மைக்கல் ஜாக்சனின் மரணத்தில் புதிய தகவல் - அவரின் டாக்டர் மீதான சந்தேகம் அதிகரிப்பு
மைக்கல் ஜாக்சனின் திடீர் மரணத்திற்கு அவரின் தனிப்பட்ட டாக்டர் கன்ராட் முரே கொடுத்த மயக்க மருந்தே காரணம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்சின் ஹோல்ம்பி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த போது, கடந்த மாதம் 25ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். அப்போது அவருடன் இருந்தவர் அவரின் தனிப்பட்ட டாக்டர் கன்ராட் முர் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர்.
ஜாக்சன் மரணம் அடைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், “புரபோபல்’ அல்லது “டிப்ரீவன்’ என அழைக்கப்படும் மயக்கம் தரும் மருந்தை அவருக்கு கொடுத்துள்ளார். அதுவே ஜாக்சனின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது என்றும் புலனாய்வுத் துறையினர் கூறியுள்ளனர். ஜாக்சனின் மரணம் தொடர்பாக பல வதந்திகள் கிளப்பி விடப்படுகின்றன. அவற்றுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. ஜாக்சனின் உயிரை பறிக்கக் கூடிய மருந்துகள் எதையும் என் கட்சிக்காரர் பரிந்துரை செய்யவில்லை என இதற்கு பதிலளிக்கும் டாக்டர் முரேயின் வக்கீல் எட் செர்னோப் கூறியிருக்கின்றார்.
ஜாக்சன் மரணமடைந்த போது, டாக்டர் முரேதான் அங்கு இருந்துள்ளார். அதனால், அவரின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. தனக்கு எதிராக பரப்பப்படும் செய்திகளால் டாக்டர் முரே வேதனை அடைந்துள்ளார். 24 மணி நேரமும் பாதுகாவலருடன் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரால் தன் டாக்டர் பணியை தொடர முடியவில்லை. எங்கு சென்றாலும், அவருக்கு பல வகையிலும் தொந்தரவுகள் உருவாவதால், அவரால் நிம்மதியாக டாக்டர் பணியாற்ற முடியவில்லை என்று எட் செர்னோப் மேலும் கூறியுள்ளார்.
ஜாக்சனின் மரணம் தொடர்பாக டாக்டர் முரேயிடம், போலீசார் இதுவரை இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். மூன்றாவது விசாரணை கடந்த 24ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஹஸ்டனில் உள்ள அவரின் மருத்துவமனை அலுவலகம் மற்றும் மருந்துகளை தேக்கி வைக்கும் பிரிவை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment