நவீன அடிமை வியாபாரம்
தெற்காசியாவில் அதிகரித்துவரும் சிறுவர்கள் அடிமைவியாபாரம் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அக்கறைகள் எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றன. தெற்காசியாவில் அடிமைவியாபாரம் பரவலாக மேற்கொள்ளப்படுவதாகவும் வருடாந்தம் இலட்சக்கணக்கான பெண்களும் சிறுவர்களும் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன், பாலியல் தொழிலிலும் வீட்டு வேலைகளிலும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுவதாகவும் ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம் (யூனிசெப்) விசனம் தெரிவித்திருக்கிறது.
தெற்காசியாவில் இடம் பெறுகின்ற அடிமை வியாபாரத்தைப் பொறுத்தவரை மிகவும் பாரதூரமான நிலைவரமொன்றை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் இதையொரு நவீனயுக அடிமைவியாபாரம் என்று வர்ணிக்க முடியுமென்றும் தெற்காசியப் பிராந்தியத்துக்கான யூனிசெப் பணிப்பாளர் தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆசியா கண்டத்தில் வருடந்தோறும் 5 இலட்சம் பெண்களும் சிறுவர்களும் கடத்தப்பட்டு பாலியல் தொழிலிலும் அடிமைத்தனமான வேலைகளிலும் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இவ்வாறு கடத்தப்படுபவர்களில் அதிகப்பெரும் எண்ணிக்கையானவர்கள் தெற்காசியப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களே. இப்பிராந்தியம் எதிர்நோக்கும் அவலங்களில் இதுவும் ஒன்று. நிலைமை கட்டுப்பாட்டைமீறிச் சென்று கொண்டிருக்கிறது. உலகம் பூராவும் வருடாந்தம் சுமார் 12 இலட்சம் பெண்களும் சிறுவர்களும் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறார்கள் என்றும் யூனிசெப் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
யூனிசெப்பிடமிருந்து இத்தகைய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையின் நிலைவரங்களைப்பற்றி அவதானிக்க வேண்டியது அவசியமாகிறது. தென்னிலங்கையைப் பொறுத்தவரை சிறுவர்கள் துஷ்பிரயோகம் பரந்தளவில் இடம் பெறுவதற்கான களத்தை உல்லாசப்பிரயாணத்துறையும் அதனோடிணைந்த வியாபார நடவடிக்கைகளும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றபோதிலும், மறுபுறத்தில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் அதிகரிக்கும் போக்கே காணப்படுகிறது.
அன்றாடம் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் இதைத் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. உல்லாசப் பிரயாணத்துறை திளைத்திருக்கும் பகுதிகளில் சிறுவர்கள் போதை வஸ்துகளுக்கு பழக்கப்படுத்தப்படும் ஆபத்தான போக்கை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. சமூகவிரோதச் செயல்களை ஆதாரமாகக் கொண்ட சட்டவிரோத பிழைப்பு மார்க்கங்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் ஊக்குவிக்கப்படுகின்றன. அரசியல் சக்திகளின் அனுசரணையும் இதற்கு இருக்கிறது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல.
தெற்காசியாவில் உல்லாசப் பிரயாணத்துறை சிறுவர் பாலியலுக்கான ஒரு காந்தமாக விளங்குகிறது. இதனால் கடத்தல் நடவடிக்கைகளும் தீவிரமடைகின்றன. கடத்தப்படும் சிறுவர்கள் நாளடைவில் வேறு நாடுகளில் அடிமைத்தனமான தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இத்தகைய நாசகாரத்தனமான தொழிலுக்குள் சிறுவர்களை இழுப்பதற்கு அடிப்படைக்காரணிகளாக இருக்கும் வறுமை மற்றும் சமத்துவமின்மையை ஒழிப்பதற்கு உருப்படியான திட்டங்களை இப்பிராந்திய நாடுகளின் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டுவதாகவும் இல்லை.
இவ்வாறாக இடம் பெறும் நவீனயுக அடிமை வியாபாரத்தை ஒழித்துக் கட்டுவதற்கு அதற்கான அடிப்படைக் காரணிகளை அவசரமாகக் கையாளுவதற்கு அரசாங்கங்கள் மாத்திரம் நடவடிக்கைகளில் இறங்க வேண்டுமென்று வலியுறுத்திவிட்டு, ஏனைய தரப்பினர் வாளாவிருக்கமுடியாது. தனியார் துறையினர், அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள், மத அமைப்புகள், சிவில் சமூக இயக்கங்கள் என்று சகல தரப்பினரும் இக்கொடுமையை இல்லாதொழிக்க பாடுபட்டு உழைக்கவேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment