வாழக் கடவர்கள் எனவும், அவர்களுக்கு மட்டுமே தனது பரலோக இராட்சியத்தில் இடம் இருக்கும் எனவும் அவர் அறிவித்தார். அவருக்கு விரோதமாகவோ, அவருடைய ராட்சியத்துக்கு விரோதமாகவோ வார்த்தைகளை விதைப்பவர்கள் உயிர்வாழத் தகுதியற்றவர் என அவர் கண்டார். வடக்கு, கிழக்கு திசைகளில் பரவிக்கிடந்த இராட்சியம் எங்கிலும் யார் யார் நீதிமான்கள் என்பதையும் அவரே தேர்ந்தெடுத்தார். அவரது விசுவாசிகளைப் போலவே அவர் தேர்ந்தெடுத்த அந்த நீதிமான்களும் அவரது இராட்சியத்தை புகழ்ந்தார்கள். அவருடைய வார்த்தை ஒன்றே நித்திய வாழ்வுக்கான ஆகாரம் என்று கூறி ஆர்ப்பரித்தார்கள்.
நீதிமான்களை மட்டும் அல்ல நியாயப்பிரமாணங்களையும் அவரே போதித்தார். அதற்காக நீதிமொழிகளையும் கூட அவரே சிருஸ்டித்தார். அவரது இராட்சியத்தில் அவரது விருப்பத்தின்படியே மாவீரன், மாமனிதன், நாட்டுப்பற்றாளன், தேசத்துரோகி என்று மனிதர்கள் வகைப்படுத்தப்பட்டனர். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிமான்களும் பரமபிதாவின் போதனையின்படியே பொதுஜனங்களுக்கு இப்பெயர்களை இட்டு நீதிவழங்கினார்கள். அதன்படியே ஜனங்கள் எல்லாம் அவருடைய வார்த்தைகளுக்கு கட்டுண்டு, விசுவாசித்து அவற்றையே பின்பற்றத் தொடங்கினர். அப்போது அவருடைய இராட்சியம் விசாலம் அடைந்தது. அந்த தனது இராட்சியத்தை பரிபாலிக்க அவர் பன்னிரு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்.
அவர்களை நோக்கி இப்பூவுலக ராட்சியத்தின் ஆசாபாசங்களில் இருந்து விடுபட்டு என்னை பின்தொடருங்கள். உங்களை மனிசர்களை பிடிக்கிறவனாக்குவேன் என்றார். அச்சீடர்களும் அவரது பிரசங்கத்தை கேட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். அப்போது அவர்களிடம் அவர் தனது பரமண்டல ஜெபத்தை மிக ரகசியமாக கற்பித்தார். “தட்டுங்கள் திறக்கப்படும்” “கேளுங்கள் கொடுக்கப்படும்” “தேடுங்கள் கிடைக்கும்” என்றார்.
அந்த பரமண்டல ஜெபத்தை அந்த பன்னிரு சீடர்களும் கேட்டு வியாகூலம் அடைந்தனர். அதையே அவர்கள் விசுவாசித்து ஜனங்களிடம் அவர்கள் பிரசங்கிக்க தொடங்கினர். வடதிசை தொடங்கி கீழ்திசை வரைக்கும் தட்டத்தொடங்கினர். தங்கள் பரமபிதாவுக்கு விரோதமானவன் யாரோ அவர்கள் வெகுசீக்கிரமே தட்டப்படக் கடவர்கள் என்று முன்னறிவிக்கும் அளவிற்கு அவர்கள் அன்பானவர்களாய் இருந்தனர். அதே போன்று வடதேசத்தின் நுழைவாயில் கடவையில் நின்றுகொன்டு கேட்கத்தொடங்கினர். ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொருவரை பரமபிதாவின் சேனைகளுக்காக தேடிப்பிடித்தனர். உங்களை மனிசர்களைப் பிடிக்கிறவனாக்குவேன் எனும் பரமபிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறிற்று.
அவ்வேளை தனது பிரசவ தினத்தை பொதுஜனங்கள் எல்லாம் கொண்டாடும்படியாக பரமபிதா எண்ணம் கொண்டார். அதன்படிக்கு பதனோராம் மாதத்தில் இருபத்தி ஆறாம் நாளை “மரித்தோர்களின் நாள்” என்று அவர் பிரகடனம் செய்தார். அன்னாளிலேயே தனது கட்டளையை கைகொள்ளும்படிக்கு தன் சேனைகளுக்கும் சீடர்களுக்கும், வம்சத்தாருக்கும், பொதுஜனங்களுக்கும் தனது உபதேசம் நிகழும் என்று பரமபிதா அறிவித்தார். அந்நாளில் நீங்கள் எல்லோரும் எனது விக்கிரகங்களையும், சுரூபங்களையும் உண்டாக்கி என்னை வணங்குங்கள். அதுவே மரித்தோர்களின் நினைவாக நீங்கள் செய்யும் நினைவுகூரலாகும் என தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார்.
பரமபிதாவுக்கு எதிராகவும் வடகிழக்கு தேசத்தின் ஜனங்களுக்கு எதிராகவும் படையெடுக்கும் மேற்றிசை சேனைகளின் அட்டூழியங்கள் அதிகரித்தன. இதனால் பொதுஜனங்கள் அல்லலுற்றார்கள் என்பதை அறிந்த நீதிமான்களுக்கு நிகரான எட்டு ஸ்திரிகள் மேற்திசை சேனைகளுக்கு எதிராக உபவாசம் இருக்கத் தொடங்கினர். இதை அறிந்த பரமபிதா உபவாசங்கள் இருப்பதால் மட்டும் பொதுஜனங்கள் மீட்சியடையப் போவதில்லை. என் வார்த்தைகளைக் கேட்டு அதையே விசுவாசித்து அதன்படியே பின்பற்றுவதனால் மட்டுமே அக்காரியம் நடக்கும் என்று அவர்களுக்கு சொல்லுங்கள் என்றார். அதன்படியே அவருடைய சீடர்கள் அந்த ஸ்திரிகள் உபவாசம் இருக்குமிடம் சென்ற பரமபிதாவின் வர்த்தைகளை அவர்களுக்கு பிரசங்கித்து அவர்களை பரமபிதாவிடம் கொன்றுசென்றனர். பரமபிதா அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களுக்கும் தன் பரமண்டல ஜெபத்தை உபதேசித்தார்.
சில காலத்தின் பின்னர் அந்த ஸ்திரீகளின் ரூபவதியான ஒருத்தியை பரமபிதா அறிந்தார். அதன் காரணமாக அவள் கர்ப்பவதியானாள். ஒரு நாள் நடுநிசியில் பரமபிதாவின் கனவில் தேவதூதன் தோன்றி “மாற்றான் ஒருவனுக்கு மனைவி ஆக வேண்டியவளை நீர் அறிந்ததென்ன?, இது எப்படி கைகூடும்?” என வினவினான். பரமபிதா திடீரென விழித்தெழுந்தார். அந்த ஸ்திரீயை தன்முன்னே நிறுத்தி “நீர் தரிசனங்களால் என்னை ஆலிங்கனம் பண்ணி, சொப்பனங்களால் என்னை கலங்கப்பண்ணுகிறாயோ?” என்றார். அதற்கு அவர் பிரதியுத்தரமாக….. “பரமபிதாவே என் விசுவாசத்தை சந்தேகம் கொள்வதென்ன? நான் என்னை முழுமையாகவே என் தேவனாகிய உனக்கு ஒப்புக்கொடுக்கத் தயாராய் இருக்கிறேன். இன்னும் கூடவே ஞானத்தையும், விவேகத்தையும் உமக்கு அதிகரித்து உமக்கு முன்னிருந்த ராஜாக்களுக்காகிலும், உமக்கு பின்னிருக்கப் போகும் ராஜக்களுக்காகிலும் இல்லாத ஜஸ்வரியத்தையும், கனத்தையும் உமக்குத் தந்து உமது கோத்திரத்தை இவ்வுலகமெல்லாம் பெருக்குவேன்” என்றாள். அவள் அப்படிக் கூறிக்கொண்டே பரிமள தைலத்தை எடுத்து தன் இருகைளினாலும் பரமபிதாவின் பாதங்களைக் கழுவினாள்.
அப்போது பரமபிதா அவளை நோக்கி உன் விசுவாசம் உன்னை மீட்டது. உன் சித்தம் நிறைவேறட்டும் என்றார். அவள் வாக்களித்தபடியே பரமபிதாவுக்கு முப்பது வயதானபோது அவள் தனது மூத்த குமாரனைப் பெற்றெடுத்தாள். மேலும் ஒரு குமாரத்தியும் இன்னுமொரு குமாரனுமாக பரமபிதாவின் கோத்திரம் தளைத்தது. பரமபிதா தனது மூத்த குமாரனை தனது சேனைகளின் தலைவனாக்கவும், தன் குமாரத்தியை தன் இராட்சியத்தின் இராஜகுமாரியாக்கவும் எண்ணம் கொண்டார். அறிஞர்களையும் புத்திமான்களையும் அழைப்பித்து தம் குமாரர்களுக்கு ஞானங்களைப் போதிக்குமாறு கட்டளையிட்டார். தன் குமாரத்திக்கு வண்ண வண்ணமான ஆடை அணிகலங்ளை அணிவித்து பரமபிதா அழகு பார்த்தார். அதன் பின்னர் தன் குமாரர்கள் உலக ஞானங்களைக் கற்றுத்தேறும்படிக்கு அவர்களை தூரதேசம் அனுப்பி வைத்தார்.
அவ்வேளை அவரது சீடர்களோ வடகீழ் தேசத்தின் எல்லையுள் வாழும் பன்னிரு வயது கடந்த எல்லா குழந்தைகளையும் தம் சேனைகளில் சேர்ப்பித்து அவர்களுக்கு நச்சுக்குப்பிகளை பரிசாகக் கொடுத்தனர். அவற்றை அவர்களின் கழுத்தில் அணிவித்து பரமபிதா சந்தோசம் அடைந்தார். அச்சேனைகளில் இருந்து ஸ்திரீகளை மட்டும் தேர்ந்தெடுத்து இராப்போசன விருந்தளித்து அவர்களை குண்டுகாவிகளாக மாற்றி மகிழ்வது பரமபிதாவின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிற்று. அந்த ஸ்திரீகளும் பரமபிதாவுடன் விருந்துண்ணும் பாக்கியம் பெற்றதை எண்ணி குதூகலித்தனர். தங்கள் பாவங்கள் எல்லாம் பரமபிதாவின் ஜீவ இரத்தத்தால் கழுவப்பட்டுவிட்டதாக எண்ணி சந்தோசித்தனர்.
அவ்வேளை பரமபிதா அவர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்பார். நீங்கள் மௌனமாய் இருப்பதென்ன, மக்களுக்காக மரிக்க உங்களுக்கு சம்மதம்தானே? உங்களுக்கான இடம் பரலோக இராட்சியத்தில் ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்பார். அதற்கு பிரதியுத்தரமாக அவர்களும் ஆம் பரமபிதாவே உமது சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக என்பர். அதன் பின்னர் அந்த குண்டுகாவி ஸ்திரீகள் தென் தேசத்து ராஜாவுக்காகிலும், மந்திரிகளுக்காகிலும் சில வேளைகளில் அன்னிய தேசத்து ராஜாக்களை நோக்கியும் புறப்பட்டுப் போவார்கள். இப்படி தென்தேசத்தில் பலரையும், பிற தேசத்தின் ராஜா ஒருவரையும் பரமபிதா கொன்று போட்டார். இப்படியே அவரது சேனைகள் சர்வவல்லமை பொருந்தியதாக மாறியதை எண்ணி பரமபிதா அகமகிழ்ந்தார். புறசமயத்து ஆலயங்களுக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கானோரை வெட்டிக்கொல்லவும் பரமபிதா துணிந்தார். வடதேசத்தில் இருந்து ஒரு லட்சம் புறசமய ஜனங்களை தென்திசை நோக்கி துரத்திவிடுமாறும் பரமபிதா கட்டளையிட்டார். ஆனால் சேனைகளோ, சேனைகளின் மேய்பர்களோ கூட பரமபிதாவை நேரடியாக காண்பது அருகிக்கொண்டே வந்தது. அவர் அனேகமாக ஆவியானவராகவே இருந்தார். வருடம் ஒருமுறை மட்டும் அவர் முன்அறிவித்ததைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை பொதுஜனங்களுக்கு வெளிப்படுத்தும் எண்ணத்தில் அவர் காட்சியளிப்பார். அப்போது அவரது சீடர்கள் பரமபிதா மக்கள் முன் தோன்றினார் எனச் சொல்லி மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பார்கள்.
பரமபிதாவின் முதன்மைச் சீடர்களின் ஒருவன் ஆறாயிரம் பேரைக்கொண்ட பெரும்சேனைக்கு அதிபதியாய் இருந்தான். கீழ்த் திசை தேசத்தில் அதிபதியாய் இருந்த அந்த சீடன் மீது பரமபிதாவுக்கு சந்தேகம் உண்டாயிற்று. அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு மற்றய தமது சீடர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து கீழ்த்திசை சென்று வருமாறு பரமபிதா கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே சென்று அந்த முதன்மைச் சீடனையும், கீழ்த்திசை நிலவரங்களையும் கண்காணித்து திரும்பினர். நீண்ட பயணத்தின் இறுதியில் அம்முதன்மைச் சீடன் பற்றிய துர்ச்செய்தியுடன் பரமபிதாவின் முன் முழந்தாள் இட்டு பணிந்து அந்த முதன்மைச் சீடனுக்கு விரோதமாக சாட்சி சொன்னார்கள்.
“ஆறாயிரம் பேரடங்கிய அவனிடம் இருக்கும் சேனைகள், பரமபிதாவாகிய உமக்கன்றி அவன் மீதே விசுவாம் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி, அவனது சேனைகளுக்கு வஸ்திரங்களோ, போஜன பானங்களோ எவ்வித குறைவுமின்றி அவன் காத்துவருகின்றான். கிழக்கில் அவன் விளைவித்திருக்கும் பழத்தோட்டங்களும், தானியங்களும் எண்ணற்றவையாக உள்ளன. எம்மிடம் அப்படி ஏதுமே இல்லை. மேலும் அவற்றிக்கான எந்தவொரு வரவுசெலவு கணக்குகளையும் பரமபிதாவாகிய உம்மிடம் அவன் சமர்ப்பிப்பதேயில்லை. இவையெல்லாம் உமக்கு விரோதமான செயல்கள் அன்றி வேறென்ன?”
பரமபிதா ஆழ்ந்து யோசித்தார். அதன் பின்னர் அந்த கீழ்த்திசை சீடனுக்கு அவசரமாக ஒரு கட்டளை அனுப்பினார். அவனது சேனைகளில் பெரும்பகுதியை வடக்கு தேசம் நோக்கி பாளயம் இறக்குமாறும், அவனது பொக்கிஸங்கள் பற்றிய விபரங்களை தமது காலடிகளுக்கு வந்து ஒப்புக்கொடுக்குமாறும் அவனுக்கு கட்டளையிடப்பட்டது.
தந்திரம் கொண்டவனான முதன்மைச்சீடன் சுதாகரித்துக்கொண்டான். பரமபிதாவின் இராட்சியத்துக்கு விரோதமாக பகிரங்கமாகவே தன் கருத்துக்களை வெளிப்படுத்த தொடங்கினான். அந்த கீழ்த்திசை வீரனின் கீழ் மூவாயிரம் பெண் சேனைகளுக்கு அதிபதியாக இருந்த பெண் ஒருத்தியும் கீழ்த்திசை வீரனுடன் சேர்ந்து பரமபிதாவுக்கு எதிராக கலகம் பண்ணினாள். பரமபிதாவின் சுரூபங்களை தெருக்களில் போட்டு எரிக்குமாறு பொதுஜனங்களைத் தூண்டினாள். இதை கேள்வியுற்ற பரமபிதா மூச்சுத்திணறினார். அந்த கீழ்த்திசை வீரன் சாத்தானின் வார்த்தைகளால் விழுங்கப்பட்டு விட்டதாகவும், அசுத்த ஆவி அவனைப் பீடித்திருப்பதாகவும் பரமபிதா பிரசங்கித்தார். அந்த பெண்சேனைகளின் தலைவியும் அவனுடன் சேர்ந்துகொண்டு வேசித்தனம் பண்ணினாள் என்றார்.
கீழ்த்திசை நோக்கி தமது சேனைகளை ஏவிவிட்டார். வடக்கில் இருந்து புறப்பட்ட அவரது சேனைகள் ஒரு பெரியவெள்ளி நடுநிசியில் கீழ்திசையின் எல்லையில் உள்ள ஓர் ஏரி அண்டையில் வந்து பாளையம் இறக்கினார்கள். அங்கே மிகப்பெரிய படுகொலை ஒன்று சம்பவித்தது. சுமார் முன்னூற்றிப் பத்து கீழ்த்திசை வீரர்கள் சிலுவையில் அறையப்பட்டனர். அன்றிலிருந்து எஞ்சிய கீழ்திசை வீரர்களும் அத்தேசத்து ஜனங்களுமாக இணைந்து பரமபிதாவின் இராட்சியத்துக்கு விரோதமாக புரட்சி செய்யத் தொடங்கினர்.
கிழக்கு தேசத்தின் புரட்சியின் காரணமாக பரமபிதாவின் சேனைகள் வடக்கில் மட்டுமே முடங்கிக் கொள்ள நேர்ந்தது. அப்போது பரமபிதாவுக்கு எதிராக படையெடுத்து வடராட்சியத்தை வெல்ல தென்தேசத்து ராஜா திட்டமிட்டான். அதன்படியே யுத்தம் ஆரம்பமாயிற்று. தூயவெள்ளை ஆடையணிந்து சிவப்பு துப்பட்டா போர்த்திய அந்த ராஜா வடதேசத்து ஜனங்களை நோக்கி பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். “நானே தேவன், நானே பரமபிதா, நானே உங்களுக்கு சமாதானத்தை தரவல்லவன். தன்னை பரமபிதா என்று சொல்லிக்கொள்ளும் சாத்தானிடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் உங்களை மீட்பதற்காகவே உங்களிடம் வருகின்றேன். அவனுக்கு விசுவாசமாக அல்ல, எனக்கு விசுவாசமாகவே நீங்கள் மனம்திரும்ப வேண்டும்.” என்றான்.
ஜனங்கள் குழப்பம் அடைந்தனர். யார் பரமபிதா? யார் தங்களை மீட்பர்? என்று புரியாமல் குழப்பத்தினால் ஜனங்கள் தத்தளித்தனர். ஜனங்களை மீட்கும் யுத்தம் தென்தேசத்து இராஜாவால் வேகமாக முன்னெடுக்கப்பட்டது. துப்பாக்கிகளும், பீரங்கிகளும் முழங்க ஆரம்பித்தன. ஆகாயத்தினுடாக குண்டுகள் வீசப்பட்டது ஆயிரக்கணக்கில் ஜனங்கள் அழித்தொழிக்கப்பட்டனர். பரமபிதாவின் சேனைகள் தென்சேனைகளுக்கு முகம் கொடுக்கமுடியாமல் பின்வாங்கி ஓடின. அப்போது ஜனங்களுக்கு பரமபிதாவினிடத்தில் இருந்த விசுவாசம் குறையலாயிற்று. அவர்கள் தமது உயிரைக்காக்க பரமபிதா வல்லமையற்றவர் என்பதை உணர்ந்தனர். குழந்தைகள் பசியால் வாடின, புசிப்பதற்கு ஏதுமின்றி மரணங்களும் சம்பவித்தன. பரமபிதாவின் சேனைகள் கூட தென்சேனைகளிடம் சரணடைய தொடங்கின.
இவற்றையறிந்த பரமபிதா நடுநடுங்கினார். ஜனங்கள் தென்சேனைகளை நோக்கி ஓடிப்போகிறதை நீங்கள் அறிந்திருந்தும் அதை ஏன் எனக்கு வெளிப்படுத்தவில்லை என்று தன் சீடர்களை கடிந்து கொண்டார். பரமபிதாவின் சீடர்கள் ஜனங்கள் தம்மை விட்டு ஓடி போகிறதை தடுக்க பலவழிகளிலும் முயன்றனர். அவர்களை நோக்கி இவ்வாறு கூறினர். “மகா ஜனங்களே பரமபிதாவிற்கு விரோதமாக மாத்திரம் எண்ணம் கொள்ளாதீர்கள். மாற்று தேசத்து சேனைகளுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. பரமபிதாவின் நிழல் உங்களோடு இருக்கிறது. அவர்களால் நமது சேனைகளை ஊடறுத்து உள்ளே வரமுடியாது. அப்படி அவர்கள் உள்ளே வருவது நிறைவேறி விட்டால் நமது பரமபிதா உள்ளே விட்டு அடிப்பார். அப்போது அவர்களெல்லாம் அழிவது திண்ணம். ஆகவே பயம் கொள்ளாதீர்கள். பரமபிதாவை மட்டும் விசுவாசியுங்கள்.”
இவ்வாறு அவர்கள் கூறியதை கேட்ட ஜனங்கள் எங்களிடம் புசிப்பதற்கு கூட ஏதுமில்லையே! நாங்கள் எப்படி பிழைப்போம் என்றனர். அதற்கு சீடர்கள்
“மனிதன் உயிர்வாழ்வது போஜனங்களால் மட்டுமன்றி பரமபிதாவின் ஒவ்வொரு வார்த்தையினாலும் மனிதன் உயிர்வாழ்வான் என்று சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் அறியவில்லையோ” என்று அதட்டினர்.ஆனாலும் ஜனங்களை கட்டுபடுத்த முடியவில்லை. கூடவே பரமபிதாவின் முக்கிய சீடர்களும் கூட பரமபிதாவை கைவிட்டு ஜனங்களோடு ஜனங்களாக கலந்து ஓடிப்போயினர். சில சீடர்கள் தென்சேனைகளிடம் சரணடைந்து பரமபிதாவை மறுதலித்து பரமபிதாவிற்கு விரோதமாக சாட்சி சொல்லத் துணிந்தனர். பரமபிதா இறுதியாகக் கட்டளையிட்டார். தம் இராட்சியத்தை விட்டு தப்பயோடும் அனைவரையும் கொல்லும்படிக்கு சீடர்களைப் பணித்தார். அதன்படியே பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி பலர் பரமபிதாவின் சீடர்களால் கொல்லப்பட்டனர். ஆனாலும் பரமபிதாவின் இராட்சியத்தில் இருந்த மூன்று லட்சம் ஜனங்களும் தென்சேனையை நோக்கி தப்பியோடியதை தடுக்கமுடியவில்லை.
தனக்கான இறுதிநாட்கள் நெருங்குவதை உணர்ந்தார் பரமபிதா. பரமபிதாவிற்கு தனது உயிர் குறித்தும் தனது வம்சம் குறித்தும் கவலை அதிகரித்தது. அப்போது அவர் தன் மனைவியை பார்த்து “நீ எழுந்து என் குமாரர்கள் மூவரையும் கூட்டி கொண்டு என்னை விட்டு விலகிப்போ. உன்னை பரமபிதாவின் மனைவியென்று யாரும் அறியாதபடிக்கு வேடம் தரித்து ஜனங்களோடு ஜனங்களாக போ. அங்கு ஏதாவது போஜனம் பண்ணுவீர்கள். அப்போதுதான் நீங்கள் உயிர் வாழ்வீர்கள் என்றார். அதற்கு அவள் பிரதியுத்தரமாக….
என்தேவனே மனிதன் உயிர்வாழ்வது போஜனத்தினால் மட்டுமன்றி உம்முடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றாள். பரமபிதாவிற்கு எரிச்சல் உண்ணடாயிற்று. “அப்படியே உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி” பரமபிதா உறுமினார். அதே கணப்பொழுதில் வானத்திலிருந்து வந்த அந்த இடியோசை கொத்தளங்களாலான அந்த கூரையை பிய்த்துக்கொண்டு தீச்சுவாலையாக வீழ்ந்தது. பரமபிதாவின் மனைவியும் குமாரத்தியும் அவ்விடத்திலேயே மாண்டார்கள். பரமபிதா விறைத்துப்போய் நின்றார்.
அவரது சீடர்கள் பரமபிதாவின் கரங்களை பற்றி ஆறுதல் சொன்னார்கள். பரமபிதாவின் நெஞ்சிலும் ஈரம் இருப்பதை அவரது சீடர்கள் முதன்முறையாகக் கண்டார்கள். அவரது கண்கள் கலங்கின.பரமபிதா தனது இராச்சியத்தின் பட்டணங்கள் ஒவ்வொன்றாக தோற்றுபோன போதும் கலங்காதவர், அவரது ஜனங்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோதும் கலங்காதவர், வெட்டி வீழ்த்தப்பட்ட சுடுகாடு போல் வெந்து தணியாத அந்தசுடுமணல் தரையெங்கும் ஒன்றின்மேல் ஒன்றாக பிணங்கள் வீழந்தபோதும் கலங்காதவர், ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும் வீழ்ந்து கிடக்க அநாதரவான குழந்தைகள் பிணங்களின் மேல் தவழ்ந்து திரிந்த காட்சியை கண்டும் கலங்காதவர், சாவு அவரது அரண்மனை வாசற்படியை மிதித்தபோது கலங்கினார். “ஐயகோ என் வம்சம் அழிகிறதே” பரமபிதா பீறிட்டு கதறினார். அவரது கையாலேயே அவரது மனைவியையும் குமாரத்தியையும் புதைக்க சீடர்கள் ஏற்பாடு செய்தனர். தூரதேசத்தின் ஊடாக சமாதானம் கோரி அனுப்பிய செய்திகளுக்கு தகுந்த பதில் எதுவும் எட்டவில்லை. அதன் நிமித்தம் மீண்டும் தூரதேசத்தில் இருந்து சமாதானம் பண்ணுபவர்களுக்கும் இப்பூமியின் நீதிமான்கள் அனைவருக்கும் அவசரமாக சமாதானம் கோரி செய்தி அனுப்புமாறு பரமபிதா கர்ச்சித்தார்.
”
துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தின் நிமித்தமும் அறிவற்ற அக்கிரமக்காரனின் இரத்தவெறிகொண்ட சூதுகளின் நிமித்தமும் எம்ஜனங்கள் அழிகின்றார்கள். இதனை தடுத்து நிறுத்த இறுதியாக இம்முறையீட்டைச் செய்கின்றோம். அவர்கள் எம்மேல் பழிசாட்டி குரோதம் கொண்டு எங்கள் பிராணனை வாங்க விரும்பி எமது காலடிக்குள் வந்துவிட்டார்கள். எங்கள் இருதயங்கள் இயங்க மறுக்கின்றன. பரமபிதாவின் மேல் மரணத்தின் திகில் விழுகின்றது. பயமும் நடுக்கமும் அவரைப் பீடித்துவிட்டது. பலநாட்களாக நாங்கள் பாதாளத்துக்குள்ளேயே ஒழிந்துகிடக்கின்றோம். எங்கள் ஆத்மாக்கள் கொடிய சிங்கங்களின் நடுவே சிக்கித் தவிக்கும் ஆடுகள் போல் சஞ்சலப்படுகின்றன” என்று அவர்களுக்கு சொல்லக்கடவீர்கள் என்றார். இறுதியாக குளிர்தேசத்தில் இருந்து சமாதானம் பேசும் அந்த வெள்ளைச் சம்மனசு அவர்களோடு நேரடியாகப் பேசியது. தென்தேசத்து பட்டாளத்தின் அதிபதிகளுடன் பேசியாயிற்று. அவர்கள் உங்கள் அனைவருக்கும் மன்னிப்பளித்து உயிர்ப்பிச்சை தர சித்தம் கொண்டுள்ளனர். அதற்காக உங்கள் நிமித்தம் நிறைவேற்ற வேண்டிய காரியம் ஒன்றுள்ளது. அதாவது நீங்கள் உங்களிடமிருக்கும் படைக்கலங்கள் அனைத்தையும் கைவிட்டு கைகளை உயர்த்தியவண்ணம் பாதாளக்குழிகளை விட்டு வெளியே வாருங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும் என்றது.
இச்செய்தியை அறிந்த பரமபிதா தன்முதன்மைச் சீடன் ஒருவனை அழைத்து அப்படியே ஆகட்டும். சம்மனசு தெரிவித்ததைப்போலவே ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்றார். அதன்படியே அவன் எழுந்துநின்று மற்றய சீடர்களையும், அவர்களது குடும்ப உறவினர்களையும், மற்றும் எழுநூறுபேரடங்கிய பரமபிதாவின் விசுவாசச் சேனையையும் பார்த்துக் கூறியதாவது
“நம் தேவனாகிய பரமபிதா தம்முடையை மகிமையையும், தம்முடைய மகத்துவத்தையும் காண்பிக்கும் வண்ணம் நம் அனைவருக்கும் கட்டளையிடுகின்றார். அவரது தீர்க்கதரிசனம் நம் எல்லோரையும் இரட்சிக்கும் என்று நம்புவோமாக. அப்படியே நாமெல்லாம் எழுந்து படைக்கலங்களை வீசி எறிந்துவிட்டு வெள்ளைக்கொடிகளை உயர்த்திப்பிடித்தவண்ணம் பரமபிதாவை பின்தொடர்வோம். ஆமேன்.பரமபிதா தம் மூத்த சீடனின் மனைவியாகிய அந்த ஸ்திரீயை நோக்கி இவ்வாறு சொன்னார். “நீ வேற்று மொழி பேசுகிறவளாய் இருப்பதனால் நாம் பாக்கியசாலிகளானோம். உன் நிமித்தம் எங்களுக்கு நன்மை உண்டாகும் படிக்கும், உன்னாலேயே எங்கள் உயிர் பிழைக்கும் படிக்கும் நீயே வெள்ளைக்கொடியுடன் முன்னே செல்லக்கடவாய் என்றார். அத்தோடு பரமபிதாவின் சீடர்களின் ஒருவன் எம்முடன் இருக்கும் தென் தேசத்து யுத்தகைதிகள் நால்வரையும் உன்னுடனேயே முன்னே கூட்டிச் செல்வாய் என்று அந்த ஸ்திரீக்கு மேலும் ஒரு கட்டளையிட்டார். அதன்படியே அந்த ஸ்திரீ வெள்ளைக் கொடியுடன் முன்னே செல்ல பரமபிதாவும் அவரது சீடர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
தென்தேச சேனைகள் இவர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். பரமபிதாவும் சீடர்களும் அவர்களை நெருங்கின மாத்திரத்திலயே தென்தேச சேனைகள் அவர்களை மகா சத்தமாய்க் கூப்பிட்டு உங்கள் படைக்கலங்களை மட்டுமல்ல வஸ்திரங்களையும் களைந்துவிட்டு வாருங்கள் என்றனர். பரமபிதா தன்னைத்தானே ஒப்புக்கொடுக்கும் நாள் நெருங்கிற்று. தென்சேனைகள் அவர்களைச் சுற்றிவளைத்து அவர்கள் கரங்களில் விலங்கிட்டனர். பின்னர் தங்களுக்கு முன்பாக முழந்தாள் படியிட்டு நிற்குமாறு பரமபிதாவுக்கு கட்டளையிட்டனர். பரமபிதா தன் வாழ்நாளில் முதற்தடவையாக முழந்தாளிட்டு நின்றார். அவரது வலது பாரிசத்தில் அவரது மூத்த குமாரனும், இடது பாரிசத்தில் முதன்மைச் சீடன் ஒருவனுமாய் அவ்வாறே முழந்தாளிட்டு நின்றனர். அப்போது தென்சேனைகளின் அதிபதி அவர்களைக் கொல்ல மனமின்றி நச்சுக்குப்பிகளை அவர்களிடம் கொடுத்து நீங்கள் இதனைப் புசியுங்கள், இது உங்களுக்காகவே உங்களால் தயார் செய்யப்பட்டவைதான் என்றான். அவர்கள் அதை புசிக்க மனமின்றி தலைகவிழ்ந்து நின்றனர்.
அதன் பின்னர் அவர்கள் மீதான பரியாசமும், ஆக்கினையும் அரங்கேறிற்று. சிலர் பரமபிதாவின் முகத்திலே துப்பினார்கள். சிலர் அவரது சிரசிலே குத்தினார்கள். வேறுசிலலோ அவரை கன்னத்தில் அறைந்தார்கள். பரமபிதா கடற்கரை மண்ணில் ஓடுமாறு கட்டளையிடப்பட்டார். வஸ்திரமற்ற அவரது உடம்புடன் தொந்தியைத் தூக்கிக்கொண்டு ஓட அவரால் முடியவில்லை. கடலோரத்து ஏரியின் கரை ஒன்றில் கால் இடறி பரமபிதா விழுந்தார். அப்போது தென்சேனையில் இருந்து ஒருவன் புறப்பட்டு ஓடிவந்து பரமபிதாவின் சிரசிலே கோடரியால் கொத்தினான். பரமபிதா நீலநிறக் கோவணத்துடன் மல்லாந்து கிடந்தார். அவரது வாயில் இருந்து “சர்வதேசமே சர்வதேசமே ஏன் என்னைக் கைவிட்டாய் என்ற முணுமுணுப்புடன் பரமபிதாவின் ஆவி பிரிந்தது. அப்போது வட கிழக்கு தேசத்தின் எந்தவொரு ஆலையத்திலும் திரைச்சீலை ஏதும் மேலிருந்து கீழ்வரை இரண்டாக கிழியவில்லை.
மஹாவலி
0 விமர்சனங்கள்:
Post a Comment