ஆசேயின் சமாதான அனுபவத்தில் இலங்கை ஆர்வம்
மோதல்த் தீர்வு மற்றும் சமாதானம் தொடர்பில் இந்தோனேசியாவின் ஆசே மாநிலத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள இலங்கை ஆர்வம் கொண்டிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஆசேயில் சமாதானம் எட்டப்பட்டமை தொடர்பாக நேரடியான விடயங்களை அறிந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தற்பொழுது இந்தோனேசியா சென்றுள்ளார்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேசியாவின் ஆசே மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்காக ஆசே போராளிகளுக்கும், இந்தோனேசிய அரசாங்கத்துக்குமிடையில் நடைபெற்றுவந்த மோதல்கள் முடிவுக்கு வந்ததுடன், அங்கு சமாதானம் ஏற்படுத்தப்பட்டது.
ஆசேக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு இலங்கை இனப்பிரச்சினையும் தீர்க்கப்படவேண்டுமென அரசியல் ஆர்வலர்களும், பல்வேறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவந்தன.
எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களிலும், பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டிவந்த இலங்கை அரசாங்கம் ஆசேயின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்குச் செல்ல விரும்பவில்லை.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இராணுவ ரீதியாக வெற்றிபெற்றிருக்கும் இலங்கை அரசாங்கம், ஆசேயில் ஏற்பட்ட சமாதான முயற்சிகளின் அனுபவத்தை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியுள்ளது.
இலங்கை இனப்பிரச்சினையை சமாதான ரீதியில் தீர்க்க விரும்புவதாக ஆசே சென்றிருக்கும் ஜனாதிபதியின் சகோதரரும், அவரின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment