வர்ஷா... தினுஷ்கா... மதுனுஸ்கா...?
கிழக்கு மாகாணத்தில் தற்போது சிறுமிகளுக்கு பொல்லாத காலம் போலும். சிறுமிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்ற துரதிர்ஷ்டவசமான போக்கு ஒன்றை காணக்கூடியதாக இருக்கின்றது. அம்பாறை மத்திய முகாம் பகுதியில் நான்காம் கொலனியில் 12 வயதான பாடசாலை மாணவி ஒருத்தி கடந்த புதன்கிழமை காடையன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட மோகன் மதுனுஸ்கா என்ற அந்த சிறுமியின் சடலம் மதகொன்றின் கீழிருந்து மீட்கப்பட்டது. இச்சம்பவம் அம்பாறைப் பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் திருகோணமலை சென்.மேறீஸ் கல்லூரி முதலாம் வகுப்பு மாணவி வர்ஷா ஜூட் றெஜி கடத்திச் செல்லப்பட்டு பெற்றோரிடம் இருந்து பெரும் தொகைப் பணத்தை கப்பமாகக் கோரிய கும்பலினால் கொலைசெய்யப்பட்டிருந்தாள். அவளது சடலம் இரு நாட்கள் கழித்து வீதியோரத்தில் உரப்பையொன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது. இருமாதங்களுக்கு முன்னர் தனது பாடசாலை வாழ்வை ஆரம்பித்திருந்த பாலகி வர்ஷாவின் வாழ்வு குருத்திலேயே கருக்கப்பட்ட படுபாதகச் செயல் திருகோணமலை பகுதியில் மாத்திரமல்ல, நாடுபூராவும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தைத் தோற்றுவித்திருந்தது. தங்களது பிள்ளைச் செல்வங்களை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு அவர்கள் வீடு திரும்பும் வரை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் தாய், தந்தையர் பணத்துக்காக பழிபாவத்துக்கு அஞ்சாத பாதகர்களிடமிருந்து தங்கள் பிள்ளைகளுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று ஏங்கத் தொடங்கினார்கள். இதேபோன்றே கடந்த மே மாத ஆரம்பத்தில் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் இருந்து காணாமல் போன 8 வயதான சதீஷ்குமார் தினுஷ்கா என்ற மாணவி சுட்டுக்கொலை செய்யப்பட்டாள். கடத்தப்பட்டு நான்கு நாட்கள் கழித்து அவளது சடலம் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது. தினுஷ்காவின் குடும்பத்தவர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைக் கப்பமாகக் கோரும் முயற்சியாகவே அவள் கடத்தப்பட்டதாகப் பொலிஸார் சந்தேகித்தனர்.
திருகோணமலையில் வர்ஷாவையும் மட்டக்களப்பில் தினுஷ்காவையும் கடத்திச் சென்று கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த சகலருமே தப்பியோட முயற்சித்த வேளையில் சுட்டுக்கொலைசெய்யப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் என்பதை நாமெல்லோரும் அறிவோம். மத்திய முகாமில் மதுனுஸ்காவை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்பட்ட காடையனை அந்த ஊர் மக்களே தேடிப்பிடித்து அடித்துக் கொலை செய்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சின்னஞ் சிறுசிசுகளைச் சீரழித்து கொலை செய்யக்கூடிய அளவுக்கு காட்டுமிராண்டித்தனமான குணாதிசயம் கொண்ட பாதகர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தி உச்சபட்சத் தண்டனை கிடைக்கச் செய்தாலும் கூட மனம் ஆறுதலடைந்திருக்காது. திருகோணமலை, மட்டக்களப்பு சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள் என்ற போதிலும் , அந்தக் கடத்தல்கள், கொலைகளின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய வேறு பிரகிருதிகள் பற்றிய விசாரணைகள் பற்றி பின்னர் தகவல் ஏதுமில்லை.
கிழக்கில் ஐந்துமாத இடைவெளியில் அடுத்தடுத்து இடம்பெற்றிருக்கும் சிறுமிகள் கடத்தல், கொலைச் சம்பவங்களுக்குப் பிறகு பெற்றோர்கள் இன்று பெரும் கலக்கத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பாடசாலைக்குச் சென்ற தங்கள் பிள்ளைச் செல்வங்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் நிம்மதியின்றித் தவிக்க வேண்டியிருக்கிறது. நீண்டகாலப் போரின் விளைவாக மனித வாழ்வின் கௌரவம் மலினப்பட்டுப்போயிருந்த காலகட்டத்தினூடாக வாழ்ந்துவந்த மக்கள் போரின் முடிவுக்குப் பிறகு கொடூரமயமற்ற சமுதாயத்தில் வாழ்வதற்கான வாய்ப்பு ஒன்றுக்காகக் காத்திருக்கிறார்கள். மனித உயிர் எந்த யோசனையுமின்றிச் செலவிடத்தக்கதாக மாறியிருந்த விபரீதமான காலகட்டத்துக்கு முடிவு ஏற்பட வேண்டும் என்பதே மக்களின் அங்கலாய்ப்பாக இருக்கிறது. அப்பாவிப் பாலகிகளுக்கு கொடுமை செய்து உயிரைப் போக்கடிக்கிற அளவுக்கு மிலேச்சத்தனமான உணர்வை வளர்த்துக் கொண்டிருக்கும் பிரகிருதிகளை சமுதாயத்தில் இருந்து களையெடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வர்ஷா... தினுஷ்கா... மதுனுஸ்கா... இந்த வரிசையில் இனிமேல் எந்தச் சிறுமியும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment