மறுபக்கம்
""கண்டவர் விண்படலர், விண்டவர் கண்படலர்'
என்பார்கள். அது கடவுளைப் பற்றியது என்றாலும், நான் இன்று ஊகிக்கின்ற பல்வேறு விடயங்களைக் கருத்திற் கொள்ளும்போது அது பல்வேறு விடயங்கட்கும் பொருந்தி வருவதாகவே தோன்றுகிறது. அண்மைக் கால நிகழ்வுகள் பலவற்றைக் கண்டவர்கள் வாயைத் திறக்க இயலாமல் உள்ளவர் பலரது வாகள் நிரந்தரமாகவே அடைக்கப்பட்டுவிட்டன.
மனிதர்கள் வெறும் புள்ளிவிவரங்களாகி விடுகிற ஒரு காலத்தில் வாழ்கிறோம். அதிலும் பெரிய ஒரு அவலம் புள்ளி விவரங்களும் நம்பகமானவை இல்லை என்பதுதான். எனவே பத்திரிகைகள் ஊகங்களையும் எதிர்பார்ப்பு களையும் வதந்திகளையும் அப்பட்டமான பொய்களையும் வைத்தே தமது தொழிலைத் தொடருகின்றன. ஒவ்வொரு பத்திரிகையாளரும் அடுத்த நாள் விடியுமா என்ற நிச்சமின்மையுடன்தான் தூங்கச் செல்கிறார் என்று நினைக்கும் விதமாகவே ஊடகங்களதும் ஊடகவியலாளர்களதும் நிலை உள்ளது. போர் முடிந்து விட்டது. நாடு பயங்கரவாத மிரட்டலுக்கு உட்படாத ஒரு சூழ்நிலையில் ""ஊடகப் பயங்கரவாதிகள்' என்று எவராலும் நாட்கள் பாதுகாப்பிற்கு மிரட்டல் இல்லை. தடுப்பு மறியலில் உள்ள ஊடகவியலாளர்கள் முறையான விசாரணைகட்கு உட்படுத்தப்பட்டுக் குற்றச் சாட்டுக்கள் இல்லாத போது விடுவிக்கப்பட வேண்டிய நேரம் இது. குற்றச்சாட்டுகள் இருந்தால் அவை துரிதமாக நீதிமன்ற விசாரணைக்குட்பட வேண்டும்.
அண்மையில் ஒரு ஊடகவியலாளர் குற்றப்புலனாவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் யூ.என்.பி. ஆதரவாளர் என்பது போக, ஒரு சோதிடருங்கூட, விரைவில் இந்த நாடு ஒரு பெரிய மாற்றத்தை எதில்நோக்கும் என்று அவர் ஆருடஞ் சொன்னதாக ஒரு செய்தி இருந்தது. பிரபாகரனுக்குச் சூனியஞ் செய்து அவரைக் கொன்றதாக அவர் உரிமை கோரியதாகவும் ஒரு செய்தி இருந்தது. இவற்றில் எதற்காக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் அநேகமாக வான்வெளியிலுள்ள கிரகங்களுடன் கலந்தாலோசித்துத்தான் தனது பணியைச் செய்திருப்பார். சூனியஞ் செய்வதற்கு ஏவற் பிசாசுகளும் துர்த்தேவதைகளும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும். பெரிய வெள்ளை விண்கலம் ஒன்றை வானவெளிக்கு அனுப்பிக் குழப்படி செய்கிற கிரகங்களையும் பிசாசுகளையும் துர்த்தேவதைகளையும் பிடித்துக் கொண்டு வர முடியாதா?
சோதிடர் மாரைப் பற்றிச் சொல்கிற போது கம்போடியாவில் 1914 ஆம் ஆண்டு நடந்த ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உதவியுடன் கம்போடியாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது, அதன் போது நாட்டின் பிரதமராயிருந்த இளவரசர் நரடொம் சிஹான் வெளிநாட்டிலிருந் தார். சிஹானுத் தலைமையிலான மாற்று அரசாங் கம் ஒன்று நிறு வப்பட்டது. க்மெர் ரூஜ் எனும் கம்யூனிஸ்ற் புரட்சிவாதிகளும் சிஹானுக்கின் ஆதரவாளர்களும் ராணுவ ஆட்சியை விரும்பாதவர்களும் நாட்டின் ஒரு சிறு பகுதியில் மாற்று அரசாங்கத்தைப் பிரகடனஞ் செய்த போதும் ஆட்சித் தலைவர் சிஷானுக் வெஜிங் நகரிலேயே போரின் முடிவுவரை தங்கியிருந்தார். சீனா உட்பட்ட சில நாடுகள் சிஹானுக் அரசாங்கத்தையே அங்கீகரித்தன.
நாட்டின் அரச அதிகாரம் இராணுவத் தளபதி லொன் நொல்லின் கீழ் இருந்தாலும் அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் ஒருநாட்டைத் தொடர்ந்து ஆட்சியில் நிலைக்க முடியாத ஒரு ஆட்சியாகவே ஆட்சி அந்த வேகமாக வலுவிழந்தது. கிராமங்களில் மாற்று அரசாங்கத்திற்கு ஆதரவு வலுப்பட்டு வந்த சூழ்நிலையில் அமெரிக்க விமானங்கள் மேற்கொண்ட குண்டு வீச்சின் விளைவாகச் கிராமப் பொருளாதாரம் முற்றாகவே சீர்குலைந்தது. அதன் விளைவாக 1974 அளவில் நாட்டின் அறுபது லட்சம் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தலைநகரமான நொம் பெண்ணிலும் அதை அண்டிய பகுதிகளிலும் வாழ நேர்ந்தது. மேலதிக உணவு உற்பத்தி செது வந்த நாடான கம்போடியா உணவு இறக்குமதி செகிற நாடாக மாறியது. இந்தச் சீரழிவைப் பற்றி இப்போது எந்த ஊடக நிறுவனமுமே பேசுவதில்லை. கம்போடியாவில் நடந்த பெருமளவிலான உயிரிழப்புக்களுக்கான பழியை முற்றாகக் க்மெர் ரூஜ் மீது சுமத்துவது எல்லாருக்கும் வசதியான ஒன்றாகி விட்டது.
எவ்வாறாயினும் 1974 அளவில் கம்போடியாவில் லொன்தொல் ஆட்சி தடுமாறத் தொடங்கிவிட்டது. தென் வியட்னாமிலும் வியட்கொங் எனப்பட்ட தேசிய விடுதலை இயக்கம், சைகொன் (இப்போது ஹோ சி மின் நகரம்) தவிர்ந்த அனைத்துப் பகுதிகளிலும் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டது. எனவே இரண்டு நாடுகளிலும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் நீண்ட காலத்திற்கு நின்றுபிடிக்க இயலாது என்பதும் அமெரிக்க ஆதரவுடன் நிலைத்திருந்த ஆட்சிகள் கவிழும் என்பதும் உறுதியாகிவிட்டன.
இந்த நிலைமையிற், கம்போடியாவின் சோதிடர்கள் விரைவில் சிஹானுக் நாட்டுக்குத் திரும்பி முழு நாட்டிலும் அதிகாரத்துக்கு வருவார் என்று ஆரூடஞ் செய்யத் தொடங்கினர். செதிகளை நம்ப இயலாதபோது மக்கள் வதந்திகளை மட்டுமன்றிச் சோதிடர்களையும் அதிகம் நம்புகிறார்கள் என்பதாலோ என்னவோ, மக்கள் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு வலுப்படத் தொடங்கியது. உண்மையில் லொன்தொல் ஆட்சி பெரிதும் வெறுக்கப்பட்டது என்பதில் மக்களிடையே ஐயமிருக்கவில்லை.
லொன் தொல் ஆட்சி நாட்டிலிருந்த சோதிடர்கள் அனைவரையுஞ் சிறையிலடைத்தது. அதன் மூலம் அது சோதிடர்களைப் பற்றி அஞ்சியது என்பது தெளிவானது. சோதிடத்தினரோ சோதிடர்களதோ உதவியில்லாமலே லொன் கொல் ஆட்சியும் அதன் அமெரிக்க எசமானர்களும் 1975 ஏப்ரல் மாதம் விரட்டியடிக்கப்பட்டனர்.
பல மூன்றாமுலக நாடுகளில், முக்கியமாக ஆசியாவின் தென், தென்கிழக்குப் பகுதிகளிற் சோதிடம் பற்றிய நம்பிக்கை வலுவாகவே உள்ளது. பலரும் சோதிடத்தை நம்புகிறார்கள் என்பதை விடத் தங்களது நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் தமக்குள் உறு திப்படுத்திக் கொள்வ தற்காகச் சோதிடத்தை நாடுகிறார்கள். அது எந்தவிதமான சோதி டமாகவும் இருக்கலாம். ஒரு சமூகத்தில் அன் றாட வாழ்க்கை நிச் சயமற்றதாகவும் துன்பங்கள் பெருகிய வாறும் உள்ளபோது பலர் தம்முடைய முயற்சியில் நம்பிக்கை இழக்கின்றனர். கூட்டான சமூகச் செயற்பாடும் நீதிக்காக ஒரு கூட்டு முயற்சியும் இல்லாதபோது, வேறு பற்றுக்கோடுகள் தேவைப்படுகின்றன. மதஞ்சார்ந்த மூட நம்பிக்கைகளுஞ் சகுனம் பார்த்தலுஞ் சோதிடமும் அவர்கட்கு ஆதரவளிக்கின்றன. உண்மையில் அவை அவர்கள் நம்ப விரும்புகின்ற பொய்களை உண்மையென்று உறுதிப்படுத்த உதவுகின்றன.
இந்திய அரசியல்வாதிகளிற் சோதிடத்தை நிராகரித்தோரில் நேரு முக்கியமானவர். தமிழகத்தின் காமராஜர் குறிப்பிடத்தக்க ஒருவர். திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் அண்ணா துரைக்குப் பிறகு பகுத்தறிவுச் சிந்தனை மழுங்கிப் போவிட்டது. கருணாநிதியின் மஞ்சள்துண்டும் ஜெயலலிதா நடத்திவந்துள்ள யாகங்களும் ஈ.வே.ராவின் சுயமரியாதை இயக்கம் எங்கே கொண்டுபோச் சேர்க்கப்பட்டுள்ளது என்று சொல்லும். நாத்திகரான நேருவின் மகள் இந்திரா காந்தி, சந்திர சுவாமி என்கிற கபட சந்நியாசியால் வழிநடத்தப்பட்டார். இன்றும் இந்தியாவில் மூடநம்பிக்கை பெருகி வருகின்றனவே ஒழிய குறையவில்லை.
இலங்கையிற், சோதிடத்தில் நம்பிக்கை வைத்து அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், பண்டாரநாயக்கவின் சாவுக்குப் பின்பு இந்தப் போக்கு வலுப்பட்டுள்ளது. ஆட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் தமது வீடுகளிற் தங்கியிருப்பதையும் நாட்டில் இருப்பதையும் தவிர்த்து வெளியூரிலும் வெளிநாடுகளிலும் கணிசமான அளவு காலத்தைச் செலவிடுவதற்குச் சோதிடர்களது ஆலோசனைகள் காரணமாக இருந்துள்ளன.
இலங்கையின் இரண்டு பிரதான அரசியற் கட்சிகட்கும் சோதிடர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் யாரோ சோதிடர் ஆலோசனை கூறுகிறார். அதைவிட மக்களை ஏமாற்றுவதற்கென்றே ஒரு சோதிட நிறுவனத்தைக் கட்சிகள் வைத்திருக்கின்றன. இந்தச் சோதிட ஏடுகள் தேர்தற் காலங்களிலும் அரசியல் நெருக்கங்களின் போதும் தீவிரமாகச் செயற்படும். யார் வெல்லக்கூடும் என்ற எண்ணம் மக்கள் வாக்களிக்கும் முறையை ஓரளவுக்கேனும் பாதிக்கிறது. கருத்துக் கணிப்புகள் போன்று, ஆரூடங்களும் அரசியல் நோக்கங்களுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான் உண்மை. பல கருத்துக் கணிப்புகள் பொக்கக் காரணம். அவை குறிப்பிட்ட நோக்கங்கட்காகவே மேற்கொள்ளப்படுகின்றமைதான். சோதிடம் எந்தவிதமான உண்மை அடிப்படையுமற்ற ஒரு புனைவு.
அரசாங்கம் ஏன் ஒரு சோதிடரை விசாரணைக்குட்படுத்துகிறது? அரசாங்கம் ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தப் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. சட்டப்படியும் சட்டத்திற்கு வெளியிலும் எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் பத்திரிகைகளையும் முடக்கிய பிறகு மக்கள் சோதிடர்களைத் தான் நம்புவார்கள் என்று எவரேனும் அஞ்சுகிறார்களா?
கோகர்ணன்
0 விமர்சனங்கள்:
Post a Comment