வலைப்பதிவினூடாக உங்களோடு பேசுகிறேன்
வணக்கம்.
பத்மநாதன் பக்கங்கள் என்ற இந்தப் பகுதியினூடாக உங்களுடனான கருத்துப்பகிர்வினை வாரந்தோறும் மேற்கொள்வது பயன் தரும் எனக் கருதுகிறேன்.
இக் கருத்துப்பகிர்வின் முதற்கட்டமாக ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு எனது எண்ணங்களை உணர்வுகளை சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொண்டு உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் கேள்விகளையும் உள்வாங்க விரும்புகிறேன்.
இதற்கான காரணங்கள் பல.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நாம் இப்போது நெருக்கடியான அதேசமயம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கிறோம்.
நமது விடுதலைப் போராட்டம் நடந்து வந்த பாதையினை திருப்பிப்பார்த்து அப்பட்டறிவின் ஊடாகப் பாடங்களைக் கற்றுக் கொண்டு அடுத்த கட்டக் காலடியை முன்னோக்கி வைக்க வேண்டிய காலமிது.
இதற்காக நாம் கூட்டாகச் சிந்திப்பதன் அவசியத்தினை உணர்ந்து உங்கள் கருத்துக்களை ஆலோசனைகளைப் பெறுவதற்காக மின்னஞ்சல் முகவரியொன்றினை அறிவித்திருந்தேன்.
இம் மின்னஞ்சல் முகவரிக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் கருத்துக்களாகவும் ஆலோசனைகளாகவும் விமர்சனங்களாகவும் கேள்விகளாகவும் வந்து குவிந்திருந்தன.
நேரம் ஒதுக்கி இவற்றைப் படித்தேன். பல கருத்துக்கள் மிகவும் பயன் உள்ளவையாக இருந்தன.
தங்கள் கருத்துக்களை அனுப்பி வைத்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுடன் தொடர்புகளைப் பேணுவதன் ஊடாகக் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளன என்பதை உளமார உணர்ந்தேன்.
மற்றையது கடந்த சில தினங்களாக பலரோடும் சந்திப்புக்களை மேற்கொண்டு நமது அடுத்த கட்டப் போராட்டம் தொடர்பாக கருத்துப்பகிர்வினை மேற்கொண்டேன். பலமணி நேரம் தொலைபேசி உரையாடல்களையும் மேற்கொண்ட வண்ணம் இருந்தேன். இச் சந்திப்புக்களும் உரையாடல்களும் மிகவும் பயன் மிக்கவையாக இருந்தன. உரையாடிய பலரோடும் ஒரே விடயங்களை பேச வேண்டியிருந்தமையினையும் உணர முடிந்தது. உரையாடியோர் பலரும் தெளிவும் உற்சாகமும் அடைந்தமையினையும் புரிய முடிந்தது.
என்னோடு தொடர்புகளை ஏற்படுத்தி நேரடியாகக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள பெரும்பாலான மக்களுடன் நெருங்கி கருத்துக்களை பகிர்வது மிகவும் அவசியம் என உணர்ந்தேன்.
இதனை எவ்வாறு செய்வது?
இன்றைய இலத்திரனியல் யுகத்தில் வலைப்பதிவு (Blog) மூலம் கருத்துக்களைப் பரிமாறல் சாத்தியமானது.
இதனால் இவ் வடிவத்தினைப் பின்பற்றலாம் என்ற எண்ணம் தோன்றியது.
அரசியல் அறிக்கைகள் ஊடாகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் பரிமாணம் வேறு. இத்தகைய வலைப்பின்னலின் ஊடாகக் கருத்துக்களைப் பரிமாறும் பரிமாணம் வேறு. எல்லா விடயங்களையும் அரசியல் அறிக்கைகளாக வெளிப்படுத்துவதும் பொறுத்தமற்றது.
நெருங்கி நின்று கருத்துக்களை பரிமாறும் வாய்ப்பும் இவ் வலைப்பின்னல் ஊடாகக் கிடைக்கிறது. மக்களுடனான நெருக்கத்தினைப் பேண விரும்புவதனால் இவ் வடிவம் எனக்குப் பிடித்துப் போயிற்று.
இருந்தும் ஒரு தயக்கம்.
நாம் இதுவரை இயக்கத்தில் பின்பற்றி வந்த மக்கள் தொடர்பு மரபுக்கு இது வேறுபாடானது..
30 ஆண்டு காலத்திற்கும் மேலான எனது விடுதலைப்பணிக் காலத்தில் நான் தற்போது புரியும் பணி வேறுபாடானது. மிக நீண்ட காலமாக மக்கள் தொடர்பு எனது விடுதலைப்பணியின் அங்கமாக இருக்கவில்லை.
இவையே தயக்கத்திற்குக் காரணங்கள்.
எனினும் சவால் நிறைந்த இக் காலகட்டத்தில் நமது போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு மக்களுடன் நெருங்கிய தொடர்பு அவசியம் என உணர்ந்தமையினால் எமது உத்தியோகபூர்வமான வலைத்தளத்தில் பத்மநாதன் பக்கங்கள் என்ற இந்தப் பகுதினை இன்றிலிருந்து (04.07.2009) ஆரம்பிக்கிறேன். தமிழில் வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும் ஆங்கிலத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளிலும் எனது கருத்துக்கள் பதிவு செய்யப்படும்.
--------------------------------------------------------------------------------
படம் 01: தலைவரின் திருமணத்தின் போது - தோழனாய்...
நான் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் என்னை இணைத்துக் கொண்டு 33 வருடங்கள் ஆகி விட்டன. 1976ம் ஆண்டிலிருந்து தலைவர் அவர்களுடன் நான் இணைந்து பணியாற்றி வந்திருக்கிறேன். மிக நெருக்கடியான காலங்களிலெல்லாம் நான் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கிறேன். 1984 ஆம் ஆண்டு தலைவர் திருமணம் புரிந்து கொண்ட போது அவரருகில் தோழனாக அமரும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இந்த நீண்ட கால உறவுப்பிணைப்பு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. இந் நீண்ட கால ஆத்மார்த்தமான உறவுப்பிணைப்புடன் நான் தலைவர் அவர்களை அண்ணனாக, வழிகாட்டியாக, நண்பனாகக் கொண்டு என் பணி தொடர்ந்து வந்தேன். எனக்குச் சரியென்று, தவறென்றுபடுவதனைத் தலைவர் அவர்களுக்கு எடுத்துக் கூறியவாறே எனக்குத் தரப்பட்ட விடுதலைக்கான பணியினை மேற் கொண்டு வந்தேன்.
விடுதலைப் போராட்டம் எதிர்கொள்ளக் கூடிய மிகமுக்கியமான புவிசார் மற்றும் பிராந்திய நெருக்கடிகளை முன்கூட்டியே உணர்ந்திருந்த நமது தலைவர் விடுதலைப் போராட்டத்தில் எனது பணியினை முக்கிய வியூகரீதியான திட்டத்திற்குள் உள்ளடக்கியிருந்தார். இதன் காரணமாக எனது பிற பணிகளின் மத்தியில் கூட புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் மத்தியில் மிகநீண்ட காலம் செயற்படும் தேவை ஏற்பட்டது. எனது விடுதலைப்பயணத்தில் சில காலம் எமது மூத்த தளபதியான கேணல் கிட்டு, எமது அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் எனப்பல முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பணிபுரிந்திருக்கிறேன்..
படம் 02: கடற்புறாப் படகில் தளபதி குமரப்பா மற்றும் ஏனைய போராளிகளுடன்...
மூத்த தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் ஆகியோர் உள்ளடங்கலாக எமது மூத்த போரளிகளின் வீரச்சாவின் போது அவர்களின் வீரஉடலங்கள் முன்பாக தலைவருடனும் பிற தளபதிகளுடனும் அணிவகுத்து நின்று வீரசபதமேற்ற உணர்வின் தணல் அணையாது என்னுள் இன்றுவரை உயிர்வாழ்கின்றது. உண்மையில் குமரப்பா புலேந்திரன் மற்றும் ஏனைய போராளிகளுடன் நானும் கடற்புறா படகில் அப்போது சென்றிருந்திருக்க வேண்டும். தலைவர் அவர்கள் தன்னோடு வருமாறு என்னை அழைத்தமையால் நான் தலைவரோடு சென்றுவிட்டேன். இல்லாது விடின் நானும் அவர்களோடு அப்போது வீரச்சாவை தழுவியிருப்பேன்.
1989ம் ஆண்டில் வன்னிக்காடுகளில் தலைவருடன் பாலா அண்ணர், கேணல் சங்கர் ஆகியோருடன் இணைந்து கூட்டாக நாங்கள் பகிர்ந்து கொண்ட எதிர்காலம் பற்றிய கனவும் உயிர்ப்புடன் உள்ளது. தலைவர் அவர்களுக்கும் எனக்குமிடையேயான உறவுப்பிணைப்பை, ஏனைய மூத்த போராளிளுடன் இணைந்து இயங்கிய அனுபவங்களை இப் பகுதியில் பொருத்தமான இடங்களில் ஆங்காங்கே வெளிப்படுத்தவும் எண்ணியுள்ளேன்.
படம் 03: மணலாற்றுக் காட்டில் தலைவர், பாலா அண்ணர் மற்றும் சங்கர் அண்ணரோடு...
1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப்படையினர் சூரியக்கதிர் எனப் பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் எமது இயக்கக் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்திருந்தனர். தலைவரும் முக்கிய தளபதிகளும் ஒரு குறிப்பிட்டளவு போராளிகளும் வன்னிப்பகுதிக்குப் பின்வாங்கினர். யாழ்குடா நாட்டில் வாழ்ந்து வந்த கணிசமான மக்களும் வன்னிப்பகுதியினை நோக்கி இடம் பெயர்ந்தனர்.
எமது தலைவரையும் இயக்கத்தினையும் இடம் பெயர்ந்த மக்களையும் வன்னி மண்ணும் மக்களும் தாங்கி நின்றனர். 1996 ஆம் ஆண்டிலிருந்து எமது இயக்கத்தின் வெற்றிகளுக்கு உறுதுணையாகவும் எதிர் கொண்ட சவால்களை முகம் கொடுக்க ஆதாரமாகவும் இம் மக்கள் நின்றனர்.
1995ம் ஆம் ஆண்டின் பிற்பட்ட காலத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பங்களிப்பும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1996 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை எனது வழிகாட்டுதலிலே வெளிநாடுகளில் விடுதலைக்கான செயற்பாடுகள் அமைந்தன. இதற்கு முந்திய காலங்களில் வெளிநாடுகளில் விடுதலைக்கான கட்டமைப்பை நிறுவுவதற்கு நான் நாடு நாடாக வீடு வீடாக அலைந்து திரிந்திருக்கிறேன். இதனை வெளிநாடுகளில் விடுதலைப்பணியில் நீண்ட காலம் இயங்கியவர்களும் ஆரம்பகால செயற்பாட்டாளாகளும் நன்கு அறிவார்கள். இன்னும் சில தமிழ் மக்களுக்கு செல்வராசா பத்மநாதன் வேறு. கே.பி வேறு செல்வராசா பத்மநாதன் புதியவர் கே.பி ஆரம்பகால உறுப்பினர் என்ற குழப்பம் இருப்பதாக நண்பர்கள் கூறினர். இந்தக் குழப்பம் வேண்டாம். செல்வராசா பத்மநாதனும் கேபியும் ஒருவரே தான்.
1996 – 2002 ஆம் காலகட்டப் பகுதியில் புலம் பெயர்ந்த மக்களின் பேராதரவோடு தலைவர் அவர்களின் எதிர்பார்க்கையை விட 20% கூடுதலாக நமது ஆதரவினை வழங்கினோம். எமது இயக்கமும் தமிழீழத் தேசமும் அனைத்துலகமும் வியக்கும் வண்ணம் வெற்றியுடன் நிமிர நாமும் காரணமாக இருந்தோம் என்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
2002 ஆம் ஆண்டின் பின்னர் தலைவர் அவர்கள் அனைத்துப்பணிகளையும் தாயகத்திலிருந்து ஒருங்கிணைக்கவே விரும்பினார். அனைத்துப்பொறுப்பாளர்களும் தனக்கருகேயிருந்து செயற்படுவது அவசியம் எனக் கருதினார். என்னையும் தன்னுடன் வருமாறு அழைத்தார். நானும் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினேன். எனது பயணச் சிக்கல்களை நன்கு புரிந்திருந்த தலைவர் உரிய பயண ஒழுங்குகளை தான் மேற்கொள்ளுவதாகவும், அதுவரை பொறுக்குமாறும் கூறினார்.
பாலா அண்ணர் மற்றும் பிரிகேடியர் தமிழ்செல்வன்; ஆகியோர் எனது பயணத்திற்கான சர்வதேச ஏற்பாடொன்றுக்கு முனைந்தனர். இச் சர்வதேச ஏற்பாட்டினூடாக எனது பாதுகாப்பான பயண ஒழுங்குகளை மேற்கொள்வது சில நடைமுறைச் சிக்கல்களால் காலதாமதமாகிக் கொண்டிருந்தது. இதனால் எனது முயற்சியால் வருவதற்கு தலைவரிடம் அனுமதி கேட்டேன். வேண்டாம் – உரிய நேரம் வரும் அப்போது பார்ப்போம் எனக்கூறித் தடுத்து விட்டார். தலைவரின் முடிவுக்கு இணங்க அனைத்துப் பணிகளும் தாயகத்திலிருந்தே ஒருங்கிணைக்கப்பட்டன. தலைவர் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவண்ணம் அவரின் அழைப்புக்காக நான் காத்திருந்தேன்.
--------------------------------------------------------------------------------
உரிய நேரம் வந்து விட்டதாகத் தலைவர் அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக என்னை 01.01.2009 அன்றிலிருந்து தலைவர் அவர்கள் நியமிக்கிறார். இத் துறையின் பொறுப்பாளர் என்ற தகுதி நிலையிலிருந்து இயக்கத்தின் எதிர்கால இராசதந்திர நகர்வுகளுக்குப் பொறுப்பாகவும் பிரதான பேச்சுவார்த்தையாளராகவும் நான் செயற்படுவேன் என தலைவர் அவர்கள் 12.01.2009 அன்று கடிதம் முலம் உலக நாடுகளின் தலைவர்களுக்கு அறிவிக்கிறார்.
தலைவர் அவர்கள் உலக நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியினையும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பினையும் நமது மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
o கடிதப்பிரதி – (மூலப்பிரதியைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்)
o மொழி பெயர்ப்பு – (ஆங்கிலத்தில் உள்ள மூலத்தின் தமிழாக்கம்)
தலைமைச் செயலகம்
தமிழீழம்
2009-01-12
தங்களின் மேன்மை மகிழ்வடைவதாக,
எமது அமைப்பால் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்துலக உறவுகள் செயலகத்தின் தலைமைப் பொறுப்பாளராக எமது அமைப்பின் மூத்த பிரதிநிதி திரு.செல்வராசா பத்மநாதன் அவர்களை நியமித்துத் தங்களுக்குத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பொறுப்பின் அடிப்படையில், இப்பொழுது முதல் அவர் எமது அமைப்பின் முதன்மை இராஜதந்திரியாகவும்;, பேச்சுவார்த்தையாளராகவும் செயற்படுவார்.
எமது இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் முதன்மைப் பேச்சவார்த்தையாளராக விளங்கிய திரு.அன்ரன் பாலசிங்கத்தின் மறைவின் பின் அனைத்துலக தொடர்புகளை எற்படுத்துவதிலும் இராஜதந்திர தொடர்புகளை வளர்ப்பதிலும் ஏற்பட்ட வெற்றிடத்தை நாம் பெரிதும் உணருகின்றோம். வெளிநாடுகளில் அனைத்துலகத் தொடர்புகளைப் பேணவும், இராஜதந்திர வட்டாரங்களில் செயற்பாடுகளை முன்னகர்த்திச் செல்லவும் தலைமையின் ஆணை அதிகாரம் வழங்கப்பட்ட, அதிக ஆற்றல் மிக்க ஒரு பிரதிநிதியின் அவசியத்தையும் நாம் உணருகின்றோம். இக் காரணங்களுக்காக நாம் திரு. செல்வராசா பத்மநாதனை அவரது ஏனைய பொறுப்புகளில் இருந்து விடுவிக்க அவரும் ஜனவரி 1, 2009 முதல் இப் புதிய துறையைப் பொறுப்பேற்றுள்ளார்.
எமது அமைப்பின் முதன்மை இராஜதந்திரியாகவும் பேச்சுவார்த்தையாளராகவும் திரு செல்வராசா பத்மநாதன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டமை, ஒரு வலுவான இராஜதந்திர ஈடுபாட்டின் மூலம் இராஜதந்திர முறைகளுக்கூடாக தமிழர் தேசியப் பிரச்சனைக்கு நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு காணப்படுவதற்கு துணைபுரியும்; என நான் நம்புகிறேன்.
உங்கள் உண்மையுள்ள,
(————————————)
ஒப்பம். வே.பிரபாகரன்.
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தலைவர் அவர்களின் கடிதத்தில் இரு விடயங்கள் கூடுதல் கவனத்திற்குரியவை. சர்வதேச விவகாரங்களுக்காகப் புதியதுறை ஒன்றினைத் தலைவர் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்.
எமது இயக்கத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான ஒரு தனித்துறை உருவாக்கபட்டது இதுவே முதற் தடவை.
எமது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் இயக்கத்தின் சர்வதேச உறவுகளில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தினையும் தலைவர் அவர்கள் உணர்ந்திருந்தார்.
எனது நியமனம் குறித்து , அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னர் தலைவர் அவர்கள் பல விடயங்களை என்னுடன் விரிவாக உரையாடியிருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு சர்வதேச ஆதரவு அவசியம் தேவை என்பதனை அவர் வலியுறுத்தியிருந்தார். இதில் உள்ள சவால்களை நாம் விரிவாகப் பேசினோம்.
நான் எனது பணியினை ஆரம்பித்த போது களத்தில் இருந்த சூழ்நிலை, சர்வதேச நாடுகள் பிரச்சினையினை அணுகியவிதம், யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் தலைவர் அவர்கள் முன்பாக இருந்த தெரிவுகள் உள்ளடங்கலான பல்வேறு விடயங்களுடன் நாம் அடுத்த சனிக்கிழமை (11.07.2009) சந்திப்போம்.
--------------------------------------------------------------------------------
என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் கருத்துக்களை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இவற்றில் பொருத்தமானவற்றைப் இப் பகுதியில் பிரசுரிக்கவும் நான் விரும்புகிறேன். உங்கள் கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதனைத் தாங்கள் விரும்பாவிடின் அதனையும் குறிப்பிடுங்கள்.
உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ltte.ir@gmail.com
நன்றி. மீண்டும் நாம் அடுத்த வாரம் சந்திப்போம்.
என்றும் அன்புடன்
கேபி
0 விமர்சனங்கள்:
Post a Comment