புலிப் பூச்சாண்டி
நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் என்றார்கள் எந்த நாளை என்று இறுதி வரை அவர்களும் சொல்லவில்லை, அதை நம்பப் பண்ணியே அப்பாவி மக்களிடம் கிட்டத்தட்ட 11000 நாட்கள் சோறும், நீரும், இரத்தமும், சதையும், கள்ளும்,புல்லும் அவர் வீட்டுக் கதவு,ஜன்னல்,கூரைகளையும் பிடுங்கித் தின்று ஏப்பம் விட்டு இப்போது நீட்டப்பட்டிருக்கும் இராணுவத் துப்பாக்கிகள் முன், மூடப்பட்டிருக்கும் வேலி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
இனிமேலும் அவர்களிடம் போய் தமிழீழம் எனும் புலியின் பூச்சாண்டியைக் காட்ட முனைந்தால் அது மக்கள் சக்தியாலேயே முறியடுக்கப்படும் என்பது புலிப் பூச்சாண்டி வீரர்கள் நன்கறிந்த விடயம்.
எனவே, அந்த மக்கள் என்ன பாடு பட்டாலும் தற்போதைக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வெளிநாடு வாழ் மக்களுக்காக அந்தரத்தில் ஒரு தமிழீழம் காட்டி இவர்களிடம் இன்னும் என்னவெல்லாம் கறக்க முடியுமோ அதையெல்லாம் கறந்து விடலாம் என்று புலிகளின் சட்ட வல்லுனர்கள் திட்டம் போடுகிறார்கள்.
ஒன்றுக்கும் இல்லாமல் அழிந்து போன கடந்த மூன்று தசாப்தங்களில் சராசரியாக மூன்று தலைமுறை தெரு நாய்கள் கூட தம் வாழ்க்கையை இயற்கையாக வாழ்ந்து முடித்திருக்கும், ஆனால் பல தலைமுறையினரைக் கண்ட ஒரு மனித உயிர் தானும் பாதுகாக்கப்படவில்லை.
மக்களை பலி கொடுத்து விட்டு, அவர்களைக் காப்பாற்றுவதற்குப் போராடியதாக அவர்களும் அதே மக்களைப் பலியெடுத்துவிட்டு அவர்களை விடுவிப்பதற்காக இவர்களும் என்று மாறி மாறி வீரம் பேசிய புலியும், புலிப் பிரசன்னத்தை வைத்து அரசியல் பண்ணிய பேரினவாத அரசும் இரண்டும் ஒன்றாகவே முடிவுக்க வந்திருக்கிறது.
எனவே, மக்கள் புதியதொரு வாழ்க்கையை நோக்கி இப்போதுதான் மூச்சு விட ஆரம்பித்திருக்கிறார்கள்.
சுதந்திரத்தின் பின் வந்த காலத்தில் பேரினவாதம் தலை தூக்கியதால் ஆயுதம் ஏந்தும் தேவை வந்தது என்று இடையில் நாசமாய் போன 30 வருடங்களை மறைத்து விட்டு தத்துவம் பேசும் ருத்திரகுமார் ஆயுதத்தை தூக்கியதற்கு அந்தக் காலத்தை நியாயங் கற்பிப்பதானால், இனிமேல் ஆயுதம் தேவையில்லை என்று முடிவெடுத்த பின்னர் ஜனநாயக ரீதியாக அந்த மக்களுக்காகப் போராடுவதுதான் சிறந்த தெரிவென்று மக்களை அணி திரட்ட முன் வந்திருக்க வேண்டும்.
அன்றைய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை சிங்கள அரசாங்கம் என்பதைத் தவிர மிகப் பெரிய நடைமுறை வித்தியாசத்தை மக்கள் இனிமேல் தான் அறிந்துகொள்ளப் போகிறார்கள்.
அவ்வாறு அறிந்து கொள்ளும் போது அவர்கள் மனம் மாறி விடுவார்கள் என்கிற பயம் மேலோங்கியிருப்பதனால் இப்போதிருந்தே பழைய பூச்சாண்டிக்குப் புதிய முகம் கொடுத்து ஆனால் மக்கள் இல்லாத நாட்டுக்கு அரசாங்கம் அமைத்து, அதற்கு உலக அளவில் பாராளுமன்றம், சனாதிபதி, பிரதமர், சபாநாயகர், மந்திரிகள் என்று பூச்சாண்டி காட்டிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
இது என்றாவது ஒரு நாள் தமிழீழ அரசு அமையும், அந்தத் தமிழீழ அரசில் நானும் ஒரு பதவியில் இருப்பேன் என்று கனவு கொண்டிருந்த யாருக்கோ பிடித்திருக்கும் முழு வியாதி மாத்திரமல்ல, சொத்துப் பங்கீடு ஒரு முகப்படுத்துவதற்கான நடவடிக்கையுமாகும் என்பது ஓரளவுக்குப் பரகசியமான விடயமாகும்.
எந்தவொரு நாட்டின் அரசும், அரசாகச் செயற்பட வேண்டுமென்றால் முதலில் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் வருமானம் வர வேண்டும், அந்த வருமானத்தைக் கொண்டுவரக்கூடிய வளங்கள் இருக்க வேண்டும், அந்த வளங்களைப் பயன்படுத்தக்கூடிய மனிதர்கள் இருக்க வேண்டும், அவர்கள் உழைப்பு உருவாக வேண்டும், அந்த உழைப்பிலிருந்து மீண்டும் தன் கட்டுமானத்தைச் செயற்படுத்திக்கொள்ள அரசுக்கு வரி செலுத்தத் தேவைப்படும், அந்த வரி அதாவது மக்கள் பணத்திலிருந்தே மக்களுக்குத் தேவையான அரசையும் அத்தியாவசியத் தேவையையும் மீண்டும் மக்களுக்கு நிர்வகித்து வழங்க வேண்டும், அதிலிருந்து சமூகத்தை வழி நடத்தி உலகோடு ஒன்றிணைந்து மேம்பாடுகளைக் காண வேண்டும், அபிவிருத்தியைக் காண வேண்டும், தன் நிறைவைக் காண வேண்டும் என்று மிக அடிப்படையில் ஒவ்வொரு வறிய நாட்டிற்கும் நிலமிருக்கும் போதும் இருக்கும் சுமைகள் பல வகைப்படும்.
இப்படி எதுவுமே இல்லாமல், நிலமே இல்லாமல், மக்களே இல்லாமல் அரசாங்கம் அமைத்து அழகு பார்க்க நினைக்கும் இந்தப் பூச்சாண்டி வீரர்களைப் பொறுத்தவரை அவர்களின் நோக்கம் ஒரு இடத்தில் குவிக்கப்படும், அதாவது தமது அரசாங்கத்தைச் செயற்படுத்துவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுதல் என்பதாகும்.
இதற்கு பழைய புலிப் பூச்சாண்டி இலக்கணப்படி “நன்கொடை” என்று பெயர் சூட்டி ஆரம்பிப்பார்கள்.
மக்கள் அபிலாஷை என்பது என்ன? தமிழின ஒற்றுமை என்றால் என்ன? அவர்களை ஒன்றிணைப்பது எப்படி? கருத்து வேற்றுமைகளால் தம்மாலேயே துரோகிகளாக்கப்பட்ட அதே மக்களின் அபிப்பிராயங்கள் என்ன? அவர்கள் யாரும் இல்லாமல் , நாட்டில் அதாவது இலங்கை மண்ணில் இருக்கும் தமிழ் மக்களுக்கும் இல்லாமல் யாருக்காக அரசு தேவை? அந்த அரசு தேவை எனும் முடிவும், அதன் பிரதிநிதிகளும் யாரால் தேர்ந்ததெடுக்கப்படுவார்கள்? அப்படி மக்கள் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் மந்திரி சபைக்கு ஆள் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை பத்மநாதனுக்கு யார் வழங்கினார்கள்? ருத்திர குமாருக்கு யார் கொடுத்தார்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்காமல் இன்டர்நெட்டில் ஆரம்பத்திலும், பின்னர் பழைய பாசாங்கின் படி ஊர் அமைப்புகள், கோயில்கள், வானொலிகள், வியாபாரங்கள் என்று எதிர்காலத்தில் இவர்கள் கை வைக்கப்போகும் இடங்களிலும் அந்த நாள் கணக்குப் படி தீவிர புலி ஆதரவாளர்கள் எஞ்சியிருந்தாலன்றி வேறு வகையில் இந்த நிதிப் பசியுள்ள அரசுக்கு வரவு செலவுத் திட்டமே இருக்காது.
அப்படித்தான் இந்தப் பூச்சாண்டிக்கு யாரும் உதவுதானால் கூட, அந்த உதவி செய்பவர்கள் முன்னர் போன்று “ஒருங்கமைப்பாளர்” பதவிக்காக எல்லாம் செய்ய மாட்டார்கள், மாறாக “கவர்னர்”, “மாவட்டச் செயலாளர்”,”ஆட்சியாளர்”, “முதலமைச்சர்”, “பிரதம மந்திரி” என்று பெரிய பெரிய பதவிப் பெயர்களைத் தான் எதிர்பார்ப்பார்கள்.
பிரிகேடியர், மேஜர், கேணல், மாவீரன், மா மனிதன், தேசத்தின் குரல் என்றெல்லாம் வித்தியாசம் வித்தியாசமாக பட்டமளிப்பு செய்வதில் கில்லாடியான புலிப் பூச்சாண்டிகளுக்கு இதுவெல்லாம் ஒரு பிரச்சினையாகவே இருக்காது.
இவர்களுக்கெல்லாம் இப்படியான பதவிகளை வழங்கிவிட்டு, உலகமே எதிர்பார்க்காத வகையில் அகராதியிலிருந்து தேடிப்பிடித்து தலைமைப் பதவிகளுக்கு வேறு பெயர்களை சூட்டிக்கொள்வார்கள்.
பெயர் சூட்டல், பட்டமளித்தல் எல்லாம் எப்படிப் போனாலும் தலைமை நிலையில் உள்ளவர்கள் தமது அரசாங்கத்தை நடத்துவதற்கு “நன்கொடை” வந்து சேர்கிறதா என்பதில் மட்டும் மிகக் கவனமாக இருப்பார்கள்.
பிரபாகரன் இருக்கும் போதே பினாமிப் பெயர்களில் சொத்துக்களைக் குவித்துக் கொண்டவர்களுக்கு இப்போது மட்டும் இதுவெல்லாம் ஒரு பிரச்சினையாகுமா? தொண்டர்களை தொண்டை கிழிய கத்த விட்டு அவர்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து தமக்கு வருமானம் வந்தால் போதும் என்று தலைவர்கள் இன்னும் ஒரு பத்து வருடங்களுக்காவது தமது வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தாலும் இருப்பார்கள்.
அரசென்றால் ஜனநாயகம் வேண்டும், அது இலங்கை அரசிடம் இல்லையென்று தானே கொடி பிடித்தீர்கள்? சரி, நாடு கடந்த அளவிலாவது உங்களால் ஜனநாயகத்தை நிலை மாட்ட முடியுமா?
1. ஒவ்வொரு மனிதருக்கும் கருத்து ரீதியாக உங்களை ஆதரிக்கவும், எதிர்க்கவும் முழு உரிமை இருக்கிறது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?
2.உங்கள் அமைப்புக்கு, உங்களுக்கெல்லாம் தனிப்பட்ட ரீதியில் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதையெல்லாம தெள்ளத் தெளிவாக பட்டியலிட்டு விட்டு மக்களிடம் நிதி திரட்டச் செல்வீர்களா?
3. மக்களைப் பிரதிநிதித்துவம் செய்தல் என்பது மக்களால் விரும்பப்பட்டு அந்த மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும், எனவே அவ்வாறான வழி வகையைச் செய்து மக்களால் விரும்பப்படும் யாராக இருந்தாலும், அது புலி எதிர்ப்பாளராக இருந்தாலும் அவரைத் தலைவராக்குவீர்களா?
4.எந்த மக்களுக்காக இனியொரு நாடு கடந்த அரசு தேவையென்பதை கேட்டறியத்தான் நீங்கள் தவறினும், நாட்டில் இருக்கும் மக்களுக்காக அதுவும் உங்கள் அமைப்பாலேயே நாசமாக்கப்பட்ட அவர்கள் வாழ்வு மேம்பாட்டுக்காக உங்களால் என்ன செய்ய முடியும் என்று விபரிப்பீர்களா?
5. எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது, இந்த சூழ்நிலையிலும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஆகக்குறைந்தது அவர்களுக்காக ஒரு வார்த்தை தானும் கதைக்கும் தகுதியை அதுவும் புலியின் உறுப்பினர்களான நீங்கள் எந்த வகையில் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று விளக்கமளிப்பீர்களா?
6. நாட்டில், அதாவது இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் சரி வேண்டாம் வடக்கு வாழ் மக்கள், அதுவும் வேண்டாம் வன்னி வாழ் மக்களின் பிரதிநிதிகளாக 30 வருடத்தில் நீங்கள் செய்ததெல்லாம் போக இப்போது புலத்தில் வாழும் மக்களின் அவர்கள் வாழும் நாடுகளின் அரசோடு சட்டங்களோடு அவர்களுக்கு இருக்கும் தொடர்பினை உறவினை எந்த வகையில் நீங்கள் அறுவடை செய்யப்கோகிறீர்கள் என்பதை முன் கூட்டியே உங்களால் சொல்ல முடியுமா?
7. எல்லாம் வேண்டாம், நாம் குற்றஞ்சாட்டுவது போன்று நிதி திரட்டி வயிறு வளர்ப்பதற்காக நீங்கள் வரவில்லை, மக்களின் தொண்டர்களாகத்தான் வந்து வழி நடத்தப் பார்க்கிறீர்கள் என்றால் ஆகக்குறைந்தது, உங்கள் நாடு கடந்த திட்டத்திற்கு எந்தத் தமிழரும் ஒரு நயா பைசா தரத் தேவையில்லை என்று பகிரங்கமாக ஒரு அறிக்கை வெளியிடுவீர்களா?
8. வெளியில் தலை காட்ட முடியாத பத்மநாதன் மற்றும் இருப்பார்களோ இல்லையோ என்று தெரியாத புதுப்புது மனிதர்களின் பெயர்களை முன் வைத்து மடையன் பிரபாகரனுக்குப் பின்னாலான புதிய புத்திசாலிப் புலிகள் என்று தானே உங்களை சொல்கிறீர்கள், அப்படித்தான் ஆனாலும் கூட எந்தக் காலத்திலும் நீங்கள் யாரும் மக்கள் முன் வரப்போவதில்லை ? வெறும் அறிக்கைகள் இன்டர்நெட் பிரச்சாரங்கள் தான் நடக்கப் போகிறது, அதற்கு தமிழ்த் தேசிய உணர்வுள்ள உங்கள் ஒவ்வொருவரின் நேரம் மட்டுமே பிரதான முதலீடு, நாட்டு நிதி, அரச நிதி, இறுதிப் போர் நிதி, வளர்ச்சி நிதியென்றெல்லாம் வியாபாரிகளை, கடுமையான உழைப்பாளிகளை, மாணவர்களையெல்லாம் கசக்கிப் பிழியும் அவசியம் இல்லை தானே? அவர்கள் உணர்வு மேலாங்கி ஒன்றிணைந்தால் அதையே முதலீடாகப் பயன்படுத்திக்கொண்டாலும், அவர்கள் பணம் தான் உங்கள் நோக்கம் என்பதை மறுத்துரைத்து, அதையே செயற்படுத்தவும் உங்களால் முடியுமா?
தமிழினத்தில் புத்திசாலிகள் என்றால் அது நீங்கள் தான், மக்களின் பிரதிநிதிகள் என்றால் அது புலி எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் என்று நீங்களாகவே கையில் எடுத்திருக்கும் அதிகாரத்தை காகித அளவில் உபயோகித்து இரண்டாந்தர மூன்றாந்தர அரசியல் உலகத்திற்குள் உங்களால் அதுவும் ஒரு சில காலத்துக்கு நுழைய முடியுமே தவிர தொலை தூரம் பயணிக்க முடியாது, அப்படிப் பயணிப்பதாயின் புலி எனும் போர்வை இருக்கவே இருக்கக்கூடாது எனும் உண்மையை மற்றவர்களை விட நீங்கள் தான் அறிவீர்கள், அப்படியிருந்தும் இந்தப் போர்வைக்குள் இருந்து “எதையோ” சாதிக்க எஞ்சியிருக்கும் உங்கள் வங்குரோத்துக் கொள்கை வாதிகள் எதையாவது திட்டமிடுகிறீர்கள் என்றால் அது முழுக்க முழுக்க உங்கள் நலன் சார்ந்ததாக இருக்குமேயொழிய மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கப் போவதில்லை என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம். அதை மறைக்க எந்த வானொலியில் புற நிலை அரசுக்கும் நாடு கடந்த அரசுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று நீங்கள் செவ்விகளைத் திட்டமிட்டு வழங்கி அதைப் பெருமையாகப் பேசி வந்தாலும்,ஈழ மக்களுக்கு உண்மையில் ஒரு தமிழீழம் வேண்டுமென்றால் அது நாடு கடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை நீங்கள் விளக்கத் தவறுவது ஏன்? அதன் பின் கிடப்பில் கிடக்கும் நீங்களே உருவாக்கிக் கொடுத்த அழிவினை உணர்ந்து விட்டு விலக மறுப்பதேன்?
தலைமையையும், தலைவிதியையும் மக்களுக்குத் திணித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கும் புலிப் பூச்சாண்டிகள், ஆகக் குறைந்தது உலக அரசியலைப் புரிந்து கொள்ள மறுப்பதும், தமது ஆதரவாளர்களாக இப்போதும் இருப்பவர்கள் மற்றும் எதிர்காலத்தில் திணித்துப் பணித்துப் பெற்றுக்கொள்ளக் கூடியர்வகளிடமும் உண்மையை விளங்கிக் கொள்ளும் “அறிவு” மாத்திரம் இருக்கக்கூடாது என்பதற்காக அவர்களுக்காகவே மிகக் கச்சிதமாக சொற்களைத் தேடிப்பிடித்து விளக்கமளித்து வருகிறார்கள்.
இப்போதும் கூட பதவி,பணம்,அதிகாரம் என்கிற வட்டத்திற்குள் இருந்து கொண்டு முன்னால் சென்றோரையும் பின்னால் வருவோரையும் தூற்றிக்கொண்டு இன் நாளில் இருப்போர் தான் உத்தமர் என்று புதுப் பூச்சாண்டியுடன் கிளம்பினாலும் எப்போதும் இவர்கள் ஒரு விடயத்தில் மிக அவதானமாக இருப்பார்கள்.
அதுதான், தம்மைத் தவிர தமிழினத்தில் வேறு புத்திசாலிகளே இல்லையென்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி அதன் மூலம் சித்தார்ந்த அடிமைகளை சமூகத்தில் உருவாக்குவது.
இன்றளவும் புலியை நம்பிய தீவிர பக்தர்களுக்கு இருக்கும் முதற் பிரச்சினையே தம் சித்தார்ந்த சாமியார்கள் வித்தைக்காரர்கள் தம்மையெல்லாம் இப்படி உசுப்பேத்தி விட்டு கூண்டோடு அழிந்து போன கதையை நம்புவதா இல்லையா என்பதுதான்.
அந்த அளவுக்கு மந்தைகளாக அவர்களை வைத்துப் பரிபாலித்த மகா கெட்டிக்காரர்கள் அல்லவா இவர்கள்? நாட்டில் இருந்தவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் கூண்டோடு கைலாசம் போய் விட்டார்கள், வெளியிலிருப்பவர்களைக் கையாண்டவர்கள் அத்தனை பேரும் தான் உயிருடன் இருக்கிறார்களே? எனவே தம் பழைய சித்தார்ந்தத்தைப் புதிய வடிவில் வெளியிட்டு மீண்டும் ஒரு முட்டாள்ச் சமூகத்தை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, தம் விரல் யாருக்கெதிராக நீண்டாலும் அவர் எதிரி, அவர்கள் கைகள் யாருடைய தோள்களில் விழுந்தாலும் அவர்கள் தோழர்கள் என்று தமக்குப் பின்னால் “ஆமாம் சாமி” போடும் ஒரு கூட்டத்தை எப்போதும் வைத்திருந்தாலேயே அவர்கள் “பிழைப்பு” தங்கு தடையின்றிச் செல்லும்.
எனவே அவர்களும் தம் பூச்சாண்டியைத் தொடர்கிறார்கள், 30 வருடங்களாகப் பழகிப்போன இந்த வருமான வழியை அவ்வளவு இலகுவாக விட்டு விட மனம் வருமா? சாதாரணமாக ஒரு நல்ல வேலையில் இரண்டு மாதங்கள் இருந்தாலே அந்த வேலையை விட மனம் வராது, இவர்களும் உட்கார்ந்த இடத்தில் இருந்து முப்பது வருடங்களாக ஏப்பம் விட்டுப் பழகி விட்டார்கள், எப்படி விட முடியும்?
மக்களுக்காகப் போராடும் நோக்கம் உள்ள யாரிடமும், எந்த அமைப்பிடமும் முதலில் சித்தத் தெளிவு இருக்கும். எது நடக்கும் எது நடக்காது? எது சாத்தியம் எது சாத்தியமாகாது என்பது தொடர்பான நல்ல விளக்கம் இருக்கும். உரிமைகள் என்றால் என்ன என்கிற விளக்கம் இல்லாமல் உரிமைப்போராட்டமும், உணர்வு எனும் பெயரில் பிரிவினை வாதமும் எந்த அளவு மக்கள் மேம்பாட்டுக்குத் தேவை என்பது தொடர்பான தொலை நோக்குடனான திட்டங்கள் இருக்கும்.
இது எதுவுமே இல்லாமல், இதிலிருந்து ஆரம்பிப்போம் இதிலிருந்து ஆரம்பிப்போம் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் எதில் சென்று முடிவார்கள் என்பதற்கு உலக வரலாற்றிலேயே தலை சிறந்த உதாரணம் பிரபாகரனின் கேவலமான முடிவும் அவர் சார்ந்த இயக்கத்தின் கோழைத்தனமாக அழிவுமாகும்.
விழித்துக்கொள்வதும் தம் வழியைத் தம் அறிவு கொண்டு தெரிந்தெடுப்பதும் அவரவர் உரிமை மாத்திரமல்ல இன்றைய நிலையில் இலங்கைத் தமிழர்களின் கடமையுமாகும் !
அறிவுடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment