சென்னை துறைமுகத்திற்கு வந்தது வணங்காமண் - ஒரு வாரத்தில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் செல்லும்
சென்னை: கடந்த 56 நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐரோப்பிய வாழ் தமிழர்கள் வன்னித் தமிழர்களுக்காக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய வணங்காமண் நிவாரணக் கப்பல் நேற்று இரவு சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
ஐரோப்பிய வாழ் தமிழர்கள் சேர்ந்து வன்னியில் பரிதவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக உணவு, மருந்து, உடை உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலை அமர்த்தி அதற்கு வணங்காமண் என்று பெயரிட்டு வன்னிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது. இதையடுத்து சென்னைக்கு விரைந்த இக்கப்பல் சென்னை அருகே நிறுத்தப்பட்டது.
ஆனால் சென்னைக்குள் இக்கப்பல் வர மத்திய அரசு அனுமதி தராமல் மெளனமாக இருந்தது. இதையடுத்து முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அமைச்சர் பொன்முடியையும் நேரில் அனுப்பி வைத்தார்.
இதன் விளைவாக இலங்கை அரசுடன் பேசிய இந்திய அரசு கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதை ஏற்ற இலங்கைத் தரப்பு பொருட்களை சென்னையில் தரையிறக்கி அவற்றை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தது.
இதையடுத்து நேற்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மனிதாபிமான அடிப்படையில், சென்னை துறைமுகத்திற்குள் நுழைய வணங்காமண் கப்பலுக்கு மத்திய அரசு அனுமதி தருவதாக அறிவித்தார்.
சென்னைக்குள் நுழையலாம் என்று நேற்று மாலை 4.45 மணிக்கு கப்பல் கேப்டனுக்கு தகவல் போனது.
இதையடுத்து சென்னை துறைமுகத்தைச் சேர்ந்த மாலுமி ஒருவர் வணங்காமண் கப்பலுக்குச் சென்றார். அவர் வழி காட்ட கப்பல் துறைமுகத்திற்குக் கிளம்பியது.
சரியாக இரவு 7.25 மணிக்கு கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் வந்து சேர்ந்தது.
கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்த கப்பல் ஊழியர்கள் மற்றும் கேப்டன் முகம்மது முஸ்தபா ஆகியோர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
கேப்டன் மட்டுமே கீழே இறங்க அனுமதிக்கப்பட்டது. மற்ற யாரும் இறங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கேப்டன் முகம்மது முஸ்தபா மட்டும் கீழே வந்தார். அவரிடம் குடியுரிமை அதிகாரிகள், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து சரக்குகள் வைக்கப்பட்டிருந்த இரும்பு தகடுகளை அகற்றும் பணி தொடங்கியது. அதற்காக லிப்டுகள் உயர்த்தப்பட்டன. பிறகு போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கப்பலுக்குள் சென்று நிவாரண பொருட்களை சோதனையிட்டனர். மேலும், அந்த கப்பலுக்கான ஆவணங்கள் அனைத்தையும் அதிகாரிகள் சரி பார்த்தனர்.
கப்பல் வந்து சேர்ந்தது குறித்து முகம்மது முஸ்தபா கூறுகையில், கப்பலில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மருந்துகள் உட்பட பல நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டு இலங்கைக்கு கொண்டு சென்றோம்.
இலங்கை துறைமுகத்தின் வெளியே 4 நாட்கள் அவர்களின் அனுமதிக்காக காத்திருந்தோம். ஏன் அவர்கள் எங்களை இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை என்று தெரியவில்லை. சில பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்டன. ஆனால் அதற்கு நாங்கள் எப்படி சம்பந்தப்பட்டோம் என்பது தெரியவில்லை.
பின்னர் இலங்கை கடற்படையினர் வந்து கப்பலை சோதனை செய்தனர். அதன்பிறகு இலங்கையை விட்டு வெளியே போக சொன்னார்கள். இலங்கையில் இருந்து 70 கடல் மைல் தூரத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டனர். இந்த கப்பலில் உணவுப்பொருட்கள்தான் இருந்தன. ஏன் அதை அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது புதிராக இருந்தது.
நாங்கள் ஏற்கனவே 24 நாட்கள் கடலில் பயணம் செய்து வந்தோம். ஆனால் இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை என்பதால் மிகுந்த வருத்தம் அடைந்தோம்.
ஆனால் இந்திய அரசு எங்களை நல்லவிதமாக நடத்தியுள்ளது. இந்திய அதிகாரிகள் இப்போது எங்களை மென்மையாக நடத்தினர். நல்லபடியாக சோதனை நடத்துகின்றனர்.
சென்னை துறைமுகத்துக்கு வெளியே நாங்கள் நின்ற போது யாரும் எங்களை வெளியே போக சொல்லவில்லை. இன்றும், நாளையும் இங்கு தங்கி இருப்போம். நிவாரண பொருட்களை இறக்கியதும் கொல்கத்தா செல்வோம்.
நான் சிரியாவை சேர்ந்தவன். 2 பேர் மட்டும் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள். எங்களிடம் உணவு இருக்கிறது. எங்களில் சிலருக்கு தொண்டைவலி ஏற்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த 2 பேர் பயணிகளாக உள்ளனர். வேறு யாரும் கப்பலில் இல்லை. மீண்டும் இலங்கைக்கு இந்த நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்ல இயலாது என்றார்.
தற்போது கப்பலில் உள்ள பொருட்களை இறக்கி வைக்கும் பணி நடக்கிறது. அது முடிந்தவுடன் அவை இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படும். இந்தப் பணி முடிய ஒரு வாரம் ஆகும் எனத் தெரிகிறது.
நிவாரணப் பொருட்களை இந்தியக் கப்பல் மூலம், இலங்கைக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக மனிதம் என்ற மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநரான சுப்ரணியம் தெரிவித்துள்ளார்.
மெர்சி மிஷன் அமைப்பின் அர்ஜூனன் எதிவீரசிங்கம் கூறுகையில், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியுடன், இந்தியக் கப்பல் மூலம் இந்த நிவாரணப் பொருட்களை இலங்கை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment