மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதிகளை புலிகள் சுட்டுக் கொன்றனர்!
தப்பிவந்த கடற்படைச் சிப்பாய் தகவல்!!
வன்னியில் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து, பல ‘கதைகள்’ கூறப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று, புலிகளின் பிடியிலிருந்த ஐந்து படையினர் மூலமாக, புலித்தலைமை சரணடைவதற்கு படைத்தரப்பிற்கு முதலில் தகவல் அனுப்பியதாகவும், அவாகள் திரும்பி வந்து படையினரின் சம்மதத்தைத் தெரிவித்த பின்னரே, பா.நடேசன், புலித்தேவன் தலைமையில் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறு பிரபாகரன், பொட்டம்மான், சூசை உட்பட முக்கிய தலைவர்கள் சரணடையச் சென்றதாகவும் கூறப்பட்டு வருகின்றது. இது எவ்வளவு தூரம் உண்மை என்ற கேள்வியை, மூன்று வருடங்கள் புலிகளின் பிடியிலிருந்து, இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது தப்பி வந்த ஐந்து படைவீரர்களில் ஒருவரான கடற்படைச் சிப்பாய் சாந்தகுமார, ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் எழுப்பியிருக்கிறது. அவரது கருத்துக்கள் கீழே தரப்படுகின்றன:
“ 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி நானும் ஏனைய இரு கடற்படை வீரர்களும் புலிகளால் கைது செய்யப்பட்டோம். ‘கிறீன் ஓசோன்’ என்ற கப்பலைப் புலிகள் தாக்க முயன்றபோது, அதைப் பாதுகாப்பதற்காக டோரா யுத்தக் கப்பலில் நாம் சென்றோம். இயந்திரக்கோளாறு காரணமாக இடைநடுவில் டோரா கப்பல் இயங்க மறுத்துவிட்டது. நாம் கடலுக்குள் பாய்ந்து நீந்தித் தப்பிச்செல்ல முயன்றபோது, புலிகளால் கைதுசெய்யப்பட்டோம். முதலில் நாம் கனகபுரத்தில் சிறை வைக்கப்பட்டோம். ஆரம்பத்தில் எமது சார்பாக செஞ்சிலுவைச் சங்கம் தலையிட்டது. விசாரணையின் பின்னர் நாம் விடுவிக்கப்படுவோம் என புலிகள் கூறினர். ஆனால் விடுவிக்கவில்லை.
வன்னி யுத்தம் ஆரம்பித்தபோது எம்மை ஜனகபுரத்திற்கு புலிகள் மாற்றினர். இறுதி நாட்களில் நாம் இடம்பெயர்ந்த மக்களோடு கொண்டு செல்லப்பட்டோம். எம்மை வாகனங்களில் ஏற்றி இடத்துக்கு இடம் மாற்றினர். இறுதிக் கட்டத்தில் எமது கைகளை நைலோன் கயிறுகளால் கட்டி, யுத்த சூன்ய வலயப்பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கு புலி இயக்கப் பொலிசாரின் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். அப்போது தப்பியோட முனைந்த பொதுமக்கள் பலர் புலிகளால் சுட்டுப்கொல்லப்பட்டதை நாம் கண்டோம்.
எம்மைப் போகவிடுமாறு எமக்குக் காவலாக இருந்த மூன்று புலி உறுப்பினர்களிடம் கேட்டோம். தங்களையும் எங்களுடன் கூட்டிச்செல்ல முடியுமானால், எங்களைப் போகவிடுவதாக எமக்கு காவலிற்கிருந்த புலிகள் கூறினார்கள். கடைசியாக வெளியேறிய மக்களுடன் நாமும் வந்தோம். எம்மோடு வந்த புலி இயக்க உறுப்பினர்கள் சயனைட் குப்பிகளையும், ஆயுதங்களையும் எறிந்துவிட்டு சாரம் அணிந்தபடி மக்களோடு மக்களாக வந்தார்கள். நாம் நடந்துவந்த வீதியெங்கும் சயனைட் குப்பிகள் வீசப்பட்டிருந்ததைக் கண்டோம். நாம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததும், அங்கிருந்த இராணுவ வீரரிடம் எம்மை யாரென அடையாளம் காட்டினோம். அவர் எங்களை இராணுவ அதிகாரியொருவரிடம் கையளித்தார்.
நாம் புலிகளின் சிறைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தபோது, மரணதண்டனைக் கைதிகளாக இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்களும் இருந்தனர். தமிழ் கைதிகள் வேறாகவும், எங்களை வேறாகவும் காவலில் வைத்தனர். பின்னர் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிந்தோம்”
இவ்வாறு அந்த கடற்படைச் சிப்பாய் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment