யுத்தத்தின் இறுதிக் காலகட்டம்
நான் எனது பணியினை ஆரம்பித்த போது களத்தில் இருந்த சூழ்நிலை, சர்வதேச நாடுகள் பிரச்சினையினை அணுகியவிதம், யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் தலைவர் அவர்கள் முன்பாக இருந்த தெரிவுகள் உள்ளடங்கலான பல்வேறு விடயங்களுடன் இவ் வாரம் சந்திப்பதாககக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.
தலைவர் அவர்கள் 01.01.2009 அன்று முதல் அனைத்துலகத் உறவுகளுக்கான துறையின் தலைமைப் பொறுப்பாளராக என்னை நியமித்தமை குறித்தும் 12.01.2009 அன்று அதனை உலக நாடுகளின் தலைவர்களுக்கு அறிவித்தமை குறித்தும் கடந்த வாரப் பக்கங்களில் வெளிப்படுத்தியிருந்தேன்.
தலைவர் அவர்களால் எனது நியமனம் உலகநாடுகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் நான் எனது புதிய பணியினை ஆரம்பிக்கிறேன்.
இந்தக் காலம் மிகவும் சிக்கல் வாய்ந்தது. சிறிலங்கா அரசு உலகத்தினையே துணைக்கழைத்து தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் நமது விடுதலை இயக்கத்திற்கும் மக்களுக்கும் எதிராக நடத்திக் கொண்டிருந்த யுத்தத்தில் சிறிலங்கா படையினர் கிளிநொச்சியைத் தாண்டி முன்னேறியிருந்தனர்.
இது போன்ற ஒரு நெருக்கடியான நிலையினை இயக்கம் முன்னெப்போதும் எதிர்கொண்டிருக்கவில்லை. சிறிலங்காவின் இராணுவ ஆக்கிரமிப்பினை எதிர்கொள்வதும், முன்னேறும் இராணுவத்தினை தடுத்து நிறுத்துவதும் கடினமாக இருந்தது. விரிந்து நின்று சண்டையை எதிர் கொள்ளும் சாத்தியம் குறைவடைய தலைவர் அவர்கள் சுருங்கி நின்று சண்டையை எதிர் கொள்ள முடிவெடுத்திருந்தார்.
சிறிலங்காப் படையும் உலகின் யுத்த மரபுகள் அனைத்தையும் மீறி மிகவும் கொடூரமான முறையில் யுத்தத்தினை நடத்திக் கொண்டிருந்தது. மக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள் குண்டு வீச்சுக்கள் போன்றவற்றால் நாளாந்தம் சராசரியாக நூறு பேர் வரை கொல்லப்படவும் நூற்றுக்கணக்கானோர் காயப்படுவதற்குமுரிய நிலையும் உருவாகியிருந்தது. உணவு மற்றும் மருந்துத் தடைகள் எண்ணுக்கணக்கற்ற தொடர் இடப்பெயர்வுகள் என மக்கள் மீது மிகக் கொடுரமான முறையில் யுத்தக் கொடுமையினைத் திணித்திருந்தது சிறிலங்கா அரசு.
இக் கொடும் யுத்தத்தினை எதிர்கொள்வதற்கான ஆளணி உட்பட அனைத்து வளங்களையும் மக்கள் மத்தியிலிருந்தே பெற வேண்டிய தவிர்க்க முடியாத நிலை. மக்களின் நிலையோ மிகவும் வேதனைக்குரியதாயிருந்தது. யுத்தத்தின் சுமையை மக்களின் சக்தியை மீறி மக்கள் சுமக்க வேண்டிய நிலையிருந்தது. நமது இயக்கத்தையம் போராட்டத்தையும் நெருக்கடியான காலங்களில் தாங்கி நின்ற வன்னி மக்கள் இந்த யுத்தத்தில் தாங்கொணா வலிகளையும் வடுக்களையும் சுமந்து நின்றனர்.
இதனால் போராட்ட இலக்கில் சமரசம் செய்யாமல் யுத்தத்தினை நிறுத்துவதற்கான வாய்ப்பு வந்தால் யுத்தத்தினை நிறுத்துவதற்கும் தலைவர் தயாராக இருந்தார். இத்தகைய யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு சிறிலங்கா அரசு உடன்படும் என்பதிலோ அல்லது அனைத்துலக சமூகம் இத்தகைய யுத்த நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தும் என்பதிலோ தலைவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. இருந்த போதும் அத்தகைய யுத்தநிறுத்தம் ஒன்றிற்கான கதவுகளைத் தலைவர் திறந்தே வைத்திருந்தார். இதன் அடிப்படையில் யுத்த நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக இயக்கம் ஏற்கனவே அறிவித்தும் இருந்தது.
இச் சூழலியே நான் எனது பணியினை ஆரம்பித்தேன். சர்வதேச அரசுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி யுத்த நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கான ஏதுநிலையினை உருவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டேன்.
நான் அனைத்துலக சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி இம் முயற்சியினை ஆரம்பித்த காலகட்டத்தில், அனைத்துலக சமூகம் நமது இயக்கத்தால் இனி முன்னேறும் சிறிலங்கா படையினரை எதிர்த்து நின்று வெற்றியீட்ட முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தது.
இதன் வெளிப்பாடாக நோர்வே, அமெரிக்கா, யப்பான் ஜரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கலான இணைத்தலைமை நாடுகள் நமது இயக்கம் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தன. அதன் அடிப்படையிலிருந்து அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக சில ஆலோசனைகளையும் பெப்ரவரி 3ம் திகதி இணைத்தலைமை நாடுகள் முன்வைத்திருந்தன.
இணைத்தலைமை நாடுகளின் இந் நிலைப்பாடு தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தன்மையினை எந்த வகையிலும் கவனத்திற் கொள்ளாமல் எடுக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய ஆயுதங்கள் தொடர்பான விடயத்தை யுத்தநிறுத்தம், பேச்சுவார்த்தை போன்றவற்றிற்கு முன்நிபந்தனையாக இந் நிலைப்பாடு கொண்டிருந்தது.
அரசியல் தீர்வின் மூலமாகத் முடிவு காணப்படவேண்டிய ஒரு பிரச்சினைக்கு, யுத்தத்தால் கொல்லப்படும், துன்புறுத்தப்படும் மக்களின் துயரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நியாயத்தினைக்கூறி, தமிழீழ மக்களின் அரசியல் சரணாகதியுடன் முடிவுக்கு கொண்டு வர இந் நிலைப்பாடு முனைந்தது.
தலைவர் அவர்கள் இணைத்தலைமை நாடுகளின் இந் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆயுதங்கள் தொடர்பான எந்த முடிவும் அரசியல் பேச்சுவார்த்தைக்கூடாக எட்டப்படும் நியாயமான அரசியல் தீர்வுடன் இணைக்கப்பட வேண்டும் என நாம் இணைத்தலைமை நாடுகளுடன் வாதிட்டோம்.
யுத்தத்தினால் மக்கள் படுகொலைக்குள்ளாவதைத் தடுக்கவும், ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படவும், இலங்கைத்தீவிலும் இந்த சமுத்திரப் பிராந்தியத்திலும் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவவும் யுத்தநிறுத்தமும் சமாதானப் பேச்சுவார்த்தையும் அவசியம் என நாம் எடுத்துக் கூறினோம்.
யுத்தநிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சியினை ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நிபந்தனையற்ற யுத்த நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி சாத்தியமாகப் போவதில்லை எனப் புரிந்து கொண்டேன்.
இலங்கைத்தீவில் ஏதோ ஒரு வகையில் ஆயதப்போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்பதில் அனைத்துலக சமூகத்திடம் ஒத்த கருத்து உறுதியாக இருந்தமையினை இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
எமது மக்களையோ அல்லது எமது விடுதலை இயக்கத்தையோ அனைத்துலக சமூக நாடுகள் பாதுகாக்கப் போவதில்லை என்பதனையும் உணாந்து கொண்டேன்.
எமது நலன்களும் அனைத்துலக சமூகத்தின் நலன்களும் ஒரே நேர்கோட்டில் விழாமை இதற்கு முக்கிய காரணம். இதனைத் தலைவருக்கும் தெரிவித்திருந்தேன்.
நமது நலன்களையும் அனைத்துலக நலன்களையும் தற்காலிமாகவேனும் எங்காவது இணைய வைத்து யுத்தநிறுத்தம் ஒன்றினைக் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கலாமா என ஆராய்ந்தேன். இயக்கத்தின் நிலைப்பாட்டிற்கும் அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாட்டிற்கும் இடையேயுள்ள இடைவெளியை எவ்வாறு நிரப்பலாம் என ஆராய்ந்து யோசனை ஒன்றையும் முன் வைத்தேன். எனினும் இம் முயற்சிகள் கை கூடவில்லை.
இவற்றை விரிவாகப் தற்போது பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்காது. எதிர் காலத்தில் உரிய சமயம் வரும் போது இது பற்றி விரிவாகப் பேசலாம்.
--------------------------------------------------------------------------------
மார்ச் மாதமும் முடிவடைந்து விட்டது. யுத்த நிறுத்தமும் அரசியல் பேச்சுவார்த்தையும் வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பது தெளிவாகவே தெரிந்து விட்டது.
தமிழக மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் கொடுமையான முறையில் யுத்தத்தினை நடத்திக் கொண்டிருந்த சிறிலங்கா அரசைக் கண்டித்தும், யுத்தநிறுத்தம் கோரியும் மிக எழுச்சிகரமான போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர்.
இப் போராட்டங்கள் சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக அழுத்தத்தினைக் கொடுக்க ஓரளவு உதவின. இருந்த போதும் சிறிலங்கா அரசின் யுத்த முன்னெடுப்பினை நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகம் முன்வரவில்லை.
யுத்தநிறுத்தம் வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதனை நன்கு புரிந்திருந்தமையாலும் தலைவர் அவர்கள் களத்தில் நேரடியாக நின்று படையணிகளை வழிநடத்திக் கொண்டிருந்தமையினை அறிந்திருந்தமையாலும் தலைவர் அவர்களின் பாதுகாப்பு பற்றிய பயம் ஆழ்மனதைக் குடைந்து கொண்டேயிருந்தது.
கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னரும் ஒரு சிறிய பிரதேசத்தினையாவது இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பேணவேண்டும் எனத் தலைவர் விரும்பினார்.
தாம் பின்வாங்கிக் காட்டுக்குள் போயின் இயக்கப் போராளிக் குடும்பங்கள், மாவீரர் குடும்பங்கள், தமிழீழ அரச கட்டமைப்பில் இணைந்து பணியாற்றிய பணியாளர்கள், அவர்களது குடும்பங்கள,; இயக்க ஆதரவாளர்கள,; மக்கள் என அனைவருமே இராணுவப்பிடியில் சிக்கிக் கொள்ளும் நிலை உருவாகும். இதனைத் தலைவர் அவர்கள் விரும்பவில்லை. இராணுவ ஆக்கிரமிப்பினுள் இவர்கள் சிக்குண்டு பெரும் கொடுமைக்கும் சிறுமைக்கும் உள்ளாவதனைத் தலைவர் அவர்கள் விரும்பவில்லை.
மேலும் முக்கியமாக, சிறிலங்கா இராணுவத்தை மரணப் பொறிக்குள் சிக்க வைக்கும் பல்வேறு திட்டங்களும் உபாயங்களும் தலைவரிடம் இருந்தன. இதனால் தானே நேரில் சண்டைக்களத்தில் நின்று யுத்தத்தினை வழிநடத்திக் கொண்டிருந்தார். அந்தத் திட்டங்களும் உபாயங்களும் வெற்றி பெற்றிருப்பின் யுத்தத்தின் போக்கே தலைகீழாக மாறியிருக்கும். வன்னி மண்ணை ஆக்கிரமித்த சிங்களப்படையில் பெருந்தொகையானோர் அவ் வன்னி மண்ணிலேயே அழிக்கப்பட்டிருப்பர். ஆனால் தளபதி தீபனும் ஏனைய முக்கிய தளபதிகளும் 500 க்கும் மேற்பட்ட சிறப்புப்படையணி வீரர்களும் இராணுவ முற்றுகையினுள் எதிர்பாராத வகையில் சிக்கி வீரச் சாவடைய வேண்டிய நிலை ஏற்பட்ட பின்னர் தலைவரது திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாக இருக்கவில்லை.
பாதுகாப்பான இடத்திற்கு நகருமாறு களத்தில் நின்ற தளபதிகளும் நானும் தலைவரைப் பலதடவைகள் கோரியபோதும் தலைவர் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்களப் படையினரின் ஆக்கிரமிப்பினை முறியடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். சிங்களப்படையணியை எதிர்கொள்ளத் தேவையான ஆளணிப் பற்றாக்குறையும் ஆயுதப்பற்றாக்குறையும் பாரிய பிரச்சினைகளாக இருந்த போதும் மிகுந்த மனத்துணிவோடு எதிரியை அவர் எதிர்கொண்டார்.
இருந்த போதும் தளபதி தீபன் உள்ளிட்ட தளபதிகள் மற்றும் போராளிகளின் வீரச்சாவின் பின் பாதுகாப்பான இடத்திற்கு நகர்வதற்குத் தலைவர் அவர்கள் சம்மதித்தார். மூன்று தடவைகள் இதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. இராணுவ முற்றுகை மிகவும் கடுமையாக இருந்தமையால் இம் முயற்சிகள் எதிர்பார்த்தவாறு கைகூடவில்லை. இறுதியில், எதிரியின் இறுதி முற்றுகைச் சமரில் எதிரிப்படையுடன் சமராடி தலைவர் அவர்கள் வீரச்சாவடைந்து கொள்கிறார்.
தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்த பின்னர் தற்போதய சூழலில் நாம் புதியதோர் வரலாற்றுக் கட்டத்தில் நிற்கிறோம். இக் கட்டத்தை நாம் எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறோம்? இது குறித்த சில கருத்துக்களுடன் நாம் அடுத்த வாரம் (18.07.2009) சந்திப்போம்.
--------------------------------------------------------------------------------
என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் கருத்துக்களை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இவற்றில் பொருத்தமானவற்றைப் இப் பகுதியில் பிரசுரிக்கவும் நான் விரும்புகிறேன். உங்கள் கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதனைத் தாங்கள் விரும்பாவிடின் அதனையும் குறிப்பிடுங்கள்.
உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ltte.ir@gmail.com
நன்றி. மீண்டும் நாம் அடுத்த வாரம் சந்திப்போம்.
என்றும் அன்புடன்
கேபி
11.07.2009
0 விமர்சனங்கள்:
Post a Comment