தமிழீழ விடுதலையை நோக்கி...
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் பேசும் உள்ளங்களே!
தமிழீழ விடுதலைப் போராட்டம் இதுவரை காலமும் கொடியதொரு பாதையில் பயணித்து, தற்போது அதள பாதாளத்தில் யாருமற்ற அநாதையாக கிடக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு கடைசிவரை நம்பிக்கையாக, தூணாக, உறுதுணையாக இருந்த ஆணிவேர் தமிழீழ தேசியத் தலைவர் அதிமேதகு வே.பிரபாகரன் தற்போது ....! ஆனால் தங்களை தமிழ் மக்களது பிரதிநிதிகளாக காட்ட அரசி்ன் கைப்பொம்மைகளான சில தமிழ் கட்சிகள் நம்மில் கலந்திருக்கின்றனர். அவர்களை பிரித்தறிந்து எங்கள் சுயநிர்ணய உரிமைக்காய் அறவழியில் எங்களை நாங்கள் வெளிக்கொணர வேண்டும். வரும் வடக்கின் தேர்தல்கள் எங்கள் எதிர்காலத்திற்கு பெரியளவில் நிர்ணய தன்மை கொண்டிராதுவிட்டாலும், எங்கள் வலுவை நாங்கள் இந்த தேர்தல்களில் உணர்த்த வேண்டும்.
வடக்கு கிழக்கை இராணுவ மயமாக்க சிங்கள அரசு தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதிகாரங்கள் அற்ற மாகாண சபைகளுக்கு ஆளுநர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளானவை இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் மீது இராணுவ மேலாதிக்கத்தை திணித்து அவர்கள் அடிமைத்தனமான நிலையில் வாழ வேண்டும் என்ற சிங்கர வெறியர்களின் ஆசைகளை நனவாக்கும் முயற்சியாகும். இவற்றிற்கு வரும் தேர்தல்களில் நாங்கள் முடிவு கட்டிவிட முடியாது. கடந்த காலத்தில் தமிழர் தரப்பு இராணுவ நிலையிலும் சரி, அரசியல் ரீதியிலும் சரி பலமான நிலையிலிருந்த போதே பெற்றுக் கொள்ள முடியாத சுயநிர்ணய உரிமையை இந்த தேர்தல்களின் முடிவுகள் மூலம் பெற்றுவிடமுடியாது. தவிர இந்த தேர்தல்கள் யாவும் ஜனநாயக ரீதியல் இடம்பெறும் என்றும் சொல்வதற்கில்லை. வடக்கில் போட்டியிடும் கட்சிகளின் பெயரில் ஈழம் என்ற சொல்லை தவிர்க்கவே தங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியை வற்புறுத்திய அரசு அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றது. இந்த தேர்தல்களில் நாங்கள் ஈபிடிபி கட்சியை ஆதரித்தால் அது சிங்கள பேரினவாத அரசுக்கு துணை புரியும் செயலாகிவிடும்.
எனவே, மக்களே சற்று சிந்தித்து செயற்படுங்கள். உங்களுக்கு புலிகள் மீது வெறுப்பு இருக்கலாம். அங்கு இறந்த மக்களாகட்டும், புலிகளாகட்டும் எல்லாம் உங்கள் உறவுகளே. தற்போது வதைமுகாமகளில் தத்தளிக்கும் மக்களும் எம் உறவுகளே. அவர்கள் மீது பாரியளவில் அடக்குமுறையை கையாண்டு வரும் சிங்கள அரசுக்கு, யாழில் அவர்களுடன் இணைந்து போட்டியிடும் கட்சிகளே பாரியளவில் உதவியளிப்பது வேதனைக்குரியது.
மாற்றுக்கருத்துக் கொண்ட தோழர்களே!
அன்று புலிகள் தவறிழைத்து விட்டதாக கூறும் நீங்கள், மீண்டும் அதே பாணியிலான பழிவாங்கள் நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள். பழைய பகைகளை கருத்திற் கொள்ளாதீர்கள். உங்கள் ஜனநாயக நீரோட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம். வரவேற்கின்றோம். ஆனால், நீங்கள் தமிழ் மக்களுக்காய் உரிமையுடன் போராட வேண்டிய தருணம் இது. அதற்காக ஆயுத வழியில் போராட கூறவில்லை. நீங்கள் இணைந்திருக்கும் அரசுடன் பேச்சுக்கள் நடத்தி உங்களையாவது கௌரவமான நிலைக்கு இட்டுச் செல்லுங்கள். தற்போது வாழும் அடிமைத்தனத்தை மாற்றி அமையுங்கள். இதனால் எம்மீது நீங்கள் மனம்வருந்தினாலும், காலத்தின் கட்டாயத்தை உணருங்கள். உங்கள் கடமைகளை நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.
தற்போது புலிகள் அமைப்பிற்கு வழிநடத்தும் பொறுப்பை செல்வராசா பத்மநாதன் அவர்கள் ஏற்றிருப்பது வரவேற்க்கத்தக்கதொன்று. அன்று தொட்டு இன்றுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ தேசியத் தலைவருடன் இணைந்து நின்றவர்களில் முக்கியமான இவர் தேசியத் தலைவரின் வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுவார் என்றதில் எமக்கு நம்பிக்கையுண்டு. தவிர, விடுதலைப் போராட்டம் இறுக்கமான நிலையை அடைந்த நேரத்திலேயே பயங்கர அழுத்தமான ஒரு தருணத்திலேயே விடுதலைப் புலிகளின் பன்னாட்டு அலுவல்களுக்கான பொறுப்பாளராக திரு.செ.பத்மநாதன் நியமிக்கப்பட்டார். அதுவும் தமிழீழ தேசியத் தலைவராலேயே நியமிக்கப்பட்டார். இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழு தீர்மானித்தமைக்கு அமைய இனிவரும் காலங்களில் புலிகள் அமைப்பு திரு.செ.பத்மநாதன் அவர்களின் கீழ் இயங்கட்டும். தமிழகத்தில் இருந்து தமிழீழ ஆதரவுள்ளோர் கூறுவது போன்று பத்மநாதன் மீது சடுதியாக அவநம்பிக்கை கொள்ளுதல் அழகன்று. இருந்தும் இனிவரும் காலங்களில் புலிகள் தாங்கள் தனித்து எந்த முடிவும் எடுக்காமல் அனைத்து தமிழ் மக்களுடனும் இணைந்தே போராட்ட முடிவுகளை எடுக்கவுள்ளனர். இதுவும் வரவேற்கத்தக்கதொன்றே.
தற்போது கட்டுமானத்தில் உள்ள “நாடு கடந்த தமிழீழ அரசை” அனைத்து தமிழ் மக்களும் உயிரூட்டி, உணர்வூட்ட வேண்டும். இதில் நாங்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் தமிழ் மக்கள் ஒரு சுயநிர்ணய அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். தலைவன் வைத்த தீயை தமிழீழம் எங்கும் ஒளிவெள்ளமாக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைவோம்.
அனைத்து தமிழ் உள்ளங்களும் தங்கள் ஆத்மார்த்தமான ஆதரவை நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அளியுங்கள். தவிர, வடக்கில் வரும் தேர்தல்களில் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் “தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு” வாக்களித்தால் எங்கள் இலக்குகளை நோக்கிய பயணத்தை இலகுவாக்க முடியும் என்பதே நம் கருத்து. அனைத்து மக்களும் இது குறித்து நிச்சயமாக சிந்திக்க வேண்டும்.
“தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்”
சி.பரமேஸ்வரன்
செயலாளர்
வெளியக அலுவல்கள் மற்றும் தொடர்பாடல் பிரிவு
தமிழீழ மக்கள் சேனை.
0 விமர்சனங்கள்:
Post a Comment