பிரபாகரன் இடத்தைப் பிடிக்க யாருடனும் சண்டையிடவில்லை
தமிழ் மக்கள் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காண்பதற்கே நாடு கடந்த “தமிழீழ அரசு - பிரபாகரன் விட்டுச் சென்ற கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் மட்டும் தான ஈடுபட்டிருப்பதாக வழக்கறிஞர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல் ஆலோசகருமான விசுவநாதன் உருத்திரகுமாரன் ஜுனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் விபரம் வருமாறு:-
”நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவியும் அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிகவும் அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழர்கள்தான் இந்த இயக்கத்தின் தூண். ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல.
இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்த் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடினார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது. கயமைத்தனமாக அடியோடு அழிக்க முனைந்தது. வேறு வழியின்றி ஆயுதம் எடுத்தோம். அதன் பின்னரே வெளியுலகுக்கு தமிழினத்தின் துன்பங்கள் தெரியவந்தன. ‘போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!’ என்று சுதுமலையில் எங்கள் தலைவர் கூறினார்.
தமிழர்களின் தேசியப் பிரச்னைக்கு சுயநிர்ணய அடிப்படையில் ஒரு தீர்வு காண்பதற்கு இது அமைக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு சமபல நிலை அவசியம். அரசுக்கு சமமாக இருந்தோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இப்போது அந்த இடைவெளியை நிரப்ப மிகவும் அவசியம். புறநிலை அரசுக்கும் [Government in excile] நாடு கடந்த அரசுக்கும் [Transnational Government] பல ஒற்றுமைகள் இருந்தாலும், சில வேறுபாடுகள் உள்ளன.
ஒரு நாட்டில் அரசு அமைக்க இயலாதபோதே புறநிலை அரசு பிறக்கும். தலாய்லாமா, பாலஸ்தீனர்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்றவை இந்த வகை. நாங்களோ, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்க இதைக் கையில் எடுத்திருக்கிறோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு இன்னமும் அமைக்கவில்லை.
அதை அமைப்பதற்காகவே செயற்குழுவை ஏற்படுத்தியுள்ளோம். பலர் இந்தியாவில் இருந்து தொடர்புகொண்டு, ‘உலகத் தமிழர் வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தமாயிற்றே. எங்களை ஏன் சேர்க்கவில்லை?’ எனக் கேட்கின்றனர். எங்கள் அறிக்கையை இராஜதந்திரிகள், தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்துகளையும் கேட்டிருக்கிறோம். அடுத்தது, ஒவ்வொரு நாடுகளிலும் செயற்குழுவினை அமைக்கவிருக்கிறோம். கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பயிற்சிப் பட்டறையும் நடத்தி வருகிறோம்.
தமிழ் ஈழப் பிரச்னையில், குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம். இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக்கிறோம்.
நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல.தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று இலட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்.
”பிரபாகரன் இடத்துக்கு நான் வர முயற்சிக்கிறேன் என்பது சரியல்ல. அவர் இடத்தை இட்டு நிரப்புவதற்கு யாருமில்லை. அதற்கான முயற்சியை நான் மட்டுமல்ல, யாருமே எடுக்க மாட்டார்கள். அவருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். ஈழ தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment